புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் – அங்கம் 07…. முருகபூபதி.
( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய காணொளி ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை )
அவுஸ்திரேலியாவில்நாவல்-சிறுகதை இலக்கியம்…..
முருகபூபதி
சிறுகதை நாவல் இலக்கிய வடிவங்கள் எமக்கு மேனாட்டினரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக விமர்சகர்கள் இன்றுவரையில் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழ்ச்சூழலில் எமது முன்னோர்கள் சிறந்த கதைசொல்லிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஏனோ மறந்துவிடுகின்றோம். தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் கதைகேட்கும் ஆர்வம் குழந்தைகளுக்கும் இல்லை. கதைசொல்ல பாட்டா, பாட்டிமாருக்கும் அக்கறை இல்லை.
இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவர்கள் தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவுஸ்திரேலியா தமிழ்ச்சூழலும் அதற்கு விதிவிலக்கல்ல. பகல்பொழுதில் வேலைக்குச் சென்றதனால் தொலைக்காட்சித்தொடர்களை பிரத்தியேகமாக பதிவுசெய்ய வழிசெய்துவிட்டு – மாலை வீடு திரும்பியதும் அவற்றைப்பார்த்து திருப்தியடையும் நடைமுறையும் வந்தது. கொரோனா காலத்தில் வாட்ஸ்அப் வேடிக்கை பெருகிவிட்டது.
பல வீடுகளில். எத்தனைபேர் சிறுகதைகளை நாவல்களைப் படிக்கிறார்கள்? அல்லது படிப்பதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள்.? சிறுகதை எழுத்தாளர்கள் தமது படைப்பு தொடர்பாக எவரேனும், வாசகர் கடிதமாவது – கருத்தாவது எழுதமாட்டார்களா என்று காத்துக்கிடக்கின்றனர். சிறுகதைத்தொகுதியை வெளியிட்டால் அதனைப்பற்றி குறைந்தபட்சம் இதழ்களில் சிறிய அறிமுகக்குறிப்பாவது பதிவாகுமா? என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஈழத்தைச்சேர்ந்த பல படைப்பாளிகள் புலம்பெயர்ந்த பின்னர் அவர்களின் படைப்புகள் ஈழத்து வாசகர்களுக்கு புதிய களங்களை அறிமுகப்படுத்துகின்றன. இலங்கையில் நீடித்த போர் போர்க்கால இலக்கியங்களை தமிழுக்கு வரவாக்கியதுபோன்று புலம்பெயர்ந்தவர்களின் படைப்புகள் புகலிட இலக்கியமாக அறிமுகமாகிவிட்டன. சிறந்த சிறுகதை எது? என்பது வாசகரின் ருசிபேதத்தில் தங்கியிருக்கிறது.
ஒருவருக்கு பிடித்தமானது மற்றுமொருவருக்கு பிடித்தமில்லாமல் அல்லது எழுதப்பட்ட முறையினை புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.
களத்திலறங்கி யதார்த்தமான சிறுகதைகளை படைப்பவர்களும் குறிப்பிட்ட களம் பற்றிய கேள்விஞானத்தில் சிறுகதை, நாவல்களை , தயாரிப்பவர்களும் ஈழத்து தமிழ்ச்சிறுகதைத் துறையில் மட்டுமல்ல புகலிடத்திலும் இருக்கிறார்கள். கரு, பாத்திர வார்ப்பு, படைப்புமொழி நடை, வாசகரின் சிந்தனையில் ஊடுருவும் ஆற்றல் என்பவற்றால் சிறுகதையும் நாவலும் தரமாக அமையலாம்
இந்தப்பின்னணிகளுடன் அவுஸ்திரேலியாவில் சிறுகதை, நாவல் இலக்கியம் படைத்தவர்களையும் தொடர்ந்து இந்தத்துறையில் தமது உழைப்பை செலவிட்டுக்கொண்டிருப்பவர்களையும் ஏதேனும் தனிப்பட்ட காரணங்களின் நிமித்தம் சிறுகதைகளை எழுதாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவர்களையும் அவதானிக்கமுடிகிறது.
சிலரது சிறுகதைகள், நாவல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இங்கிருந்து பல நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. முடிந்தவரையில் அவை பற்றி எனது படித்தோம் சொல்கின்றோம் என்ற தொடர்பத்தியில் எனது வாசிப்பு அனுபவத்தினை எழுதிவந்துள்ளேன். அதனால், ஒவ்வொரு படைப்பு குறித்தும் தனித்தனியாக எனது மதிப்பீட்டை விரிவஞ்சி இங்கு தவிர்க்கின்றேன்.
இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் மலேசியா அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்த பலர் சிறுகதை எழுதுவதை நிறுத்திக்கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டலாம்.
மெல்பனிலிருந்து நடேசன், ஜே.கே., தெய்வீகன், கே.எஸ். சுதாகர் , முருகபூபதி, ஆவூரான் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா, ( அமரர் ) அருண். விஜயராணி, உஷா சிவநாதன்(ரதி), ரேணுகா தனஸ்கந்தா, மாவை நித்தியானந்தன், புவனா இராஜரட்ணம், சாந்தா ஜெயராஜ், நல்லைக்குமரன் குமாரசாமி, கணநாதன், மணியன் சங்கரன், நிவேதனா அச்சுதன், யாழ். பாஸ்கர், ( அமரர் ) சிசு.நாகேந்திரன், ரவி, கல்லோடைக்கரன், மெல்பன் மணி – ( அமரர்) நித்தியகீர்த்தி சாந்தினி புவனேந்திரராஜா, ராணி தங்கராஜா ஆகியோரும் – சிட்னியிலிருந்து ( அமரர்கள் ) எஸ்.பொ, காவலூர் இராஜதுரை, மாத்தளை சோமு, ஆசி. கந்தராஜா, ரஞ்சகுமார், சந்திரகாசன்,
களுவாஞ்சிக்குடி யோகன், தேவகி கருணாகரன், சாயி சஸி, உஷா ஜவஹார், நவீனன் இராஜதுரை , கானா. பிரபா ஆகியோரும் சிறுகதை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள்.
கன்பராவிலிருந்து யோகன், ஆழியாள் மதுபாஷினி.
இவர்களில் எத்தனைபேர் தொடர்ந்தும் சிறுகதைகள் எழுதுகிறார்கள் எத்தனைபேர் மற்றவர்களின் தொடர்பயணத்தில் இணையாமல் தங்கிவிட்டார்கள் என்ற பட்டியலை இங்கு தரவில்லை. சிலவேளை தற்பொழுது எழுதாமலிருப்பவர்கள் மீண்டும் உயிர்ப்புற்று சிறுகதை இலக்கியத்திற்கு புத்துயிர்ப்பு தந்து தாமும் புத்துயிர்ப்பு பெறலாம்.
சிறுகதை இலக்கியப்போட்டிகள் இலங்கை – தமிழகத்திலும் ஏனைய நாடுகளிலும் நடப்பதனால் குறித்த போட்டிகளுக்கு எழுதி பரிசுபெற்றவர்களும் இவர்களிடையே எழுதிக்கொண்டுதானிருக்கிறார்கள்.
மெல்பனில் 1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ( ஜூன் 25 ஆம் திகதி) சென்னை தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பித்த முருகபூபதியின் இரண்டாவது சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு அரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பதத்தை பிரயோகித்தார். இவ்விலக்கியம் புகலிட இலக்கியமாக தற்போது பேசப்படுகிறது.
புகலிடத்தின் சூழலை சித்திரித்தும், தாயக நினைவுகளை அதில் இழையோடவிட்டும் எழுதப்படும் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் பல இங்கிருந்து வௌியாகின்றன.
கால் நூற்றாண்டுக்கு முன்னர் இங்கிருந்து எழுதப்பட்ட கதைகள் தொடர்பாக, அவற்றை புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என அழைக்காமல், புலம்பல் இலக்கியம் என்று சொல்லுங்கள். என்றும் தமிழகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அது யாருடைய குரல் எனச்சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.
அது தமிழ் இலக்கியத்தில் ஒரு காலகட்டத்தின் அடங்காத பேரோசையாகத்திகழ்ந்த ஜெயகாந்தனின் குரல்.
அதே சமயம் “ எதிர்காலத்தில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம்தான் தமிழ் உலகில் தலைமை ஏற்கும் “ என்று மற்றும் ஒரு அடங்காத இலக்கியப்பேரோசை அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலித்தது. அக்குரல் எமது மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களின் குரல்!
இவர்கள் இருவரதும் கருத்துக்களுக்கும் இலங்கை – தமிழகம் – புகலிட நாடுகளிலிருந்து எதிர்வினைகள் எழுந்தன.
இன்று ஜே.கே. என்ற ஜெயகாந்தனும் இல்லை எஸ்.பொ. என்ற பொன்னுத்துரையும் இல்லை.
ஆனால் மற்றும் ஒரு சர்ச்சை அண்மைக்காலத்தில் எழுந்துள்ளது:
மெல்பனிலிருக்கும் எழுத்தாளர் நடேசன், சிறுகதைகள், நாவல்கள், பயண இலக்கியங்கள், மற்றும் தனது விலங்கு மருத்துவதொழில்சார் அனுபவப்பதிவுகளை தொடர்ந்து எழுதிவருபவர். அவர் இவ்வாறு சொல்கிறார்:
போரின் விளைவால் புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்களின் வரிசையில் இலங்கைத் தமிழர்களாகப் பலர் உண்டு . அதில் ஏற்கனவே எழுத்தாளராகப் புலம் பெயர்ந்தவர்களும், புலம் பெயர்ந்த பின்பு எழுத்தாளர்களானவர்களும் அடக்கம். இவர்களில் ஒற்றைக் கை விரல்களில் எண்ணக்கூடியவர்களே புலம்பெயர்ந்த இலக்கியம் என்று சிந்தித்துப் படைப்பவர்கள். மற்றையோர் கண்டங்கள் கடந்திருந்து , கால் நூற்றாண்டுகள் மேல் பாரிஸ் , லண்டன் , ரொரண்ரோ என வாழ்ந்தபோதிலும் ஊர் நினைவுகளை மீட்டுகிறார்கள். அது அவர்களது தவறல்ல . ஊர் நினைவுகள் ஒரு எலும்பில் புகுந்த சன்னம் போன்றது. இன்னும் அழுத்தமாகச் சொன்னால் அடிமை கொள்ளும் போதை போன்றது. விலகுவது சுலபமல்ல. நண்பர் ஷோபாசக்தி நேர்மையாக அதை சமீபத்திய செவ்வியில் ஒப்புக்கொண்டார். பலர் அதை ஏற்றுக்கொள்ளாமல் புலம்பெயர்ந்தவர்கள் என்ற லேபலுக்குள் இருந்து பால்ய கால நினைவுகளையும் இலங்கையில் நீடித்த போர் பற்றியும் எழுதுகிறார்கள் . நான்கூட அசோகனின் வைத்தியசாலை , உனையே மயல்கொண்டேன் முதலான அவுஸ்திரேலியாவின்
வாழ்வு சார்ந்த நாவல்களை எழுதிவிட்டு மீண்டும் கானல் தேசம் என்ற போரக்கால நாவலை எழுதினேன்.”
நடேசனின் இக்கூற்றுக்கு எதிர்வினையாக கனடாவிலிருந்து பதிவுகள் என்னும் கலை, இலக்கிய இணை இதழை நீண்டகாலமாக நடத்திவரும் கிரிதரன் ( இவரும் கனடாவிற்கு புலம்பெயர்ந்து நீண்டகாலமாக சிறுகதைகள் – நாவல்கள் எழுதிவருபவர் ) இவ்வாறு சொல்கிறார். இதனையும் கவனியுங்கள்.
நடேசனின் கருத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் ஊரின் நினைவுகள் வருவது தவிர்க்கப்பட வேண்டுமென்ற தொனி தென்படுகிறது. இது தவறான கூற்று. எழுத்தாளர் ஒருவர் எங்கிருந்தாலும் எவை பற்றியும் எழுதலாம். எழுத்துகள் என்பவை அவர்கள்தம் உணர்வுகளின், அனுபவங்களின் வெளிப்பாடுகளே. புகழ்பெற்ற சல்மான் ருஷ்டியின் நாவல்களிலொன்று ‘நள்ளிரவுக் குழந்தைகள்’ (Midnight Children). அதை அவர் இந்தியாவிலிருந்து எழுதவில்லை. இந்தியாவைக் களமாகக்கொண்ட நாவலது. மேற்கு நாடுகளிலொன்றிலிருந்துதான் எழுதினார். அவரது சிறந்த படைப்புகளிலொன்று அது. புகழ்பெற்ற போலிஷ் அமெரிக்கரான ஜேர்சி கொசின்ஸ்கி தனது புகழ்பெற்ற நாவலான ‘நிறமூட்டப்பெற்ற பறவைகள்’ (The Painted Birds) நாவலை அமெரிக்காவிலிருந்துதான் எழுதினார். அந்நாவல் அவர் தன் பால்ய பருவத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும், நாசிகளின் அக்கிரமங்களிலிருந்து தப்புவதற்காக அலைந்து திரிந்த அனுபவத்தை மையமாகக்கொண்டெழுதப்பட்டது. இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம். படைப்புகளின் சிறப்பென்பது அவை கூறப்படும் களங்களைக்கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. “
எனவே, புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – புகலிட இலக்கியம் இவற்றின் வரைவிலக்கணம் யாது..? என்ற சர்ச்சை சமகாலத்தில் எழுந்துள்ளது என்பதையும் இங்கு ஒரு செய்தியாக சொல்லிவைக்கின்றேன்.
வருங்காலத்தில், அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் என்றுதான் அடையாளப்படுத்தவேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.
இதுபற்றியும் நாம் தொடர்ந்து பேசமுடியும்.
இந்த காணொளி யூடாக உங்கள் அனைவருடனும் பேசுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்கிய மதுரை தமிழ்ச்சங்கத்திற்கும் இலக்கிய சகோதரி ஜான்ஸி ராணி அவர்களுக்கும் இந்நிகழ்வின் இறுதியில் தொகுப்புரை நிகழ்த்திய முனைவர் அன்புச்செழியன் அவர்களுக்கும்,
என்னையும் இந்த ஆய்வரங்கில் இணைத்துக்கொள்வதற்கு ஆவனசெய்த இலக்கிய சகோதரி, சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றத்தின் ஸ்தாபகர் கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியன் அவர்கட்கும் கலந்துரையாடலில் கலந்துகொண்டு இந்த இணைய வழி காணோளியூடாக கருத்துக்களை பரிமாரிக்கொண்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
letchumananm@gmail.com