இலங்கை

கடந்த முறை ஏமாற்றியதால் அரசுக்கு இம்முறை ஆதரவளிக்கோம்; மனோ கணேசன் தெரிவிப்பு

எங்களுக்கு கடனும் இல்லை, எங்களுக்கு பைலும் இல்லை. அதனால் நாம் யாருக்கும் பயப்பட மாட்டோம் .கடந்த முறை வரவு செலவுத்திட்டத்திற்கு நாம் ஆதரவளித்தும் இந்த அரசு எம்மை ஏமாற்றிவிட்டது.அதனால் இம்முறை ஆதரவளிக்க நாம் தயாரில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

மலையக மக்களுக்கு இன்னும் காணி உரிமை வழங்கப்படவில்லை. அந்த மக்களுக்கு காணி உரிமை வழங்கும் நடவடிக்கையை நாங்கள் தான் ஆரம்பித்திருந்தோம். அதனால் நாங்கள் ஆரம்பித்த இந்த பயணத்தை முன்னெடுத்துச் செல்லுமாறே ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.மலையக தோட்டங்களில் இருக்கும் தரிசு காணிகளை தனியார் தோட்ட கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கையை நாம் எதிர்க்கவில்லை ஏனெனில் இந்த காணிகள் தனியார் கம்பனிகளின் கீழ் இருப்பதால்தான் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

நாங்கள் ஒருபோதும் மலையக மக்களை ஏமாற்றியதில்லை. ஏமாற்றியவர்கள் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் எங்களை சேர்க்க வேண்டாம். அதனால் எமது மக்களை ஏமாற்ற நினைத்தால், அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் . ஏனெனில் நாங்கள் யாருக்கும் பய ப்பட மாட்டோம் . கடனும் இல்லை, எங்களுக்கு பைலும் இல்லை. 200 வருடம் இந்த நாட்டுக்காக உழைத்த அந்த மக்களின் பிரஜா உரிமை, காணி உரிமை கிடைத்த பின்பே பூரணமாகிறது என்பதே எமது நிலைப்பாடு.அதனால் இந்தக் காணி உரிமை வழங்கும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய பின்னரே காணி குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்துக்கு செல்ல வேண்டும்.

எமது மக்கள் தொடர்பில் எங்களுக்கு அக்கறை இருப்பதுபோன்று, இந்த நாடு தொடர்பிலும் அக்கறை உண்டு . அதனால் நாடு முன்னேற்றம் அடைவதற்கு தொழிற்சாலைகள் தொடர்ந்து செயற்பட வேண்டும் . இதுதொடர்பில் கலந்துரையாட குழு ஒன்றை அமைத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த குழுவில் எமது பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ளவேண்டும் ஏனெனில் இந்த ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு இன்னும் 18 வருடங்கள் இருக்கின்றன. அதனால் குறித்த குழுவில் மாற்றங்களை மேற்கொண்டு, நாங்களும் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்க தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை ஜனாதிபதிக்கு தெரிவிக் கின்றோம்.

அரசாங்கம் மலையக மக்கள் தொடர்பில் தெரிவித்துவந்த விடயங்களை செயற்படுத்த வேண்டும் . தோட்டத்தில் வேலை செய்யும் மற்றும் வேலை செய்யாத அனைவருக்கும் அங்கு காணி, வீடுகள் வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதி ஹட்டனுக்கு சென்றபோது, ஹட்டன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மலையக மக்களுக்கு தரிசு காணிகளை வழங்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால் 2 வருடங்கள் சென்றும் ஒரு அங்குலமேனும் இதுவரை வழங்கவில்லை. அதனால் 20 பேர்ச் காணி உரிமை வழங்கி, மலையக மக்களின் காணி உரிமைய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோன்று மலையக மக்களின் அரசியல் கலாசார உரிமைகளில் தோட்டக் கம்பனிகள் தலையிடுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அந்த மக்களும் இந்த நாட்டு மக்களே . அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பிரதேச செயலாளர், கிராமசேவகர்கள் பதில் சொல்லவேண்டிய நிலைக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறான நிலைமயை மேற்கொண்டால் தோட்டங்களை கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்துக்கு ஆதரவளிக்க நாங்கள் தயார்.

மேலும் கடந்த வருட வரவு செலவு திட்டத்தின்போது, மலையக மக்களுக்கு 200 ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தபோது, அதற்காக எமது கட்சி வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளித்தது. ஆனால் 200 ரூபா அதிகரித்து வழங்கிவிட்டு, வேலையையும் அதிகரித்திருந்தது. இது ஏமாற்று வேலை.இந்த முறை 200 ரூபா அதிகரிப்பதாக இருந்தால், அதனை சம்பள நிர்ணய சபைக்கு கொண்டு சென்று அதனை வர்த்தமானிப்படுத்த வேண்டும் என்ற உறுதியை வழங்க வேண்டும் என நான் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் ஜனாதிபதி இதுதொடர்பில் ஒரு வார்த்தைகூட தெரிவிக்கவில்லை. அதனால் இந்தமுறை அந்த ஏமாற்று நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *