நாமல் ராஜபக்ஷவை சிறிமாவோவுடன் ஒப்பிடுவது அவமதிப்பு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நாமல் ராஜபக்ஷவை ஒப்பிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு ஒப்பிடுவது சிறிமாவோ பண்டாரநாயக்கவை அவமதிப்பதாகும். அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காகவே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
தனிப்பட்ட வெறுப்பை முன்னிலைப்படுத்தியே எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் யோசனை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ஊழல் மோசடிக்காக சிறைக்குச் சென்றுள்ள நாமல் ராஜபக்ஷவுக்காக குரல் கொடுக்கிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியிக் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினரை சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவிக்கிறார்.அரசியல் இலாபத்துக்காக தயாசிறி ஜயசேகர இந்தளவுக்கு செல்லக்கூடாது.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நாமல் ராஜபக்ஷவை ஒப்பிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு ஒப்பிடுவது சிறிமாவோ பண்டாரநாயக்கவை அவமதிப்பதாகும்.அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காகவே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.
எயார்பஸ் கொள்வனவில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை, கிரிஸ் கொடுக்கல் வாங்கலில் 75 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு அமையவே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை. அதற்கமைய அவருக்கு குடியுரிமையை நீக்கும் பிரேரணை கொண்டு வரப்படவில்லை என்பதை தயாசிறி விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
![]()