இலங்கை

பல அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் நாளை எதிர்ப்பில் ஈடுபட தீர்மானம்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளைய தினம் (23) அரச சேவையின் பல தொழிற்சங்கங்கள் தேசிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, அரச தொழிற்சங்கங்கள் ஏற்கனவே பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

அதற்கமைய, நாளைய தினம் (23) நாடளாவிய ரீதியில் தொடர் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு அவை திட்டமிட்டுள்ளன.

இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் நாளை (23) முதல் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

நாளைய தினம் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் இணைந்து தேசிய கறுப்பு எதிர்ப்புப் போராட்டமொன்றைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக ஐக்கிய ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் அமில சந்தருவன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் பதிலைப் பொறுத்து எதிர்வரும் வாரத்தில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகள் வேலைநிறுத்தப் போராட்டமாக உருவெடுக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்காவிட்டால், நவம்பர் 30 ஆம் திகதியளவில் பாடசாலைக் கட்டமைப்பை மூட நேரிடலாம் எனவும் அமில சந்தருவன் மேலும் தெரிவித்தார்.

 

அதேநேரம், நாடளாவிய ரீதியிலுள்ள சுகாதார ஊழியர்களும் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதற்கமைய, நாளைய தினம் நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நவம்பர் 30 ஆம் திகதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சுகாதார ஊழியர் தொழிற்சங்கங்கள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக டெம்பிட்டியே சுகதானந்த தேரர் மேலும் கூறினார்.

 

இதேவேளை, நாளைய தினம் அரச ஊழியர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தொழிலாளர் போராட்ட நிலையமும் ஆதரவளிக்கும் என அதன் செயலாளர் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.

 

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக எதிர்வரும் இரண்டு வாரங்களில் பல தொழிற்சங்க நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அதற்கமைய, நாளைய தினம் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கும், நவம்பர் 30 ஆம் திகதி சில துறைகளில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டங்களையும், மேலும் சில துறைகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டங்களையும் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அரசாங்கம் இது தொடர்பில் உரிய பதிலை வழங்காவிட்டால், இதனை விடவும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்குத் தொழிலாளர் போராட்ட நிலையம் தயாராக உள்ளதாகவும் துமிந்த நாகமுவ மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *