சிவாஜிலிங்கத்தைப் போன்றவர்களின் ஆளுமை அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயம் தேவை

“இளைய தலைமுறையினர் அரசியலைக் கையில் எடுத்திருந்தாலும், அண்ணன் சிவாஜிலிங்கத்தைப் போன்றவரின் ஆளுமை அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயம் தேவை” எனத் தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகரில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற சிவாஜிலிங்கத்தின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
“தமிழக மக்கள் சார்பாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பத்து ஆண்டுகள் வாழ வேண்டியவர் இன்று எம்முடன் இல்லை என்பது பெரும் துயரம் மிக்கது.
அடுத்தடுத்து இளைய தலைமுறையினர் அரசியலைக் கையில் எடுத்திருந்தாலும், அண்ணன் சிவாஜிலிங்கத்தைப் போன்றவரின் ஆளுமை அடுத்த தலைமுறையினருக்குக் கட்டாயம் தேவை. அவரது இழப்பு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி, கொள்கை, கோட்பாடுகளின் அடிப்படையில் சிந்திக்கின்ற ஆளுமைகள் அவசியம்.
ஆயுதம் ஏந்திப் போராடும் வலிமை எமக்கிருந்தாலும் கூட, அந்தப் போராட்டம் நீர்த்துப் போகாமல் பாதுகாக்கும் வலிமையும், காலச்சூழலுக்கு ஏற்ப உத்திகளை மாற்றும் ஆற்றலும், அதேநேரம் எமது இலக்கைத் தவறவிடாத தெளிவும் கருத்தியல் புரிதல் மூலம்தான் உண்டாகும்” எனத் தெரிவித்தார்.
![]()