இலங்கை

ஞானசாரரின் 4 வருடக் கடூழியச் சிறை உறுதி; மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

2024ஆம் ஆண்டில் மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அந்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதியரசர்கள் குழாம், மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்வதாக அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் கூரகல விகாரை விவகாரம் தொடர்பில் கொழும்பு கிருளப்பனை பகுதியில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலும் மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் ஞானசாரர் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பு 2024 மார்ச் 28ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட போது, முதலாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் வெவ்வேறாக அறிவிக்கப்பட்டதுடன், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக 50,000 ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருந்தது.

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட 2 குற்றப்பத்திரிகைகள் இரண்டிலும் ஞானசார தேரர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக ஞானசார தேரரால் அதேவருடம் ஏப்ரல் மாதத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த தீர்ப்பு மீளாய்வு மனுவின் ஊடாக அவருக்கு பிணை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் நேற்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவருக்கு எதிரான தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் 6 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நிலையிலேயே இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *