யாழில் பலர் பார்த்திருக்க போதை ஆசாமி இளைஞனைத் தாக்கி ஒரு தொகை பணம் பறிப்பு

யாழ்ப்பாணத்தில் பலர் பார்த்திருக்க பட்டப்பகலில் போதை ஆசாமி ஒருவர் இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து ஒரு தொகை பணத்தை அபகரித்துள்ளார்.
கல்வியங்காடு சந்தைக்கு அண்மித்த பகுதியில் உள்ள மதுபான சாலை வாசலில் நிறை போதையில் நின்ற நபர் , எதிரே உள்ள வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருவோரிடம் மிரட்டி பணம் பெற்று வந்துள்ளார்.
இதன்போது பணம் எடுத்து வந்த இளைஞன் ஒருவரிடமும் பணம் கேட்ட போது, இளைஞன் பணம் கொடுக்க மறுத்த போது, இளைஞனுடன் தர்க்கப்பட்டுள்ளார்.இளைஞனும் தர்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கிய போதையில் நின்ற நபர், இளைஞனிடம் இருந்து ஒரு தொகை பணத்தினையும் அபகரித்துள்ளார்.
இதன்போது, அருகில் உள்ள கடை பணியாளர்கள் வீதியில் சென்றவர்கள் என பலரும் அதனை வேடிக்கை பார்த்திருந்தனர்.
இது தொடர்பில் கடைப் பணியாளர்களிடம் வினவிய வேளை, அவர் தினமும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருபவர் எனவும், தாங்கள் அவருடன் முரண்பட்டால் , கடையின் மீது தாக்குதலோ , வியாபாரத்திற்கு இடையூறோ ஏற்படுத்துவார் என்பதால் தாம் அமைதியாக இருப்பதாக தெரிவித்தனர்.
அந்த போதை ஆசாமியின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு பல்வேறு தடவைகள் அறிவித்தும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
![]()