வட, கிழக்கில் தனியார் காணிகளை வெகு விரைவில் விடுவிக்க நடவடிக்கை

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பொதுமக்களின் தனியார் காணிகளை வெகு விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கில் மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவித்தல் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ரவிகரன் எம்.பி சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து கூறுகையில்,
வடக்கு – கிழக்கு மாகாணங்களில், போரினாலும் இடப்பெயர்வினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னர் வசித்த மற்றும் வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்திய காணிகள் வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை விடுவிப்பதில் நிலவும் தாமதங்கள் காரணமாக, அக்குடும்பங்களின் மீள்குடியேற்றம், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் இயல்பு வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இக்காணிகளை விடுவிக்கும் நோக்கில், கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு திணைக்களங்களின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைந்த கூட்டங்கள் மற்றும் களஆய்வுகள் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நேரடியாக விடுவிக்கப்படக்கூடிய காணிகள் மற்றும் விடுப்பதற்குப் பரிசீலிக்கப்படவேண்டிய காணிகள் என வகைப்படுத்தப்பட்டு, அறிக்கைகளுக்குப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் இவ்வாறு அடையாளங்காணப்பட்ட காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியடையாதிருிருப்பது, பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்துக்கும் வாழ்வாதார மீட்சிக்கும் பெரும் தடையாக அமைந்துளது.
எனவே, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆவணப் பரிசீலனைகள், மாற்றுச்சான்றுகள் மூலமான உறுதிப்படுத்தல்கள், களப்பரிசோதனைகள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், நேரடியாக விடுவிக்கக்கூடியவை என அடையாளங்காணப்பட்ட காணிகளை மேலும் காலதாமதமின்றி விடுவித்து மக்களிடம் கையளிப்பதும் அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவின் பரிந்துரைக்காக சமர்ப்பிக்கப்பட்ட காணிகள் தொடர்பான கோரிக்கைகளை விரைவாகப் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து அவற்றை விடுவிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் இந்நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கான மாவட்ட வாரியான செயற்றிட்டத்தையும் காலவரையறையையும் வகுத்து காணி விடுப்பின் முன்னேற்றத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது என கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் கூறுகையில்,
காணி அபிவிருத்திச் சட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட காணிகள் கூட மக்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் நிரந்தர குடியமர்வுக்கு காணி விடுவிப்பு தடையாக இருப்பது தீர்க்கப்பட வேண்டியதொரு பிரச்சினையாகும் என்றார்.
இவரை தொடர்ந்து உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கூறுகையில்,
கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையின்றி பாதிக்கப்படுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் வட்டமடு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த கால்நடைகளை எங்கே மேய்ப்பது. இந்த விடயத்திற்கு சரியான தீர்வை வழங்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.
இதற்கு பதிலளித்து உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி கூறுகையில்,
இந்த பிரச்சினை தொடர்பில் எமது அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் குழுவொன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழுள்ள காணிகள் தொடர்பில் மீளாய்வு செய்யவும், விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்க 6 மாத கால அவகசம் வழங்கப்பட்டது. பெரும்பாலும் இந்த பணிகள் முடிவடைந்துள்ளது. கூடிய விரைவில் அந்தக் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியுமாக இருக்கும். கடந்த கால சுற்றறிக்கைகளை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி முன்னர் இருந்ததை விடவும் அதிகளவான காணிகளை விடுவிக்க முடியுமாக இருக்கும். பெறும்பாலும் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியுமாக இருக்கும் என்று நம்புகின்றோம் என்றார்.
![]()