கவிதைகள்

புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும் !… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

வெடித்துச் சிதறும் பட்டாசு 

விடியல் காட்டும் குறியல்ல

இடக்கு முடக்கு வாதங்கள்

எதற்கும் தீர்வு வழியல்ல 

நினைப்பில் மெய்மைப் பொறியதனை

எழுப்பி நின்று பார்திடுவோம்

பிறக்கும் வருடம் யாவருக்கும்

சிறப்பை ஈந்து சிரிக்கட்டும்  ! 

 

அறத்தைச் சூது கவ்வுமெனும் 

நினைப்பை பொசுக்கி எரித்திடுவோம் 

உளத்தில் உறுதி எனுமுரத்தை

இருத்தி வைக்க எண்ணிடுவோம் 

வறட்டு வாதம் வதங்கட்டும்

வெறுக்கும் எண்ணம் மடியட்டும்

சிரிப்பு மலராய் மலரட்டும்

பிறக்கும் வருடம் இனிக்கட்டும்  !

 

 

வறுமை முகங்கள் மலரட்டும்

சிறுமை தொலைந்து போகட்டும்

சிறகு விரிக்கும் பருந்தெல்லாம்

திசைகள் அறியா சிதறட்டும் 

உரிமைக் குரல்கள் ஒலிக்கட்டும்

தரிசு மனங்கள் தளிர்க்கட்டும் 

புதுமை காட்டும் பாங்குடனே

புதிய வருடம் பிறக்கட்டும் !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *