உலகம்

இந்தியாவைப் பார்த்து வியந்த புடின் ; மோடியுடனான உரையாடலை நினைவுகூர்ந்து புகழாரம்

இந்தியாவின் மொழி மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மை தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

செர்பியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் எமிர் குஸ்தூரிகாவுடனான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது அண்மைய கலந்துரையாடல் குறித்துப் பேசிய புடின், இந்தியாவின் மொழி, கலாசாரம் மற்றும் பண்பாட்டு அம்சங்கள் தொடர்பில் இருவரும் விரிவாகக் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 150 கோடி மக்கள் வசிப்பதாகவும், அவர்களில் 60 முதல் 70 கோடி பேர் மட்டுமே ஹிந்தி மொழியை முதன்மையாகப் பேசுவதாகவும் பிரதமர் மோடி தன்னிடம் தெரிவித்ததாக புடின் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஏராளமான பிராந்திய மொழிகளும், பல்வேறு கலாசாரங்களும் காணப்படுகின்றன.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வாழ்ந்தாலும், ஒரே நாட்டில் இணைந்து வாழ்வது மிகவும் வியப்புக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல நூறு மொழிகள் மற்றும் கலாசாரங்களைக் கொண்ட இந்திய மக்கள் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்வது உலக நாடுகளுக்கு வியப்பளிக்கும் அம்சமாகும் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் நாகரிகம் மிகவும் தொன்மையானது எனக் குறிப்பிட்ட புடின், அந்நாட்டின் வரலாறு, மொழி மற்றும் கலாசாரச் செழுமை மீதான தனது ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான அண்மைய உரையாடல் இந்தியாவின் மொழி மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மை குறித்த தனது புரிதலை மேலும் ஆழப்படுத்தியுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *