கட்டுரைகள்

நடுகைக்காரி 88….  ஏலையா க.முருகதாசன்

எனக்கும், என்ரை மனுசனுக்கும் நீங்கள் மூன்றுபேருந்தான் உலகம்,உங்கள் மூன்று பேரின் கண்ணிலும் கண்ணீர் வந்தால் எங்கள் இரண்டு பேராலும் தாங்க மடியாது, அதுதான்
-தனபாக்கியம்

அடுப்படி வாசலடியில் யாரோ வந்து நிற்கின்ற அசிகை தெரிய அனைவரின் தலைகளும் அடுப்படி வாலடியை நோக்கித் திரும்புகின்றன.
அங்கை,அடுப்படிக் கதவைப் பிடிச்சபடி தாயார் தனது மனைவிக்கு ஒரு குழந்தைக்குச் சோறு தீத்துவது போலத் தீய்த்திக் கொண்டிருப்பதைக் கண்ட முருகதாசன் நெகிழ்ந்து மாமியாரும் மருமகளும் சமாதானமாகிவிட்டியளோ என்றவன், அம்மா உங்கடை மகனை மறந்திடாதை என்று குறும்பாகச் சொன்னதும் நான் எப்படா என்ரை மருமோளோடை சண்டை பிடிச்சனான் என்று சொல்ல தனது மனைவிக்கு யூனியனில் நடந்த அவமானம் தனது மனைவியால்தான் ஏற்பட்டது என்பதை அவனுடைய மனச்சாட்சி ஒப்புக் கொண்டாலும்,கல்யாணம் செய்து கிட்டத்தட்ட ஒருவருடமாக தனது மனைவி தனது அப்பா அம்மாவின் வீடடுக்குப் போகாது இருந்தமைக்கு சரியான காரணம் எதுவுமில்லாதிருந்த போதிலும் சிலம்பரசி ஏன் போக விரும்பவில்லை என்பதைப்பலமுறை கேட்டும் அவள் சொல்ல விரும்பவில்லை.

சிலர் தங்களால் முடிஞ்சளவு தவறான வார்த்தைகளைப் பேசாது நாவைக் காத்துக் கொண்டாலும், நா எப்பொழுதும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுமில்லை.
சூழ்நிலை சந்தர்ப்பங்கள் காரணமாக கட்டுப்படுத்தி வைச்சிருந்த நாக்கு கோபம் சோகம் ஆதங்கம் போன்றவற்றால் எல்லைமீறி வார்த்தைகளைக் கொட்டிவிடுவதுமுண்டு.அப்படியொரு நிலையில்தான் தனபாக்கியம் சிக்கிக் கொண்டார்.

அயல்வேலி நாகம்மா, சிலம்பரசிக்கும் முருகதாசனுக்கம் கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்திற்குப் பிறகு ஒரு நாள,; என்ன தனமக்கா,நானொரு கதை கேள்விப்பட்டனான் உன்ரை மோன் சிலம்பரசியிடம் வகையாய் மாட்டிக் கொண்டுவிட்;டானோ என்று கேட்க,அவன் அந்தப்பிள்ளையை விரும்பினது பிழையில்லை,ஆனால் தாய் வாய்க்காரி யாரையும் மதிக்கமாட்டாள்,என்ரை மோன் சுடுசொல் தாங்கமாட்டான் அதுதான் கவலையாயிருக்கு,ஏதேன் ஒரு சந்தர்ப்பத்தில் எக்குத்தப்பாய் மகனிடம் வாய்காட்ட அவன் அதனைத் தாங்காமல் புருசன் பெண்சாதிக்குள்ளை சண்டை வந்திடுமோ என்றுதான் ஒரே யோசனையாயிருக்கு என்று ஆதங்கத்தில் சொல்லிவிடுகிறாள்.

ஏதோ ஒரு மனநிiயில் அடுத்தவருக்கு ஒருவரைப்பற்றிச் சொல்லும் குறைகுற்றங்களில் குளிர்காயும் போக்கும் பலரிடம் இருக்கவே செய்கின்றது.தனது மருமகளின் தாயைப் பற்றி வாய்தவறி தான் சொன்னது தவறு என்று உடனடியாகவே உணர்த்த தனபாக்கியம்,அது சிலம்பரசியின் தாயின் காதுக்கு எட்டுமானால் அது தனது மகனின் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கம் என்பதை உணர்ந்து நாகம்மாவிடம் இதை ஆருக்கும் சொல்லிப்போடாதை மனவேதனையில் சொல்லிப் போட்டன் இந்தக் கதையை இந்த இடத்திலேயே விட்டிட்டப் போங்கோ என்று சொல்ல,என்னக்கா இப்படிச் சொல்லுறியள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பியள்தானே,ஒருத்தராவது நாகி அங்கை அதைச் சொன்னாள் இங்கை இதைச் சொன்னாள் என்று தெல்லிப்பழையில் யாராவது கதைச்சிருக்கினமோ என்ற நாகம்மாதான் தபால்கந்தோரடி சந்தையில் சிலம்பரசியின் தாயைச் சந்திச்;ச போது ஆரோடையும்: நான் சொல்றதைக் கதைச்சுப் போடாதையக்கா உங்கடை சம்பந்தி இருக்காவே அதுதான் உங்கடை மருமோன்ரை தாய் அவ ஒரு கொண்டோடி அண்டைக்கு சும்மா நின்ற என்னைக் கூப்பிட்டு வேலியடியிலை வைச்சு நீங்களக்கா ஒரு வாயக்;காரி என்கிறார,; என்று போகிற போக்கில் நூந்து போய்க் கொண்டிருக்கிற நெருப்புக்குச்சி நெருப்பை வைக்கல் பட்டடைக்குள் எறிஞ் மாதிரி சொல்லிவிட்டுப் போக கோபக் கொதியோடு வீட்டுக்குப் போன சிலம்பரசியின் தாய்,சிலம்பரசி பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தால் வரும்வரை காத்திருந்து,சிலம்பரசி செருப்பைக் கழட்டி வீட்டு வாசலில் வைச்சுவிட்டு வீட்டக்குள் நுழைய முந்தியே ஏன் உனக்கு காதலிக்க வேறை ஒருத்தரும் கிடைக்கலையே போயும் போயும் அந்த உதவாத குடும்பந்திலுள்ளவனையா காதலிச்சனி என்று பொரிஞ்சு கொட்டுகிறாள் சிலம்பரசியின் தாய்.

தான் வந்ததும் வராததுமாய் தாய் ஏன் இப்படி பொரிஞ்சு தள்ளுகிறார் என்பதைப் புரியாத சிலம்பரசி என்னம்மா நடந்தது அங்கையிருந்து என்ன கதை வந்தது என்று கேட்க,நீ புடிச்சவன்ரை தாய் அதுதான் உன்ரை மாமி என்னை வாய்க்காரி என்று சொன்னவ என்று பக்கத்து வேலிக்காரி நாகம்மா போஸ்ற்ஒபீஸ் சந்தையடியில் கண்டு சொல்லிட்டுப் போறா என்றதும் சிலம்பரசி ஒருவேளை அவையின்ரை விருப்பமில்லாமல் அவரைக் காதலிச்சுக் கட்டினது புடிக்காமல் இப்படியெல்லாம் கதைக்கினமோ என்று நம்பி தனது கணவனின் வீட்டுக்கு தனிவீடு கட்டிப் போகும்வரை போவதில்லை என்று முடிவெடுக்கிறாள்.

முருகதாசன் தங்கடை வீட்டுக்கு சும்மா போய்வருவம் என்று கேட்ட போதும் சிலம்பரசி ஏதோ சாக்குப் போக்குச் சொல்லத் தட்டிக்கழிச்சுக் கொண்டே வந்தாள்.
அப்படியான சூழ்நிலையில்தான் பலநோக்கக் கூட்டுறவுச்சங்க துணிக்கடையில் மலிவு விற்பனை என்றறிஞ்ச ஊர்ச்சனங்கள் அங்கு குவிய,பார்வதியும் துணிவாங்கவென்று வர, சனம்கூடிவிட்டது சமாளிக்க முடியவில்லை என்பதால்,சங்க முகாமையாளர் நவரட்ணராஜா சிலம்பரசியை உதவி செய்யும்படி அனுப்ப,அங்கை பார்வதியைக் கண்ட சிலம்பரசி,பார்வதியை யார் என்று தெரியுமென்பதால் மலிவென்றால் காகங்கள் மாதிரிக் குளிக்காமல் வந்திடும் என்று பார்வையாலும் சொல்லாலும் குத்திக்காட்டி நக்கலடிக்க,அதனால் வெப்பியாரமான பார்வதி சங்க முகாமையாளரிடம் புகார் கொடுக்க ஞானமும் பார்வதிக்கு துணையாக நிற்க சிலம்பரசியை ஒரு கிழமைக்கு சங்க நிர்வாகம் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்கின்றனர்.

தனது படிப்பாலும்,அவளோடிருக்கும் அகந்தையாலும் கர்வத்தோடு இருந்த சிலம்பரசிக்கு,தான் பார்வதியால் அவமானப்பட்டுவிட்டேனே என்பது தாங்க முடியாத வேதனையுடன் கண்கள் கலங்க விம்மிவெடித்த அழுகையுடன் படியிறங்கி வந்தவளின் பார்வைக்கு தனது கணவனின் தாயாரான அவளின் மாமியாரும்,தனது கணவரின் தங்கச்சியாரான மங்களேஸ்வரியைக் கண்டதம் மாமி மாமி என்று வெம்மிவெடிச்ச அழுகையுடன் தன்னைச்சுற்றி ஆட்கள் நிக்கினம் என்பதையும் பொருட்படுத்தாமல், மாமியாரிடம் ஓடி வந்து அவரைக் கட்டியணைச்சு தோளில் தலைசாய்ச்சு குலுங்கி குலுங்கி அழுதபடியே மாமி அவளாலை நான் அவமானப்பட்டிட்டன் என்று கண்ணீர்விட்டழுகிறாள்.
சிலம்பரசியின் கண்ணீர்; மாமியாரின் தோளையும்,அவரின் பிளவுசையும் நனைக்கின்றது.மாமியார் மருமோளை அணைச்சபடி முதுகைத் தடவிக் கொடுத்தக் கொண்டே அழாத பிள்ளை என ஆறுதல்படுத்துகிறார்.

சிலம்பரசி அழுதபடியே என்னை ஒரு கிழமைக்கு இடைநிறுத்தம் செய்திட்டினம்;, எனக்கு அவமானமாக இருக்கிறது மாமி என மாமியாரின் தோளிலிருந்து முகத்தை எடுக்காமல் அழ மைத்துனி மங்களேஸ்வரி அண்ணி அழாதையுங்கோ இதெல்லாம் சிம்பிள் மாற்றர் சின்ன விசயம் இப்ப என்ன வானமா உங்கடை தலையிலை விழுந்திட்டுது என்று ஆறுதல் சொல்ல,வானம் இடிஞ்சு விழுந்தாக்கூடப் பரவாயில்லை ஆனால் அதைவிட இது கொடுமையானது எனக்கு இது அவமானம் என்னை இனி யாருமே மதிக்கமாட்டார்கள் என்கிறாள் சிலம்பரசி.

துணிவாங்க வந்த பார்வதியைப் பார்த்து மலிவென்றால் காகங்கள் மாதிரிக் குளிக்காமல் வந்திடுங்கள் என்று தன்ரை மருமோள் சொன்ன போது அந்தப் பிள்ளையும் எவ்வளவு துடிச்சிருக்கும்,தன்னைத்தான் கடையிலை வேலை செய்யிற ஒருத்தி இப்படிக் கேலியாகச் சொல்கிறாள் என்பதைப் பரிஞ்சு கொண்ட சிலர் தன்னைக் கைவிரல்களால் காட்டியும் கண்களால் சாடை காட்டிய போது அவளும் கூனிக்குறுகித் துடிச்சிருப்பாளே,அந்தச் சொல்லின் அழுத்தமான உள்கருத்தின் அர்த்தம் புரிஞ்ச அவளும் பலபேர் முன்னால் அவமானப்பட்டுத் துடிச்சிருப்பாளே அதையேன் தன்ஐர மருமோள் பரிஞ்சு கொள்ளவில்லை என்று தனபாக்கியத்தின் மனச்சாட்சி சொன்ன போதும்,மருமோள்; நெகிழ்ந்துபோயிருக்கும் இந்த நிலையில் வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சுவது போல அதைச் சுட்டிக்காட்டிச் சொல்லக்கூடாது என்று தன்னைக் கட்டுப்படுத்திய தனபாக்கியம்,சுற்று முற்றும் பார்த்த போது பலர் பார்க்காதது போல தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும்,சும்மா மெல்லுகிற வாய்க்கு நாங்களே அவலாகக்கூடாது என்று நினைச்சவள்,மகளிடம் அண்ணியை ஆதரவாகக் கூட்டிக் கொண்டு வா போவம் என தங்களுடைய வீட்டை நோக்கிப் போகத் தொடங்கினர்.
யார் வீட்டுக்குப் போறம் என்ற எந்தக் கேள்வியுமே இல்லாமல்,மைத்துனி மங்களேஸ்வரியின் கைகளைத் தனது கையால் பிடிச்சபடி மாமியாருடனும் மைத்துனியுடனும் போய்க் கொண்டிருந்தாள்.

சிலம்பரசி அடிக்கடி கண்ணீரைத் துடைப்பதைக் கண்டதும்,என்னண்ணி நீங்கள் எவ்வளவு தைரியமான பெண் இப்படிக் குழந்தைப் பிள்ளை மாதிரி அழுகிறியள் என அறுதல்படுத்திய மங்களேஸ்வரி தனது கைலேஞ்சியாள் சிலம்பரசியின் கண்ணீரைத் துடைச்சுவிடுகிறாள்.

வீட்டுக்கு வருகையில் நாகம்மாவின் புதின வியப்புக் கண்களையும் கடந்து, வீட்டுக்குள் வந்து தனது மருமோளுக்கு பாசத்துடன் தனபாக்கியம் சோறு தீத்துவதைக் கண்ட மகன் முருகதாசன்,மருமோளோடை சமாதானமோ என்று கேட்க,வாயை மூடு அவளோடை எப்ப நான் சண்டை பிடிச்சனான்,அவள் எனக்கு மருமோளல்ல மகள் என்று பாசமும் அக்கறையும் கலந்து நா தழதழக்கச் சொல்ல,அவளையறியாமலே கண்ணீர் கசிய, அதைச் சீலைத்தலைப்பால் துடைப்பதைக் கண்ட மங்களேஸ்வரி அம்மா இனி நீங்கள் துவங்கிவிட்டியளா என்று சொல்ல, மாமி என்ன மாமி நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்லிப் போட்டு அழுகிறியள் அழாதையுங்கோ என்கிறாள்.

எனக்கும் என்ரை மனுசனுக்கும் நீங்கள் மூன்றுபேருந்தான் உலகம்,உங்கள் மூன்று பேரின் கண்ணிலும் கண்ணீர் வந்தால் எங்கள் இரண்டு பேராலும் அதைத் தாங்க மடியாது, அதுதான்.

(தொடரும்…)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button