இலக்கியச்சோலை

பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 22… செங்கதிரோன்

மக்கள் கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில், இரா.சடாகோபனின் பத்து நூல்களின் ஆய்வரங்கு கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 17.10.2026 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இலக்கியப் புரவலர் ஹாஸீம் உமர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக எம்.செந்தில்நாதன் (பிரதம நிறைவேற்று அதிகாரி, வீரசேகரி நிறுவனம்), சிறப்பு விருந்தினர்களாக பி.செல்வரட்ணம் (கவிஞர், வர்த்தகப் பிரமுகர், மனவளக் கலை நிபுணர், எம்.மகேஸ்வரன் (நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளைத் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் பின்வரும் நூல்கள் ஆய்வுக்கு எடுத்தாளப்பெற்றன.
• ‘எங்கள் கிராமம்’ – திருமதி.வானதி காண்டீபன்
• ‘கண்டிச்சீமையிலே’ – திரு.தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
• ‘சூழ்ச்சிகளையும், சதிகளையும் கடந்த வரலாறு’ – திரு. மு. தயாபரன்
• ‘சொந்த மண்ணின் அந்நியர்’ – திருமதி. வசந்தி தயாபரன்
• ‘இரத்த வரலாறு’ – திரு.ஆறுமுகம் சந்திரமோகன்
• ‘ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்’ – சட்டத்தரணி திருமதி.சுகந்தி இராஜகுலேந்திரா (கொழும்புத்தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர்)
• ‘தேத்தண்ணி’ – செல்வி. நிவேதா ஜெகநாதன்
(கவிஞர், இலக்கிய ஆய்வாளர்)
• ‘கசந்தகோப்பி’ – செங்கதிரோன்.த.கோபாலகிருஷ்ணன்
‘கசந்த கோப்பி’ –BITTER BERRY

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரான ‘டச்பேகர்’ பரம்பரையில் வந்த கிரிஸ்டீன் வில்சன் என்ற நாவலாசிரியையால் எழுதப்பெற்று BITTER BERRY எனும் தலைப்பிலே 1985 இல் லண்டனில் முதற்பதிப்பைக் கண்ட இந்த ஆங்கில மூலமொழி நாவல் இரா.சடகோபன் அவர்களின் மொழிபெயர்ப்பில், கொழும்பு 10 இல் அமைந்த சூரியா வெளியீட்டகத்தினால் 2010 இல் வெளியிடப்பெற்று ‘கசந்த கோப்பி’யாக நம் கரங்களில் தமிழில் கிடைத்திருக்கிறது.

இந்நாவலின் கதை நிகழும் காலம் 1859 இலிருந்து 1871 வரையிலான காலப்பகுதியாகும். நாவலின் பிரதான கதைக்களமாக கண்டிக்கு அப்பால் கம்பளைக்கு அருகில் அமைந்த ‘லந்தானா’ எனும் தோட்டம் விளங்குகிறது.

இலங்கையில் முதல் கோப்பித்தோட்டம் 1824 ஆம் ஆண்டு கம்பளைக்கருகில் சின்ஹபிட்டிய என்ற இடத்தில் ஹென்றிபர்ட் என்பவரால் அப்போதைய ஆளுனர் எட்வர்ட் பான்ஸ் உதவியுடன் ஆரம்பிக்கப்பெற்று ஹென்றிபர்ட் 1829 இல் கொலரா நோய்க்குப் பலியாகிவிட அவரது மகன் ஹென்றி சி பர்ட் அதைத் தொடர்ந்தார்.

பின் கோப்பிப்பயிரில் நோய் தொற்றிக்கொள்ள கோப்பித்தோட்டச் சொந்தக்காரர்கள் அதாவது ஆங்கிலத்துரைமார்கள் நட்டமடைந்து ஓட்டாண்டியாகிறார்கள். பெருந்தோட்டப் பொருளாதாரம் கோப்பிச் செய்கையிலிருந்து தேயிலைக்கு மாற்றம் பெறுகிறது.

இந்தப் பின்புலத்தில் ‘கசந்தகோப்பி’யின் கதை கோப்பிப் பயிர்ச்செய்கைக் காலத்தின் முழு வரலாற்றையும் தேயிலைப் பொருளாதாரத்தின் தோற்றத்தையும் வரலாற்று ரீதியாக உண்மைக் கதாமாந்தர்களுக்கூடாகப் பதிவு செய்கிறது.

இங்கிலாந்தில்தான் கதை ஆரம்பமாகிறது. இந்நாவலின் கதைச் சுருக்கம் இதுதான்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹியூநெவில் ஏற்கெனவே இலங்கையில் நிலம் வாங்கிக் கோப்பிச் செய்கையில் ஈடுபட்டிருப்பவன். இங்கிலாந்து சென்றிருந்தவேளை தனது மைத்துனனான டொம்நெவிலைச் சந்திக்க நேர்ந்தபோது இலங்கையில் கோப்பிச் செய்கை மிகவும் இலாபமீட்டும் தொழில் என்பதை எடுத்துரைத்து அவனது ஆவலைத்தூண்டி அவனையும் இலங்கையில் முதலீடு செய்ய அழைக்கிறான். தனது தோட்டத்தின் ஒரு பகுதியை அவன் வாங்கவும் வைக்கிறான். அதுவே, ‘லந்தானா’ தோட்டம்.

ஹியூவினால் தூண்டப்பெற்ற டொம் தனது காதல் மனைவி சாராவுடனும் ஏனைய பயணிகளுடனும் 500 தொன் பாரம் சுமக்கக்கூடிய ‘ஏரிஸ்’ என்ற கப்பலில் லண்டனிலிருந்து ஐந்து மாதங்களும் ஐந்து நாட்களும் பயணித்து இலங்கையின் காலித்துறைமுகத்தை அடைகின்றான்.

இது 1859 இல் நடைபெறுகிறது. கப்பல் பயணித்தின்போது திருமதி.மெக்லியோட்டின் அறிமுகம் கிடைக்கிறது. இதுவே கதையின் ஆரம்பம். மெக்லியோட் குடும்பத்துக்கு நாவலப்பிட்டிக்கும் கம்பளைக்குமிடையேயுள்ள ‘டண்டீ’ தோட்டம் சொந்தமானது.

அவர்கள் எதிர்பார்த்த ஹியூ அவர்களை வரவேற்க காலித்துறைமுகத்திற்கு வந்திருக்கவில்லை. தன்னுடைய தோட்டத்துடன் மைத்துனன் டொம்மின் ‘லந்தானா’ தோட்டத்தையும் அவனே பார்த்துவந்தான். ஹியூவின் அறிவுறுத்தலின்படி டொம் தபால் வண்டியான குதிரைவண்டியில் கொழும்பு வந்து கொள்ளுப்பிட்டியில் எட்வின் பரடே என்பவரின் வீட்டில் தங்கி கண்டி திரும்பி அங்கிருந்து ஹியூ அனுப்பியிருந்த தோட்ட மேற்பார்வையாளர் ‘கொன்சால்ஸ்’சின் உதவியுடன் லந்தானா தோட்டத்தை அடைகிறார்கள். அப்போது போக்குவரத்து குதிரைவண்டிதான்.

கொழும்பில் தங்கியிருந்த காலத்தில் பரடேயின் மனைவி அலிசன் மூலம் ஹியூ திருமணம் முடித்தது பற்றியும் அவன் மனைவி முதல் கப்பல் பயணத்தில் பிரசவத்தின் போது இறந்துவிட்டாளென்றும் அவனுக்கு ஆண் குழந்தையொன்று இருக்கிறதென்றும் புதிதாக அறிந்தும் கொள்கின்றனர்.

‘லந்தானா’ என்ற அறுநூறு ஏக்கர் கோப்பித்தோட்டத்தின் உரிமையாளராக டொம் ஆகினான். அதில் இருநூறு ஏக்கரில் கோப்பி. முந்நூறு ஏக்கர் காடு. மீதி மானாப் புல்நிலம். அந்த நாட்களில் மலையகத் தோட்டமொன்று எப்படியிருந்திருக்கும் என்பதை இவ் விபரங்கள் எடுத்துச் சொல்கின்றன. டொம் முக்கு ஏமாற்றத்தையும் அவை அளித்தன.

டொம்மும் சாராவும் லந்தானா தோட்டத்தை அடைந்தபோது அவர்கள் எதிர்பார்த்து வந்த வசதியான பங்களாவோ ஏனைய வசதிகளோ இல்லாதிருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் கவலையுமடைகிறார்கள். ஹியூ தங்களை ஏமாற்றிவிட்டதாக எண்ணுகிறார்கள்.

மானாப்புல் வேய்ந்த குடிசையுடனும் அக்குடிசையில் குடியிருக்கும் தேன் – எலி – பூரான்களுடனும் ஜன்னல்கூட இல்லாத புகைபிடித்த சமையலறையுடனும்தான் ‘லந்தானா’ தோட்டம் அவர்களை வரவேற்கிறது. சிங்களமொழியோ தமிழ்மொழியோ தெரியாத பிரச்சினை வேறு.

காட்டுச் சிறுத்தைகளிலிருந்தும் கோழி பிடிக்கவரும் கருநாகம் மற்றும் விரிபுடையன் பாம்புகளிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் கோப்பிப் பயிரின் அடியைத் தோண்டிப் பயிர்களை வேரறுக்கும் பெருச்சாளிகளின் தொல்லை எனப் பிரச்சினைகள் பல.

இவ்வாறான சவால்களையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து லந்தானா தோட்டத்தை அபிவிருத்தி செய்தல் – டொம், சாரா தாம்பத்திய வாழ்க்கை – தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத்துரைமார் – இந்தியத் தொழிலாளர்களை அழைத்துவரும் தமிழ்க்கங்காணிமார் – சிங்கள ஒப்பந்தக்காரர்கள் – அயல் கிராமவாசிகள் மற்றும் ஊர்ப்பெரியவர்கள் ஆகியோர்களுக்கிடையிலான உறவும் ஊடாட்டமும் என நாவல் நகர்த்தப் பெறுகிறது.

மேற்கத்தைய நாகரிகம் பழக்கவழக்கங்கள் பண்பாடுகள் எவ்வாறு தோட்டங்களில் நிலவும் உள்@ர் நாகரிகம் பழக்கவழக்கங்கள் பண்பாடுகளுடன் சங்கமிக்கின்றன அல்லது சமாந்தரமாகச் செல்கின்றன என்பதை இந்நாவல் உட்சரடாக உணர்த்திச் செல்வது இந்நாவலுக்குப் பெறுமதி சேர்க்கிறது.

ஹியூவின் மகன் டேவிட் தோட்டத்தில் வளர்ந்து பெரியவனாகிறான். டொம், சாரா தாம்பத்திய வாழ்வில் கிடைத்த மகள் டயானாவும் தோட்டத்திலேயே வளர்கிறாள்.

கோப்பிச் செய்கையில் வரக்கூடிய பிரச்சினைகள் – சவால்கள் – அதிலுள்ள நுட்பங்கள் என்பன இந்நாவலினாடு கலாபூர்வமாகப் பதிவாகின்றன. உதாரணமாக, “தண்ணீரைத் திறந்து விடுங்கள்” என டொம் பணிப்புரை வழங்கினான். இயந்திரம் முடுக்கிவிடப்பட்டு உருளை சுழலத்தொடங்கியது.
தொகுதி தொகுதியாக கோப்பிக்கொட்டைகள் உருளையின் வாய்க்குள் கொட்டப்பட நீரும் சேர்ந்து சுழன்று சுழன்று கொட்டைகள் உரித்துக் கழுவப்பட்டு சுத்தமாக மறுபுறம் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் சென்று விழுந்தன. உரிக்கப்பட்ட தோல், பொக்கு, நார் என்பன நுரைத்த நீருடன் கஞ்சிபோல் வேறொருபுறம் கால்வாயை நோக்கி வெளியேறின.

கோப்பி தோலுரிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் பன்னிரண்டிலிருந்து பதினெட்டு மணிநேரம் பலகையிலான பீப்பாக்களில் நீரில் ஊறவைக்கப்பட்டன. இப்படிச் செய்வதன்மூலமே வெல்லக்காரம் நீக்கப்படுகின்றது. அதன்பின் ஓடும்நீரில் கழுவி காயவிடப்பட வேண்டும். அதன்பின் தீச்சூட்டிலோ சூரியவெப்பத்திலோ சுமார் மூன்று வாரகாலம் காய வைக்கப்படுகின்றது. உரிய முறையில் சுத்தம் செய்யப்பட்டு தயாரித்துக் காயவைக்கப்படும் கோப்பி வெள்ளை வெளேரென முத்துமுத்தாக மின்னிப் பிரகாசிக்கும்.

மேலும், இங்கிலாந்து அதாவது வெளிநாட்டுத் தனவந்தர்களின் வர்த்தக நோக்கமுடைய – இலாபமீட்டலை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கோப்பிச் செய்கை குறித்த உள்@ர் வாசிகளின் உணர்வுப் பிரதிபலிப்பையும் நாவல் பதிவு செய்யத் தவறவில்லை.

சுத்தமாக வெள்;ளையாடையணிந்த – வயதான – தலைவாரிக் குடுமிகட்டியிருந்த கிராமத்துப்பெரியவர் ஒருவர் சிங்களப் பாரம்பரியத்தின்படி வெற்றிலை வைத்து சிரம்தாழ்த்தி கரங்கூப்பி வணக்கம் செலுத்தி டொம்மிடம் கூறிய கூற்றாக இது பதிவாகிறது.

“……… எங்கெல்லாம் கோப்பித்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டனவோ அங்கிருந்த எங்கள் வயல்வெளிக்கெல்லாம் இதே கதிதான் நேர்ந்துள்ளது. உங்கள் கோப்பித் தோட்டங்கள் காரணமாக எங்கள் பாரம்பரிய நிலங்கள், ஆறுகள், ஓடைகள் திசை திருப்பப்பட்டுவிட்டன அல்லது மாசடைந்து போய்விட்டன”

மேலும், இந்நாவலில் வரும் களவர்ணனைகளும் சம்பவ வர்ணனைகளும் அளவான அழகியோடு வாசகனை வசீகரிக்கும் வகையில் அமைந்துள்ளன.

“காலைச்சூரியனின் பொற்கிரணங்கள் அவர்களைத் தரிசித்தபோது தொடுவானம் மிக அருகில் வந்திருந்தது. கரை மிகப் பளிச்சென்று மின்னியது. வெண்மணற்பரப்பில் அலைகள் சென்று மோதித்திரும்பின. அவை வெண்நுரைகளைக் கக்கி பின் அவற்றை தாமே விழுங்கிச் சென்றன. அதற்கப்பால் வரிசைவரிசையாக தென்னைமரங்கள் அவற்றுக்கூடாக மேலெழுந்த மலைத்தொடர்களும் நீலவானமும் பிரமிப்பையூட்டின”
“கன்றுகள் நட மலைச்சாரல்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. அவை மண்கிளறப்பட்டு செந்நிறமாகக் காணப்பட்டன. கடும்பச்சையான பழைய கோப்பி மரங்களும் இளமஞ்சலான புதிய தளிர்விடும் கோப்பி மரங்களும் புதிதாக மண்கிளறப்பட்ட செம்மண்ணதரையும் இணைந்து அந்த மலைச் சிகரத்தை பல வண்ணத் தாவணி அணிந்த இளம் குமரிப்பெண் போல் ஜோடனை செய்து காட்டின”

ஆகிய வரிகளை உதாரணங்களாகக் காட்டலாம்.

இந்நாவலில் கையாளப்பட்டிருக்கும் வட்டாரவழக்குச் சொற்கள் இந்நாவலின் மொழிநடைக்கு வளம் சேர்க்கின்றன.

இரண்டு உதாரணங்கள்,
‘குடாப்பு’ – கோழிகளை அடைக்கும் கூடு
‘தட்டாம்பூச்சி’ – தும்பி

கோப்பிக்காலக் கதையைக் கூறும்போது அதிலிருந்து பிரிக்கமுடியாதவாறு தோட்டத்தொழிலாளர்களினதும் உள்ளுர் கிராமவாசிகளினதும் வாழ்வியல் கோலங்களையும் ஆங்காங்கே படம் பிடித்துச் செல்வது நாவலின் பிறிதோர் பரிமாணம் ஆகும்.

டொம், சாரா இருவரினதும் இலங்கைத் தாம்பத்திய வாழ்க்கையினையும் – அவர்கள் மேற்கொண்ட கோப்பிச் செய்கையினையும் குவிமையமாகக் கொண்ட இக் ‘கசந்த கோப்பி’ எனும் நாவல் கோப்பிக்காலம் முழுவதையும் உள்ளடக்கி அதன் பிற்பகுதியிலே தேயிலைப் பயிர்ச்செய்கையையும் தொட்டு நிறைவு பெறுகிறது.

டொம்மும் சாராவும் தாம் கனவுகண்ட பங்களாவொன்றினை லந்தானா தோட்டத்தில் நிர்மாணம் செய்கிறார்கள். 1868 ஆம் ஆண்டின் இறுதியில் அது பூர்த்தியாகிறது. 1868 ஆம் ஆண்டு மிக உச்சக்கட்டத்திலிருந்த – ராஜ அந்தஸ்து பெற்றுக் கோலோச்சிய கோப்பி உற்பத்தியால் கோப்பி ஒரு அந்தர் 82 பவுண் வரையில் உலகச்சந்தையில் விலை உயர்ந்தது.

பின் நிலைமை மாறுவதையும் இந்நாவல் பதிவு செய்கிறது.

இலங்கையில் பெரிய அளவில் கோப்பிச்யெ;கை ஆரம்பிக்கப்பட்டபோது அப்போது ஆளுநராகவிருந்த எர்வர்ட் பான்ஸ் கொழும்பு ஸ்லேவ்ஜலண்டில் அமைக்கப்பட்டிருந்த தாவரவியல் பூங்காவைக் கண்டி கண்ணொருவையில் அமைந்திருந்த தனது கோப்பித்தோட்டத்தின் ஒரு பகுதிக்கு மாற்றியிருந்தார். இதுவே பின்னர் பேராதனை தாவரவியல் பூங்காவானது. இதில் கடமையாற்றுவதற்கு 1840 இல் கலாநிதி ஜி.எச்.கே.துவாய்ட்ஸ்; வந்திருந்தார். இந் நாவலின் பிற்பகுதியில் இவரும் கதா மாந்தராகிறார்.
சாராவின் புதிய வீட்டின் வராந்தாவில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக பலர் கூடியிருக்கிறார்கள். அவர்களிடையே கலாநிதி ‘துவாய்ட்ஸ்’ உம் இருக்கிறார்.

மடுல்சீமாவைச் சேர்ந்த ஒரு தோட்டத்தில் கோப்பிச் செடிகளுக்கு வந்துள்ள நோய்பற்றிக்கூறி அந்தநோய் பரவக்கூடிய ஆபத்துள்ளதாகவும் அந்நோயினால் எதிர்காலத்தில் கோப்பி உற்பத்தியில் பின்னடைவு வருமென்றும் எதிர்வுகூறி எச்சரிக்கிறார். யுக புருஷர்களில் ஒருவரான விஞ்ஞானி சார்ள்ஸ் டார்வினையொத்தவராக துவாய்ட்ஸ் இருந்தார் என நாவல் பதிவு செய்கிறது.

டொம்மின் மைத்துனன் ஹியூ தனது அரலிய தோட்டத்தைக் கவனிக்காமல் கூடுதலான நேரத்தைக் குதிரைப்பந்தயங்களிலும் குதிரையோட்டத்திலும் வேட்டையாடுதலிலும் கழிக்கிறான். இது டொம்மையும் மற்றையவர்களையும் கவலை கொள்ளச் செய்கிறது.

சாரா இரண்டாவது தடவை கர்ப்பமுற்று ஆண்மகவொன்றைப் பிரசவிக்கக் காத்திருக்கும்போது மலைச்சரிவில் வழுக்கி விழுந்ததால் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாமல் போகிறது. கர்ப்பம் கலைகிறது. அதனால் சாரா லந்தானா தோட்டத்தையே வெறுக்குமளவுக்கு விரக்தியுறுகிறாள்.

டொம்மோ லந்தானா கோப்பித்தோட்டத்தை அபிவிருத்தி செய்வதிலேயே கூடிய கவனம் செலுத்துகிறான். மனைவியான தன்னைவிட கோப்பித்தோட்டத்தையே டொம் கூடுதலாக நேசிக்கிறான் என ஐயுற்று மனமுடைகிறாள் சாரா. கோப்பித்தோட்டம் அவளுக்குக் கசக்க ஆரம்பிக்கிறது.

கலாநிதி துவாய்ட்சின் எச்சரிக்கையைத் தோட்டத்துரைமார்கள் பொருட்படுத்தவில்லை.
மே மாதமளவில் மிகச்சிறிதாகக் கோப்பிச் செடியின் இலைகளில் தோன்றிய செவ்விளநீர் நிறத்திலான புள்ளிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பல்கிப்பெருகி இலைகளைக் கருகச்செய்தன. போகப்போக கோப்பிமரங்களில் இலைகள் உதிர்ந்துபோய் அவை இலைகளற்ற மரங்களாகக் காட்சிதந்தன. இறுதியில் இந்நோய் அம்மரங்களின் உயிரையும் உறிஞ்சிவிட அவை காய்ந்து பட்டுப்போயின. இந்நோய்க்கு ‘ஹெமிலியா வெஸ்டாரிக்ஸ்’ எனப் பெயரிடப்பெற்றது. தோட்டத்துரைமார்கள் இதனை ‘அழிக்கும் எமிலி’ என அழைத்தனர்.

காலங்கள் கரைந்து மாற்றுப்பயிர்ச்செய்கையாக தேயிலை பயிரிடப்படுகிறது. ஹியூவின் அரலிய கோப்பித் தோட்டம் அவனது மகன் டேவிட் டினால் தேயிலைத்தோட்டமாக மாறுகிறது. கோப்பி இருந்த இடத்தை தேயிலை கைப்பற்றிக்கொண்டது.

இந்நாவல் புனைவு மற்றும் மொழிபெயர்ப்பு எனும் விடயங்களைக் கடந்து இலங்கையின் கோப்பிச் செய்கைக் காலத்தையும் தேயிலைப் பயிர்ச்செய்கையின் ஆரம்பகாலத்தையும் உண்மைப்பாத்திரங்களினூடாகவும் உண்மைச் சம்பவங்களின் ஊடாகவும் பதிவு செய்யுமொரு வரலாற்று ஆவணம் ஆகும்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதாயின், மலை முகடுகளிலிருந்து கொட்டும் அருவி போன்ற வசீகரமான புனைவுமொழி – பொங்கலிலே பயறு கலந்தது போன்ற அளவான அழகியல் – இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பதற்கிணங்க அதீத கற்பனைகளற்ற யதார்த்தப் பண்புகள் – வட்டாரவழக்குச் சொல் பிரயோகங்கள் போன்ற காரணிகளால் ‘கசந்தகோப்பி’ எனுமிவ் மொழிபெயர்ப்பு நாவலைப் படிக்கும்போது மொழிபெயர்ப்பாகத் தோன்றாமல் தமிழிலேயே மூலக்கதையொன்றைப் படிப்பது போன்ற உணர்வையே தந்தது. இதுவே இந்நூலின் வெற்றி. இரா.சடகோபனுக்குப் பாராட்டுக்கள்.

மேலும், இன்னொரு விடயத்தையும் இங்கு சொல்லவிழைகிறேன். இக்கதையில் வருகின்ற ‘லந்தானா’ என்ற கோப்பித் தோட்டத்திற்கும் மொழிபெயர்ப்பாசிரியர் இரா.சடகோபன் பிறந்துவளர்ந்த ‘மாசிவலை’த் தேயிலைத்தோட்டத்திற்குமிடையில் பெரிதும் வித்தியாசமில்லை என்பதால் இந்த மொழிபெயர்ப்பைத் தான் மகிழ்ச்சியோடு செய்தாகச் சடகோபன் தனது ‘என்னுரை’யில் குறிப்பிட்டுமுள்ளார். அதனால்தான் என்னவோ இந்நாவலின் ஒவ்வொருவரியிலும் மலையகத்தோட்டத்து மண்வாசைன கமழ்கிறது.

நிறைவாக, ‘கசந்தகோப்பி’ எனுமிவ் மொழிபெயர்ப்பு நாவலைப் படித்து நுகர்கையில் கசக்கவில்லை, தேநீராக இனிக்கிறது.

– செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *