இலங்கை

இம்ரான்கான் குறித்து விவாதிக்க இலங்கையில் அனுமதி மறுப்பு: சஜித் கேள்வி

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான பிரேரணை மீது நாடாளுமன்ற விவாதத்தை நடத்த இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்தை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில்  உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்கள் தொடர்பாக கேள்வி எழுப்புவதற்கு எதிர்க்கட்சிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து விமர்சித்தார்.

இம்ரான் கான் தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்திருந்தார். எனினும், குறித்த விவாதம் இலங்கை – பாகிஸ்தான் இராஜதந்திர உறவுகளை பாதிக்கக்கூடும் என்ற காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த விடயம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரால் முன்வைக்கப்பட்டதாகவும், இருதரப்பு உறவுகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக தனது கருத்து கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சபாநாயகர் தன்னிடம் கருத்து கோருவதற்கு முன்னரே, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவுடன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்ததாகவும் சஜித் தெரிவித்தார்.

அரசியல் இலாபங்களுக்காக இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கம் தமது கட்சிக்கு இல்லை என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், அதேவேளை, குறித்த விவாதம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கேள்வி எழுப்புவதற்குக்கூட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானில் நீதிமன்ற விசாரணைகளில் நிலுவையில் உள்ள விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழ் விவாதிக்க முடியாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்திருந்த கருத்தையும் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டார்.

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சபாநாயகர் வெவ்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றுவதாக குற்றஞ்சாட்டிய அவர், முக்கியமான விடயங்களை முன்வைக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக தடைகள் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான அணுகுமுறை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் தீர்மானங்களை கேள்விக்குட்படுத்துவதற்கான எதிர்க்கட்சியின் உரிமையை நாடாளுமன்றம் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *