கவிதைகள்

ஆபத்து எமைநோக்கி ஆலவட்டம் விரிக்கிறதே!… கவிஞர். மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 மதுகுடித்தல் புகைபிடித்தல்  இப்போது அவசியமா  
         மனம்முழுக்க கொரனோவை எண்ணியெண்ணி துடிக்கின்றோம்
         மதுகுடித்தால் கொரனோவை எதிர்த்திடலாம் எனுமெண்ணம்
         மரணவாசல் கூட்டிச்செல்ல வழியாகும் எனவுணர்வோம்  ! 
 
         அரிசியை வாங்கிடுவோம் பருப்பையும் வாங்கிடுவோம் 
         அவசியமாய் தேவைப்படும் அனைத்தையுமே வாங்கிடுவோம் 
         அபின்கஞ்சா இப்போது அவசியமா அறிவிலிகாள்
         ஆபத்து எமைநோக்கி ஆலவட்டம் விரிக்கிறதே  !
 
         அவசரமாய் செய்திகளை அனுப்புகின்ற  வேளைதனில் 
         அலட்சியமாய் செய்திகளை அனுப்பிவைத்தல் அவசியமா 
         அரக்கனென கொரனோவோ அழிக்கவரும் வேளையிலே 
         அசிங்கமாய் கருத்துப்பட அனுப்பிநிற்றல் அவசியமா. ! 
 
          கேலிகிண்டல்  செய்கின்றார் கிறுக்குத்தனம்  உகந்ததல்ல
          கிலிபிடித்து மக்களெலாம் கொரனோவால் மருளுகிறார்
          ஆறுதலாய் தேறுதலாய் அவதிநிலை தனையுணர்ந்து 
          அறிவுடனே செயற்படலே ஆத்மார்த்த கடமையன்றோ  ! 
 
         மதவாதம் இனவாதம் பேசுவதை விடவேண்டும் 
         மனிதமனம் எல்லாமே புனிதவுணர் வெழவேண்டும் 
         துன்பமுறும் யாவரதும் துயர்துடைக்க நினைப்பதுவே
         நன்மைதரும் எனவெண்ணி  நாம்செயலாய்  ஆற்றிடுவோம்  ! 
 
         கொரனோவை அரசியலாய் ஆக்கிவிடல்  முறையல்ல 
         அறநெறியை அகமிருத்தி அரசுசெயற்  படவேண்டும் 
         நாட்டுமக்கள் நலன்பெறலே நல்லரசின் இலட்சணமாம் 
         வாட்டிநிற்கும் கொரனோவை வாய்ப்பாக்கல் அவசியமா  ! 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *