இலங்கை

மட்டக்களப்பில் இளைஞனைக் கடத்திக் கொலை செய்த ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த 8 பேருக்கு மரண தண்டனை

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவர் 2008ஆம் ஆண்டு வானில் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில், ஒன்பதாவது எதிரியை வழக்கிலிருந்து விடுதலை செய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், ஏனைய எட்டுப் பேருக்கும் நேற்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரை, அப்போது செங்கலடியிலிருந்த ஈ.பி.டி.பி. முகாமில் தங்கியிருந்தவர்கள் வானில் கடத்திச் சென்று கொலை செய்து புதைத்து, அதன் மீது வாழைமரம் நட்ட சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் ஒன்பது பேரைக் கைது செய்தனர். அவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

நீதவான் நீதிமன்ற விசாரணையின் பின்னர், இந்த வழக்கு 2016ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வானும் பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இவ்வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முதலாம் எதிரி ‘ரவி’ என அழைக்கப்படும் தர்மலிங்கம் இளமாறன், வீரக்குட்டி சேகர், ‘விஜய்’ என அழைக்கப்படும் மகேந்திரராஜா வினோராஜ், ‘ஜெக்கா’ என அழைக்கப்படும் யோகராசா ஜெயக்குமார், ‘சிறி’ என அழைக்கப்படும் சிறிஸ்கந்தராஜா நாகநாதன், ‘சிவா’ என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகராசா, ‘அருள்’ என அழைக்கப்படும் அருணாச்சலம் ராமச்சந்திரன்,’விஜி’ என அழைக்கப்படும் கோவிந்தன் பிரதீபன் ஆகிய எட்டுப் பேரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படட நிலையில் அனைவருக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்

தீர்ப்பு வழங்கப்பட்ட வேளையில், முறைப்பாட்டாளர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், குற்றம் சாட்டப்பட்ட எட்டுப் பேருக்கும் பின்வரும் தண்டனைகள் விதிக்கப்பட்டன:

முதலாவது குற்றச்சாட்டு: மரணத்தை விளைவிக்கும் பொது நோக்கத்தைக் கொண்ட சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாக இருந்தமைக்காக, தண்டனைச் சட்டக்கோவைப் பிரிவு 140-இன் கீழ் 6 மாதக் கால சாதாரண சிறைத்தண்டனை.

இரண்டாவது குற்றச்சாட்டு: பொது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டுச் சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாக இருந்து ஆட்கொலை புரிந்தமைக்காக, தண்டனைச் சட்டக்கோவைப் பிரிவு 296-இன் கீழ் மரண தண்டனை.

மூன்றாவது குற்றச்சாட்டு: தேவதாஸ் சுரேஷ்குமாரின் மரணத்தை விளைவித்தமைக்காக, தண்டனைச் சட்டக்கோவைப் பிரிவு 296-இன் கீழ் மரண தண்டனை.

ஒன்பதாவது எதிரி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டுப் பேரும் உடனடியாக நீதிமன்றத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *