இலங்கை

இதுதான் இந்த நாட்டின் இனவாதம்!; ஜே.வி.பி-க்கு இல்லாத தடை புலிகளுக்கு மட்டும் ஏன்?;  முழு நாட்டையும் கைப்பற்றப் போராடிய ஜே.வி.பி-க்குத் தடை நீக்கம்

தமிழ் மக்களின் தாயகமான வடக்கு,கிழக்கு மாகாண சுதந்திரத்துக்காகவே விடுதலைப்புலிகள் போராடினர்.தற்போது ஆட்சியிலுள்ள ஜே .வி.பி.யோ முழு நாட்டையும் கைப்பற்ற ஆயுதமேந்தி போராடியது.ஆனால் ஜே.வி.பி மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்கிறது. இது எந்த வகையில் நியாயம்? முழு நாட்டையும் கைப்பற்றும் செயற்பாடு பயங்கரவாத செயற்பாடில்லை, தமிழர் தாயகத்தை மட்டும் கேட்டு போராடியது மட்டும் பயங்கரவாத செயற்பாடா? ,இது தான் இனவாதம்.எனவே இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் முதலில் விடுதலைப் புலிகள் மீதான தடையை அரசாங்கம் முழுமையாக நீக்க வேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட எம்..பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இலங்கையின் சட்டம் விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாக தடை செய்துள்ளது. தமிழ் மக்கள் தமது தேசியத் தலைவராக மதிக்கும் பிரபாகரனை நினைவு கூரவும், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதும், அவரது புகைப்படத்தை பதிவேற்றம் செய்வதும், பரிமாறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பும், அதன் தலைவரும்,போராளிகளும் தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த அமைப்பு சார்ந்த எந்தவொரு விடயத்தையும் கொண்டாடவோ அல்லது நினைவுக் கூரவோ முடியாது என்று தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படுகின்றது .

ஜே .வி.பி.(மக்கள் விடுதலை முன்னணி) அமைப்புக்கும் , அதன் தலைவர் ரோஹன விஜேவீரவுக்கும் ஒருகாலத்தில் இலங்கையின் சட்டம் தடை விதித்தது. ஆனால் தற்போது அந்த தடை அமுலில் இல்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்து அந்தத் தடையை தொடர்ச்சியாக அமுலில் வைத்திருப்பதற்கும், ஜே .வி.பி மீதான தடையை நீக்குவதற்கும் இடையிலான வேறுபாடு என்ன? இரு தரப்பும் ஆயுதமேந்தியே போராடின.போராட்டத்தின் போது உயிரிழப்புக்கள் இடம்பெற்றன.

சரி, பிழைக்கு அப்பால் ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாகக் கருதப்பட்டால் இரண்டு தரப்பும் தடை செய்யப்பட வேண்டும்.அல்லது ஜனநாயகத்தை வரவேற்று இரண்டு தரப்பு மீதான தடைகளையும் நீக்க வேண்டும். முழு நாடும் கேட்டு ஆயுதம் தூக்கி போராடிய ஜே .வி.பி பிரச்சினையல்ல, தமிழர் தாயகத்திற்காக வடக்கு கிழக்கை மட்டும் கோரி ஆயுதம் தூக்கிப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு தான் பிரச்சினை என்றால் அதன் வித்தியாசம் என்ன ?

விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சுதந்திரத்துக்காகவே போராடியது.ஆனால் ஜே .வி.பி முழு நாட்டையும் கைப்பற்றவே ஆயுதமேந்திப் போராடியது. முழு நாட்டையும் கைப்பற்றும் செயற்பாடு பயங்கரவாத செயற்பாடில்லை, தமிழர் தாயகத்தை மட்டும் கேட்டு போராடியது மட்டும் பயங்கரவாத செயற்பாடா? இது தான் இனவாதம். இந்த நிலைப்பாடு தான் நாட்டை இன்றும் பிளவு படுத்தி வைத்திருக்கின்றது

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்து 3 சட்டங்களை கொண்டுவரவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் என்பது ஒரு கொடிய விஷப் பாம்பை போன்றது, அந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகவும்,அதற்கு பதிலாக பிறிதொரு சட்டம் இயற்றப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாரதூரத்தன்மையை இரத்துச் செய்வதாக வீதி வீதியாக சென்று உறுதியளித்த ஆளும் தரப்பு இன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக மூன்று கொடிய விஷப்பாம்புகளை உருவாக்க தீர்மானித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மிக கொடிய, மோசமான அம்சங்கள் 3 சட்டமூலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தை மறுதழிக்கும் செயற்பாடு.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம்,ஆகையால் அந்த சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் மாவீரர் வாரத்தில் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் பலர் இந்த சட்டத்தை கொண்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர் . பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் .எமது கட்சியின் பொதுச்செயலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நினைவேந்தலுக்கு தொடர்ச்சியாக இடையூறு விளைவிக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட முடியாது.

ஜே .வி.பி.சிங்கள இனத்துக்காக போராடியது ஆகவே அதனை இனவாதம் என்று குறிப்பிட முடியாது விடுதலைப்புலிகளின் தமிழ் இனத்திற்கான போராட்டத்தை ஏற்க முடியாது என்பதே இந்த அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக உள்ளது.

நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமானால் இவ்வாறான இனவாத செயற்பாடுகளில் இருந்து அரசாங்கம் விலக வேண்டும். கடந்த ஆட்சியாளர்கள் இனவாத போக்கில் செயற்பட்டதால் தான் இந்த நாட்டில் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெற்றன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.இருப்பினும் அந்த இனவாத போக்கில் இருந்து விடுபட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை.

இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை அரசாங்கம் முழுமையாக நீக்க வேண்டும்.அப்போது தான் இந்த நாடு உருப்படும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *