இலங்கை

பிரபாகரனின் பெயருக்கு இந்தளவுக்கு அச்சமா?

தமிழ் மக்கள் தமது தேசியத்தலைவராக போற்றும் பிரபாகரனின் பெயரையே இந்த சபையில் கூறுவதற்கு தடை விதிக்கும் நீங்கள் எப்படி தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவீர்கள்?இனப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள்?,பிரபாகரனின் பெயருக்கே இவ்வளவு அச்சமா?நீங்கள் இனவாதிகள் என்பதனை இதன்மூலம் நிரூபிக்கின்றீர்கள் என வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் கடுமையாக சாடினார்

பாராளுமன்றத்தில்  இடம் பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த ரவிகரன் எம்.பி.’ தமிழ் மக்கள் தமது தேசியத்தலைவராக போற்றும் பிரபாகரனின்பிறந்தநாள். இன்று .அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்’ எனக் கூறினார்.

இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட எம்.பி. சானக மாதுகொட ‘பிரபாகரனுக்கு இந்த பாராளுமன்றத்தின் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிப்பதை ஏற்க முடியாது.இது குறித்து பாராளுமன்ற செயலாளர் சபை உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதனால் விசனமடைந்த ரவிகரன் எம்.பி., இது தான் இந்த நாட்டின் நிலைமை. தமிழ் இனத்தை எந்தளவுக்கு வெறுக்கின்றீர்கள் என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு.இனவாதம் இல்லை என்று கூறுகின்றீர்கள். ஆனால் பிரபாகரன் என்ற பெயரை குறிப்பிட்டது தான் தற்போது உங்களுக்கு பிரச்சினையாக உள்ளது. இதுதான் இனவாதம். இனவாதமாக செயற்படுகின்றீர்கள்.இவ்வாறான நிலையில் இந்த நாட்டில் எவ்வாறு இன நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படும்?. நாடு முன்னேற்றமடையும்?

இந்த நாட்டில் மூவினம் வாழுகின்ற நிலையில் பிரபாகரனின் பெயருக்கு இந்த சபை எந்தளவுக்கு அச்சமடைந்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது’ என்றார்.

இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய பொதுஜன பெரமுனவின் எம்.பி. சானக மாதுகொட ‘ பாராளுமன்ற உறுப்பினர் துரைசாரா ரவிகரன் தனது உரையில் பிரபாகரன் மற்றும் ஈழம் என்ற சொற்களை குறிப்பிட்டு உரையாற்றினார்.இவ்விரு சொற்களையும் ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு பாராளுமன்ற செயலாளர் சபையிடம் வலியுறுத்துகிறேன்’ என்று மீண்டும் கூறினார்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *