Featureஇலக்கியச்சோலை

வேர்களைத் தேடும் விழுதின் பயணம்!… (நூல் அறிமுகம் ) கே.எஸ்.சுதாகர்.

ஒருமுறை நண்பன் ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அவன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினான். தனது மகன் பாடசாலையில் `ஃபமிலி றீ’ பற்றி ஒரு செயல்திட்டம் செய்வதாகவும், தன்னுடையதும் மனைவியினதும் இரண்டாவது பரம்பரைக்கு அப்பால் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாகவும் கவலை கொண்டான்.

“உனது குடும்பத்தில் எந்த எல்லை வரை உன்னால் சொல்ல முடியும்?” திடீரென என்னிடம் கேட்டான் அவன். குடும்பத்தின் ஆணி வேரைக் கண்டிபிடித்து விடவேண்டும் என்பதில் அவனது ஆர்வம் உச்சத்துக்கே சென்றுவிட்டதை அவதானித்தேன். அமைதியாக மனதை ஒருநிலைப்படுத்தி நானும் என் குடும்பத்திற்குள் பயணித்தேன். மூன்றாவது பரம்பரைக்கு அப்பால் என்னால் நகர முடியவில்லை.

இந்த உரையாடலின் பின்னர், இதுவரை காலமும் வாசிப்பதற்கு பின் போட்டுவந்த அலெக்ஸ் ஹேலியின் `வேர்கள்’ நாவலைக் கையில் எடுத்தேன். `எதிர் வெளியீடாக. வந்திருக்கும் இந்த நாவலை 2018 இல் இந்தியா சென்றபோது வாங்கியிருந்தேன். இந்தப் புத்தகத்தின் பருமன் தான் இத்தனை நாளும் என்னை வாசிப்பதற்குப் பயம் காட்டியிருந்தது. ஏறக்குறைய 910 பக்கங்கள். எல்லாவற்றையும் புறம் தள்ளி ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். பொன். சின்னத்தம்பி முருகேசனின் அழகு தமிழ் என்னை அசைய விடாமல் கட்டிப் போட்டிருந்தது.

அலெக்ஸ் ஹேலி பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அவர் இந்த `வேர்களின்’ ஒன்பதாவது தலைமுறையைச் சார்ந்தவர். 1921 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் பிறந்த அலெக்ஸ் ஹேலி சிறுவயதில் கடலோரக் காவற்படையிலும் பின்னர் ரீடர்ஸ் டைஜஸ்ட் (Readers Digest), பிளேபாய் (Playboy) போன்ற பத்திரிகையிலும் பணிபுரிந்தவர். ஒருமுறை லண்டனில் உள்ள மியூசியத்திற்குச் சென்றபோது, அங்கே ஒரு பிரான்ஸ் அறிஞர் எகிப்தியச் சிலையொன்றில் உள்ள எழுத்துக்களை வைத்து அதன் வரலாற்றைக் கணிக்கும் முயற்சியில் ஈடுபடுவதைக் கண்டார். அப்போதுதான் தமது முன்னோர்கள் மூலம் வழிவழியாகக் கடத்தப்பட்டு வரும் சில வார்த்தைகளையும் ஒலிக்குறிப்புக்களையும் கொண்டு தனது பூர்வீகத்தையும்

கண்டறியலாம் என்ற சிந்தனை அவருக்குள் பிறந்தது. அதற்கான பல தேடல்கள் அர்ப்பணிப்புகளின் பின்னர் தனது பூர்வீக கிராமமான ஜுஃப்யூர் சென்றடைந்தார். ஜூஃப்பூர் ஆப்பிரிக்காவில் காம்பியா பகுதியில் அமைந்திருக்கின்றது. தனது மூதாதையரான குண்டா கிண்டே பற்றிய தகவல்கள், செவிவழிச் செய்திகள், ஆப்பிரிக்கா கலாச்சாரம் என்பவற்றை உள்வாங்கிக் கொண்ட ஹேலி, அதனூடாக அமெரிக்காவில் அடிமைப்பட்டுக் கிடந்த கறுப்பின மக்களின் வாழ்க்கையை எழுத ஆரம்பித்தார்.

1976ஆம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளிவந்தபோது உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்தப் புத்தகம் விற்பனையிலும் சாதனை படைத்தது.

அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பிய வெள்ளையர்கள், அங்கே பூர்வீகமாக வாழ்ந்துவந்த பழங்குடியினரைத் துரத்திவிட்டு அவர்களின் நிலபுலன்களையெல்லாம் அபகரித்தார்கள். அந்த நிலங்களில் உழைப்பதற்காக ஆப்பிரிக்காவில் இருந்த மக்களைச் சிறைப்பிடித்து, விலங்கிட்டு கடல் மார்க்கமாக நெடுநாட்கள் பயணம் செய்து கொண்டு வந்தார்கள். நோயினால் இறந்தவர்களையும், தப்பிக்க முயற்சி செய்தவர்களைச் சுட்டுக் கொன்றும் கடலில் வீசினார்கள். ஒவ்வொரு கடல் பயணத்தின் போதும் இப்படியாக மூன்றில் ஒரு பகுதியினர் இறந்து போனார்கள். எஞ்சியவர்களைக் கொடுமைப்படுத்தி தமது பண்ணைகளில் வேலைக்கு அமர்த்தினார்கள்.

இப்படித்தான் மலைக் கிராமமான ஜுஃப்பூரில் இயல்பு வாழ்க்கை நடத்தி வந்த குண்டா கிண்டே தனது பதினேழாவது வயதில் பிடிபடுகின்றான். காடொன்றில் தனது தம்பிக்கு முரசு செய்வதற்கு மரம் வெட்டிக்கொண்டிருந்த வேளை ஆப்பிரிக்கக் கைக்கூலிகளிடம் அகப்பட்டுக் கொள்கின்றான். ஆண் பெண் பேதமின்றி அடிமையாகப் பிடிக்கப்பட்டவர்களை அம்மணமாக்கி – உடல் உறுப்புக்களைப் பரிசோதித்து – மாட்டுக்கு குறி சுடுவது போல நெருப்பினால் அடையாளமிட்டு கப்பலில் ஏற்றினார்கள். சொற்ப உணவு, சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட வாழ்க்கை. பாலியல் வல்லுறவு, தமது மலசலத்தின் மேலே இருப்பு. மனதைப் பதற வைக்கும் நான்கரை மாதங்கள் கடல் பயணம். கப்பல் அமெரிக்காவில் உள்ள நேப்பிள்ஸ் என்ற இடத்தைச் சென்றடைந்ததும், அவர்கள். உடல்வாகுக்கு ஏற்றபடி ஏலம் கோரப்பட்டார்கள்.

அங்கே குண்டா கிண்டேயை ஜான் வேல்லர் என்பவர் வாங்கிக் கொள்கின்றார். `டோபி’ என அவனுக்குப் பெயரிட்டு – வெர்ஜீனியாவில், ஸ்பாட்சில்வேனியா ஊரகத்திலிருந்த பண்ணையில் அடிமை வேலைக்கு அமர்த்துகின்றான். டோபி என அவனைப் பெயர் சொல்லி அழைக்கும் போதெல்லாம் கொதித்துக் குமுறுகின்றான். தனது பெயர் குண்டா கிண்டே எனத் திரும்பத் திரும்பச் சொல்கின்றான். அவனால் ஆப்பிரிக்க வாழ்க்கையை என்றுமே மறக்க முடிவதில்லை. தனது வயதைக் கணித்துக் கொள்ள ஒரு குடுவைக்குள் கற்களைப் போட்டுக் கொள்கின்றான். பண்ணையில் வேலை செய்யும் நாட்களில் பல முறைகள் தப்பியோட முயற்சி செய்கின்றான். தண்டனையாக ஆண்மைச்சிதைவா பாதம் துண்டிக்கப்படுவதா என்ற கேள்வி எழுந்தபோது பாதம் துண்டிக்கப்படுவதை குண்டா கிண்டே ஏற்றுக்கொள்கின்றான். பாதம் துண்டிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஜான் வேல்லரின் சகோதரரான மருத்துவர் வில்லியம் வேல்லரினால் காப்பாற்றப்பட்டு அவரது காய்கறித் தோட்டத்தில் வேலை செய்கின்றான். ஓரளவிற்கு நல்ல குணம் படைத்த முதலாளிக்கு வண்டியோட்டியாக வேலை பார்க்கின்றான். பண்ணை வீட்டில் சமையல் வேலை செய்த, தன்னைவிட வயதில் மூத்த பெல் என்ற அடிமைப் பெண்ணை மணந்து கொள்கின்றான். அவர்களுக்குப் பிறந்த கிஸ்ஸி என்ற பெண்குழந்தைக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது மாண்டிங்கா இனத்து சொற்களை கற்றுக் கொடுக்கின்றான்.

குழப்படி செய்பவர்களுக்கும் தப்பியோட முயற்சிப்பவர்களுக்கும் சவுக்கடி முதற்கொண்டு இன்னொரு முதலாளிக்கு விற்பது வரை அப்போது நடைமுறையில் இருந்தது. அடிமைகள் அறிவை வளர்த்துக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. பதினாறு வயது நிரம்பிய கிஸ்ஸி, தனது காதலன் தப்பி ஓடுவதற்காக அனுமதிப் பத்திரம் நிரப்பிக் குடுத்ததில் பிடிபட்டுக் கொள்கின்றாள். அதனால் கோபம் கொண்ட வில்லியம் வேல்லர் அவளை வடகரோலினாவில் உள்ள டாம் லியா என்ற முதலாளிக்கு விற்றுவிடுகின்றார். டாம் லியாவினால் வன்புணர்வுக்கு ஆளாகின்றாள் கிஸ்ஸி. ஜார்ஜ் என்ற மகன் பிறக்கின்றான். கிஸ்ஸி தனது தந்தை சொல்லிக்கொடுத்த ஆப்பிரிக்கச் சொற்களையும் ஒலிக்குறிப்புகளையும் தனது மகன் ஜார்ஜிற்குச் சொல்லிக் கொடுக்கின்றாள்.

டாம் லியா சேவல் சண்டைகள் மீது ஆர்வம் கொண்டவன். அந்த வித்தைகளை ஜார்ஜிற்கு பயிற்றுவிக்க அவன் `கட்டுச்சேவல் ஜார்ஜ்’ எனப் புகழ் பெறுகின்றான். மெடில்லா என்ற பெண்ணை மணந்து எட்டுப் பிள்ளைகளுக்கு தந்தையாகின்றான் ஜார்ஜ். பின் அந்த எட்டுப்பேரும் மணம் முடித்து தமக்கென பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஜார்ஜ் – மெடில்லா தம்பதியினரின் நான்காவது பிள்ளையான டாம் என்பவனின் வழித்தோன்றலாக இந்த நாவலின் ஆசிரியர் இருக்கின்றார்.

டாம், கருமான் (கொல்லன்) தொழிலில் புகழ் பெறுகின்றான். முதலாளி டாம் லியா தனது சேவல் சண்டைகளில் தோல்வியுற்று கையறு நிலை வந்தபோது – எல்லோரையும் வடகரோலினாவில் அலமான்ஸ் ஊரகத்தில் உள்ள புகையிலைத்தோட்ட முதலாளி முர்ரேயிடம் விற்று விடுகின்றார். கட்டுசேவல் ஜார்ஜை, சேவல்சண்டையில் வென்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதலாளியிடம் இரண்டு வருடங்களுக்கு வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கின்றார்.

டாம்- ஐரீன் தம்பதிகளின் எட்டுக்குழந்தைகளில் சிந்தியா கடைசி. அவளுக்கு இரண்டு வயதானபோது, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் இருந்தார். அவரது முயற்சியினால் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அப்போது கட்டுச்சேவல் ஜார்ஜ் இங்கிலாந்திலிருந்து திரும்பிவிட்டான். அவனது தலைமையில் எல்லோரும் மேற்குப்பகுதியில் இருந்த டென்னசே மாநிலத்தின் ஹென்னிங் பகுதிக்குச் சென்றார்கள்.

சிந்தியா, வில் பாமெர் என்பவரை மணந்துகொள்ள, அவர்களுக்கு பெர்த்தா பிறக்கின்றாள். அவள் இசையில் நாட்டம் கொண்டவளாக இருந்தாள். குண்டா கிண்டேயின் தலைமுறையில் முதலில் கல்லூரிக்குச் சென்றவள் அவள் தான். கல்லூரி இசைக்குழுவில் சந்தித்த சைமன் அலெக்ஷாண்டர் ஹேலி என்பவரை மணந்து கொள்கின்றாள். அவர் பின்னாளில் வேளாண்மைப் பேராசிரியராகினார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் `வேர்கள்’ நாவலாசிரியர் அலெக்ஸ் ஹேலி.

அமெரிக்காவில் குண்டா கிண்டேயின் வழித்தோன்றல்களான ஏழு தலைமுறைகள் : குண்டா கிண்டே – கிஸ்ஸி/மகள் – ஜார்ஜ் – டாம் – சிந்தியா/மகள் – பெர்த்தா/மகள் – ஹேலி/நூல்

ஆசிரியர். அதற்கு முந்திய ஆப்பிரிக்கத் தலைமுறையினர் : கைரபா குண்டா கிண்டே – ஒமோரோ – குண்டா கிண்டே.

ஆப்பிரிக்காவில் மாண்டிங்கோ இனத்தவரின் வாழ்க்கை முறை – கூலிகளிடம் பிடிபடுதல்/கொடுமையான கடற்பயணம் – அமெரிக்காவில் அடிமை/பண்ணை வாழ்க்கை – சேவல் விளையாட்டு/கருமான் தொழில் – விடுதலை பெறல் என கதை 1750 இல் ஆரம்பித்து 1992 வரை விரிந்து செல்கின்றது. கதையினூடாக அமெரிக்காவில் நடந்த அரசியல் மாற்றங்களும் சொல்லப்படுகின்றன. ஆரம்பத்தில் இருந்து வேகமெடுத்துச்சென்ற நாவல், கட்டுச்சேவல் ஜார்ஜின் பின்னர் சிறிது தளர்வடைந்ததை வாசிப்பின்போது உணர்ந்து கொண்டேன். தலைமுறையின் ஒவ்வொரு அங்கத்தினரும், தங்கள் வாழ்வை தொடர்ச்சியாகச் சொல்லிச் சென்றிராவிடில், அவர்களின் அடிமை வாழ்வும் அமெரிக்க வெள்ளையர்களின் சுரண்டலும் எமக்குத் தெரியாமல் போயிருக்கும். புலம்பெயர் நாட்டில் இரண்டாம் தலைமுறையினருக்கே தமிழையும் கலாசாரத்தையும் கடத்துவதற்கு திண்டாடும் நிலையில் இந்த நாவல் வியப்பைத் தருகின்றது. நாவலை வாசிக்கும்போது மனதில் உண்டாகும் உணர்வுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மொழிபெயர்ப்பாளர் பொன். சின்னத்தம்பி முருகேசன் குறிப்பிடுவது போல `உறக்கம் பிடிக்காத நள்ளிரவு வேளைகளில், கணினித்திரையைக் கண்களில் ததும்பிய நீர் மறைக்க, அவர் பட்ட பாட்டிற்கு’ பலன் கிடைத்ததை நான் உணர்ந்தேன். நீங்களும் உணர்வீர்கள். அனைத்து வரலாறுகளும் வெற்றியாளர்களால் மட்டுமே எழுதப்படுவதில்லை என நிரூபிக்கும் முக்கிய புத்தகம் இது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *