கவிதைகள்

“ஒளிவளர் விளக்குகள் ஏற்றிடுந் திருநாள்” …. கவிதை …,  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
            மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 
 
கருணையின் வடிவாய் கடவுள் இருக்கிறார்
ஒளிவடி வாகியும் இருக்கிறார் கடவுள்
கடவுளை பற்பல வடிவமாய் பார்க்கிறார்
கற்பனை கற்சிலை ஆக்கியும் நிற்கிறார்
 
ஒவ்வொரு மாதமும் உயர்வுடை மாதமே
உயர்வுடை தத்துவம் உணர்த்திடும் மாதமே
கார்த்திகை என்றதும் கருத்தெலாம் வருவது
கனற்பொறி தோன்றிய கந்தனின் தோற்றமே
 
கனற்பொறி என்றதும் கந்தனின் தந்தை
கயிலை நாதனே கருத்தினில் வருவான்
ஒளிப் பிளம்பாக உமைபாகன் தோன்றிய
உயர்வினைப் பெறுவதும் கார்த்திகைத் தினமே
 
தந்தையும் மகனும் சம்பந்தம் ஆகிட
கார்த்திகைத் தீபம் வந்தமைந் திருக்கு 
ஒளியாய் இறைவன் இருக்கிறான் என்பதை
கார்த்திகைத் தீபம் காட்டவே அமைந்தது
 
அயனும் மாலும் ஆணவம் கொண்டனர்
அவரவர் கடவுள் தாமே என்றனர்
ஜோதிப் பிளம்பாய் பரமன் தோன்றினார்
அடிமுடி தேடினார் அரனடி பணிந்தார்
 
அடிமுடி தேடியே அலைந்தவர் ஆணவம்
அகன்ற நன்னாளே கார்த்திகைத் திருநாள்
கார்த்திகைத் திருநாள் ஏற்றிடுந் தீபம்
கசடினை அகற்றிக் காட்டிடும் நல்வழி 
 
அடிமுடி தேடிய வரலாறு கதையே
அயனும் மாலும் வந்ததும் கதையே
ஆண்டவன் ஒளியாய் வந்தான் என்பதும்
கதையே ஆகினும் கருத்து நிறைந்தது
 
ஒளியெனும் தத்துவம் உண்மையே ஆகும்
ஒளியது வந்தால் இருளது அகலும்
இருளது அகன்றால் இறைவன் தெரிவான்
ஒளியாய் இருப்பதால் இறைவனும் உண்மையே 
 
ஒளிவளர் விளக்கு இறைவன் ஆவான்
ஒளிவளர் விளக்கை உலகம் போற்றுது
ஒளிவளர் விளக்கை உவப்புடன் ஏற்றினால்
ஒளிவளர் விளக்காய் இறைவன் தெரிவான் 
 
ஒளிவளர் விளக்குகள் ஏற்றிடுந் திருநாள்
உயர்வுடைக் கார்த்திகைத் தீபத் திருநாள்
ஏற்றிடும் விளக்குகள் அனைத்தும் எமக்கு
இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றதை அளிக்கும் !  

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *