இலங்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்த 23 இலட்சம் வாக்குகளை இழந்ததால் அரசு அச்சம்

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கை அறிக்கையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவோம் என உறுதியளிக்கப்பட்டுள்ளது . ஆனால் இந்த அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி 23 இலட்சம் வாக்குகளை இழந்த பின்னர் மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே நடத்தாமல் காலம் கடத்துகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

மக்களின் ஜனநாயக உரிமைக்கு இடமளித்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசாங்கம் மக்கள் மத்தியில் பிரபல்யமும் ஜனரஞ்சகமானதாகவும் காணப்பட்டால், அரசாங்கத்தின் இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு மக்களிடையே ஆதரவு இருந்தால், மாகாண சபைத் தேர்தல் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தும் பட்சத்தில் பொதுத் தேர்தலில் கிடைத்த விசேட மக்கள் ஆணைக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கத்தால் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். வரவு செலவுத் திட்டம் முடிந்த உடனேயே மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துங்கள். பொய்க்கு தெரிவுக்குழுக்களை அமைத்து காலம் கடத்தாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *