இலங்கை

வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கால்வாசி ஆக்கிரமிப்பு!; மொத்த நிலப்பரப்பான 5,98000 ஏக்கரில் 4,32000 ஏக்கர் அவர்கள் வசம் என ரவிகரன் கடும் குற்றம்சாட்டு

முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய மொத்த நிலப்பரப்பு 5,98000 ஏக்கர் அளவில் உள்ள நிலையில் அதில் ஏறத்தாள 4,32000ஏக்கர் நிலப்பரப்பு வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிலுள்ளதாக வன்னிமாவட்ட எம்.பி .துரைராசா ரவிகரன் குற்றம்சாட்டினார்

பாராளுமன்றத்தில்   இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்திலேயே பொதுநிர்வாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் .இவ்வாறு நேரடியாக குற்றம்சாட்டிய ரவிகரன் எம்.பி மேலும் பேசுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்கள் அதிகமான நிலப்பரப்புக்களை அபகரித்து வைத்திருக்கின்றனர்.

குறிப்பாக 5,98000 ஏக்கர் அளவில்தான் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய மொத்த நிலப்பரப்புக் காணப்படுகின்றது.அதில் ஏறத்தாள 4,32000ஏக்கர் நிலப்பரப்பானது வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பிலுள்ளது.

இவ்வாறு வனவளப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளுக்குள் மக்களுடைய நெற்செய்கைக் காணிகள், மக்களின் பயன்பாட்டிலுள்ற காணிகள், சிறுதானிய பயிர்ச்செய்கைக்காணிகள் என்பனவும் அடங்குகின்றன. இதனால் அந்த காணிகளுக்குரிய மக்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

எனவே இந்தக் காணிகளை விடுவிப்பதுதொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதற்குப் பதிலளித்த பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன,

மக்களுக்குச் சொந்தமான காணிகள், குறிப்பாக உறுதிப் பத்திரமுள்ள காணிகளோ அல்லது மக்கள் இதற்கு முன்னர் பயன்படுத்திய காணிகளோ வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருப்பின் அவ்வாறான காணிகளை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன அந்த வகையில் பாதுகாப்புத் துறையினர் வசம் உள்ள காணிகளில் ஒரு பகுதி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் உபயோகத்திற்கான காணி அவ்வாறு காணப்படுமானால் அவற்றை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *