உலகம்

பங்களாதேஷில் ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் 36 சதவீதம் உயர்வு

வாரக்கணக்கிலான தொழிலாளர் போராட்டங்களைத் தொடர்ந்து, பங்களாதேஷ அரசின் சம்பள சபை ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 36% உயர்த்தி 17,000 டாக்காவாக (சுமார் 139 அமெரிக்க டொலர்) நிர்ணயித்துள்ளது.

முந்தைய சம்பள உயர்வுகளுடன் (2023-இல் 56%, 2018-இல் 51%, 2013-இல் 77%) ஒப்பிடுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட மிகக் குறைந்த ஊதிய உயர்வு இதுவாகும் என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்கள் ஆரம்பத்தில் 32,000 டாக்கா கோரி, பின்னர் 18,000 டாக்காவாகக் குறைத்துக் கொண்டனர். சுமார் 12 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஆறு பேர் கொண்ட குழு 4-2 என்ற வாக்கு அடிப்படையில் 17,000 டாக்கா ஊதியத்திற்கு ஒப்புதல் அளித்தது.

 

புதிய கட்டமைப்பின் கீழ், 4-ஆம் நிலைத் தொழிலாளர்களுக்கு 17,000 டாக்கா முதல் 1-ஆம் நிலைத் தொழிலாளர்களுக்கு 21,500 டாக்கா வரை மாத சம்பளம் வழங்கப்படவுள்ளது.

 

ஒப்பீட்டளவில் குறைவான இந்த ஊதிய உயர்வு, ஆடைத் தொழில்துறையில் உற்பத்தியைப் பாதித்துள்ள அமைதியின்மையைத் தணிக்கப் போதுமானதாக இருக்காது எனக் கருதப்படுகிறது.

 

செவ்வாய்க்கிழமை 397 தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலையில் இருந்ததாகவும், மேலும் 84 தொழிற்சாலைகள் தொழிலாளர் சட்டத்தின் “வேலை இல்லை, ஊதியம் இல்லை” என்ற விதியின் கீழ் மூடப்பட்டிருந்ததாகவும் பங்களாதேஷ் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (BGMEA) தெரிவித்துள்ளது.

 

18 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டங்களின் போது 317 தொழிற்சாலைகள் சுமார் 428 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான உற்பத்தியை இழந்ததாகவும், கொள்முதல் நிறுவனங்கள் சுமார் 254 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான முன்பதிவுகள் வேறு நாடுகளுக்கு மாற்றியதாகவும் BGMEA நடத்திய ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் ஊதியத்தை உயர்த்துவது உற்பத்திச் செலவுகளை அதிகரித்து போட்டித்தன்மையைப் பலவீனப்படுத்தும் என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். அதே சமயம், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பேணுவதற்கும் இத்துறையில் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் அதிக ஊதியம் அவசியம் என்று தொழிலாளர் உரிமைக் குழுக்கள் வாதிடுகின்றன.

 

புதிய ஊதியம் டிசம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், தொழிலாளர்கள் ஜனவரி மாதம் முதல் உயர்த்தப்பட்ட ஊதியத்தைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *