கதைகள்

குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர் – 19… வேர்… மீனாசுந்தர்

உச்சி வெயிலில் பிடுங்கிய செடி வாடி, துவண்டு கிடப்பதைப்போல மருத்துவமனைப் படுக்கையில் கண்மூடி கிடந்த அம்மாவைப் பார்க்கையில் துக்கம் தொண்டைக் குழியில் அடைத்து நின்றது. உடலில் எந்த அசைவுகளோ, சலனங்கலோ இல்லை. தோல் சுருங்கி, விழிகள் புதைந்து, உதடுகள் காய்ந்து கிடந்த தேகத்தை விசிறி விடுவதுபோல் அங்குமிங்கும் அலைபாய்ந்து ஆடிக் கொண்டிருந்தன ஈரப் பசையற்ற வெளுத்த தலைமுடிகள்.

அம்மா படுக்கையில் விழுந்து ஆறு மாத காலமாயிற்று. இந்த நோய் என்று சொல்ல முடியாத அளவிற்கு நான்கைந்து வியாதிகள் சூழ்ந்துகொண்டு அம்மாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. முக்கியமாக மூச்சிறைப்பு வரும்போது பக்கத்தில் நிற்பவர்களே பயந்து போகிற அளவிற்கு வாட்டி வதைத்து விடும். அந்த நேரத்தில் பிதுங்கி வெளித் தள்ளும் விழிகளைப் பார்க்கையில் பெரியவர்களே நடுங்கி கிட்ட வரவே பயந்து ஓடி விடுவார்கள். இது தான் கிழவிக்கு கடைசி மூச்சு என்று காது படவே பேசுகிற அளவிற்கு நோயின் தீவிரம் எழுவதும் அடங்குவதுமாய் நாள்கள் கழிந்து கொண்டிருந்தன. அப்பாவை இழந்து ஓர் ஆண்டு முடிவதற்குள் அம்மாவையும் கைகழுவி விடுவோமோ என்கிற பயம் ஈரக்குலையை நடுங்கச் செய்தது.

அம்மாவிற்கு நான் ஐந்தாவது பிள்ளை. ஐந்துமே ஆண் பிள்ளைகள். அம்மாவும் அப்பாவும் எங்களுக்கு ஐந்தும் சிங்கக் குட்டிகள் எனப் பெருமை பேசிக் கொண்டிருந்தாலும், ஒரு பெண் பிள்ளை இல்லையே என்ற ஏக்கம் அவர்கள் வாழ்வின் கடைசி வரையிலும் நீடித்துக் கொண்டிருந்தது. இதை நாங்கள் மட்டுமல்ல, எங்கள் ஊர் உறவுகளும் நன்கு அறியும். பெண்பித்து கடைசி வரையிலும் அவர்களை ஆட்டிப் படைக்கவே செய்தது.

அண்ணன்கள் நால்வரும் சிறு வயதிலிருந்தே நன்றாக படித்தார்கள். நான் மட்டும் தான் படிப்பில் மந்தம். ஆகவே அவர்கள் நால்வருமே நல்ல சம்பளம் உள்ள அரசாங்க வேலையில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள். பணியின் பொருட்டு அண்ணன்கள் ஆளுக்கொரு திசையில் நகர்புறத்தில் வீடு, வாசல், என்று நல்ல நிலையில் செட்டிலாகிவிட்டார்கள்.

அப்பா. அம்மாவின் பேர் சொல்லும் பிள்ளையாக பிறந்த பூர்வீக வீட்டில் மனைவி, குழந்தைகள் மற்றும் அம்மா அப்பாவோடு வாழ்கிற பாக்கியம் நான் சரியாகப் படித்து அரசாங்க உத்தியோகம் எதற்கும் செல்லாததால் கிடைத்தது. இருக்கும் பழைய ஓட்டு வீடும் இரண்டு ஏக்கர் நஞ்சை நிலமும் பூர்வீக சொத்துக்கள். அண்ணன்கள் எல்லாம் நல்லபடி செட்டிலாகிவிட்டதால் என் மீது உள்ள பிரியத்தில் எவரும் சொத்து பிரிவினையேதும் கோராமல் அப்படியே விட்டு விட்டார்கள். இதில் வருகிற வருமானமும் இரண்டு கறவை மாடுகளுமே எங்களின் வாழ்க்கையை ஓரளவு ஓட்டுவதற்கு துணை புரிந்து கொண்டுள்ளதெனில் மிகையல்ல.

அம்மாவிற்கும், அப்பாவிற்கும் எப்போதும் என் கவலை தான். மூத்த பிள்ளைகளெல்லாம் படித்து ஊர் உலகம் போற்ற செம்மாந்து வாழ்கையில் கடைக்குட்டி மகன் மட்டும் இப்படிக் கஷ்டப் படுகிறானே என்று நெருக்கமானவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி புலம்புவதை வழக்கமாகவே கொண்டிருந்தார்கள். அதிலும் வயோதிக காலத்தில் அப்பாவிற்கு எனது நிலை குறித்து புலம்புவது ஒரு தீரா நோயைப் போலவே உருவெடுத்திருந்தது. இப்போது அம்மாவிற்கும் அந்தப் புலம்பல் தொற்றிக் கொண்டிருந்தது.

அண்ணன்கள் நால்வருமே வருடத்திற்கு ஒரு முறையோ. இரு முறையோ ஊருக்கு வந்து போவார்கள். குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை என்றால் குடும்பத்தோடு வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். அந்தப் பயணமும் இடையிடையே நேரம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் விடுபட்டுப் போகவும் செய்ததுண்டு. மற்றபடி எல்லாமும் தொலைபேசியிலும், அலைபேசியிலும் தான். எல்லாமும் சம்பிரதாயத்திற்காக என்றால் குற்றமில்லை என்ற அளவிலேயே இருந்தன.
அண்ணன்களின் குடும்பங்களெல்லாம் நவ நாகரீக குடும்பங்களாக உருமாறி விட்டன. அண்ணிகள் ஊருக்கு வரும்போது போட்டு வருகிற கழுத்து, காது நகைகளை பார்த்து ஊரே வாய் பிளந்து நிற்கும். அது போலவே அண்ணன்களின் குழந்தைகளும் ஸ்டைலாக தலைமுடியை வெட்டிவிட்டுக் கொண்டு. விதவிதமாய் ஜீன்ஸ்பேண்ட், டி- ஷர்ட் என்று மாட்டிக் கொண்டு காரில் வந்து இறங்கும்போது ஊர்க் குழந்தைகள் போலவே என் குழந்தைகளும் ஏக்கத்தோடு பார்ப்பதைப் பல முறை நானே பார்த்திருக்கிறேன்.

அவர்கள் பேசுகிற ஆங்கிலமும் தின்பதற்குக் கொண்டு வரும் உயர்ரக சாக்லேட் அயிட்டங்களும் கண்டு குழந்தைகளோடு சேர்ந்து நானும் தள்ளி நின்று ஏக்கத்தோடு ரசித்திருக்கிறேன். என்னவோ என் மனைவியைத் தவிர மற்ற அண்ணிகள் நெருக்கமாக பேசிக் கொள்வதைப் போலவே, மற்ற நால்வரின் குழந்தைகளும் அன்னியோன்யமாக விளையாடிக் கொண்டிருக்கையில், என் குழந்தைகள் மட்டும் சற்று தள்ளியே நிற்பதற்குக் காரணம் ஒரு விதத்தில் கிராமத்துத் தாழ்வு மனப்பான்மையாக கூட இருக்கலாம்.

அண்ணிகளுக்கு எப்படி என் மனைவி ஏவலாளியோ அதைப் போலவே அண்ணன்களின் குழந்தைகளுக்கும் என் பிள்ளைகள் தான் விளையாட்டுப் பொம்மைகள். அவர்கள் என்னென்ன விளையாட விரும்புகின்றார்களோ எப்படி யெல்லாம் நடந்து கொள்ள விரும்புகின்றார்களோ அதற்கு உடன்பட்டே என் குழந்தைகள் எப்படியோ அவர்களுக்கு தெரியாமல் சகித்துக் கொண்டிருக்க கற்று விட்டார்கள்.

அண்ணன்கள் யாரும் என்னைப் பிரித்துப் பார்த்ததில்லை. இவன் படிக்காதவன் தானே என்று புறக்கணித்ததில்லை. ஊருக்கு வந்தால் எல்லாவற்றிற்கும் யோசனை கேட்பதும், ஆலோசிப்பதுமாக இருக்கிறார்கள். அம்மாவை, கவனமாக பார்த்துக் கொள்ளச் சொல்லி ஐம்பதோ, நூறோ எப்போதும் கொடுத்து விட்டுச் செல்வார்கள். அம்மாவை, இங்கேயே வைத்திருக்க என்னை மனதளவில் தயார்படுத்தி வைத்திருந்தார்கள்.

அம்மா, அவர்கள் அழைத்தாலும் போகப் போவதில்லை. என்றாலும் நால்வரில் ஒருவர் கூட வாய்தவறி அழைத்ததும் இல்லை. அம்மாவிற்கும் அவர்களை விடவும் என் மீதும் என் மனைவி மீதும் குழந்தைகள் மீதும்தான் சொல்லிக் கொள்ள முடியாத பாசமும் நேசமும் உண்டு என்பதற்கு பல காரணங்கள் உண்டு. என்னால் அம்மாவைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் வாய்விட்டு எதையும் இதுவரை சொல்லியதில்லை.

அண்ணன்களோ, அண்ணிகளோ, எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. தன் பெண்டு, தன் பிள்ளை என்று தங்களின் வட்டத்தை விட்டுப் பெரிதாக எவர் மீதும் பற்றோ பாசமோ, கொண்டு வாழ்ந்ததில்லை.

அப்பா இறந்தபோது கூட என் மனைவியும் குழந்தைகளும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கறினர். தாத்தா தாத்தா என்று என் குழந்தைகள் தலைமாட்டிலேயே உட்கார்ந்து தேம்பினார்கள். நான் நிதானமற்று பேதளித்து விம்மிக் கொண்டே இருந்தேன். ஒரு தேநீர்கூடக் குடிக்க மனமில்லாமல் அப்பாவின் இழப்பு எங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

அண்ணன்களும், அண்ணிகளும், காரில் வந்து இறங்கினார்கள். எந்தச் சங்கடமோ, சலனமோ இல்லாமல் மெல்ல நடந்து வந்தார்கள். அண்ணிகள் நால்வரும் சற்று நேரம் அப்பாவின் சடலத்தின் அருகே அமர்ந்து இருந்தார்கள் என் மனைவி அவர்களை கட்டிக்கொண்டு ஓவெனக் கதறி அழுகையில், அவர்கள் அவளை விட்டு விலகி முகம் சுழித்தார்கள். அதிலும் நடு அண்ணனின் மனைவி கொஞ்சமாவது டீசன்டா நடக்கத் தெரியுதா பாரு. சரியான நாட்டுப்புறம் என்று காது படவே சலித்துக்கொண்டு எழுந்து போய் உள்ளே மறைவாக அமர்ந்துகொள்ள, அவர்களைப் பின்தொடர்ந்த நால்வரும் ஊர் உலகக் கதைகளைப் பேசி சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். அண்ணன்களின் பிள்ளைகளில் ஒருவரைக் கூட அழைத்து வரவில்லை. எல்லாருக்கும் எக்ஸாம் டைமாம். அண்ணன்களைப் பார்த்ததும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. துக்கம் நெஞ்சை பற்றி அழுத்தியது.
அண்ணே… எல்லாரும் பார்த்திங்களா? அப்பா நம்மள விட்டு போயிட்டாங்கண்ணே… ! என்று பெரும் குரல் எடுத்து தேம்பி அழுகையில் அவர்களின் விழிகளில் லேசான கலக்கத்தை தவிர வேறு எதுவும் பெரிதாய் அலட்டிக் கொள்ள வில்லை.
“எலே…. தம்பி… விடுடா… அழுறதாலே அப்பா திரும்ப வரப்போறதில்லை. வா ! அடுத்தக் காரியத்தை பார்ப்போம் என்று சர்வ சாதாரணமாக அழைப்பு விடுத்தார் பெரியவர்.

“இவன் உலகம் புரியாதவன். பொறந்தவன் பூரா ஒரு நாள் செத்துதான்டா ஆகணும்” இது நடு அண்ணனின் தத்துவ தரிசனம்.

“டவுன்ல எல்லாம் எவன் செத்தான், எவன் போனான்னே தெரியாது. முக்கியமா உள்ளவங்கள மட்டும் வரச் சொல்லி மயானத்துக்கு எடுத்துட்டுப் போய், மின்சார சுடுகாட்டில் ஒரு டப்பா சாம்பல் மட்டும்தான் தருவான். கிராமத்துல தான் இதுக்கு ஒரே ஆரவாரம், களோபரம். இவங்கள நெனச்சா சிரிப்பாத்தான் இருக்கு. பாவம் உலகம் போற போக்கை புரிஞ்சிக்கிடாம ஒன்னுந் தெரியாம தவிக்கிறாங்க கிராமத்தாளுங்க” இது அடுத்த அண்ணன்.

“நீ சொல்றதும் சரிதான். இவன் கட குட்டிப் பய. படிக்காததாலே உலகம் புரியல… வயசாகிதானடா அப்பா செத்துருக்காரு… இதுக்கெல்லாம் அழுதுகிட்டு ஆரவாரம் பண்ணிக்கிட்டிருப்பாங்க?” இது எனக்கு முந்தியவர்.

நால்வரும் நாலுவிதமாகப் பேசினாலும் ஒரே கோட்டில் நின்றார்கள். அடுத்த பத்து நிமிடத்தில் உறவினர்களோடு சகஜமாகப் பேசுவதும், சிரிப்பதும், கதைப்பதுமாக அவர்கள் கலந்தும் கரைந்தும் போனார்கள்.

ஆக, இப்போது அம்மாவிற்கு ஏதும் விபரீதமாகி மூச்சு நின்று போனாலும் இதே நிகழ்வுகள்தான் நடக்கப் போகின்றன. ஆனால் வீட்டில் எங்களோடயே வாழ்ந்து, எம்மைத் துறந்து வெறுமையாக்கிவிட்டு போகிற கொடுந்துக்கம் தாங்கக் கூடியதா? அதுவும் பெற்ற தாய் போகும் துக்கத்தை மாற்றும் சக்தி வேறு எதற்கும் உண்டா?

அம்மாவையே பார்த்துக்கொண்டு நிற்கிறேன். என்னையும் அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிற்று. அம்மாவிற்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று வேண்டாத தெய்வங்களை எல்லாம் இடையிடையே கண்ணை மூடி வேண்டிக் கொண்டே நின்றேன். பழைய நினைவுகள் புரண்டு படுக்கின்றன.
அம்மா எங்களைத் தூக்கி வளர்த்தது, அரவணைத்தது, சுற்றிலும் அமர வைத்துக் கொண்டு சோறு உருட்டி ஊட்டி விட்டது, முத்தம் கொடுத்துப் பாசம் பொழிந்தது, வயல் வேலைக்குச் சென்று வாயை கட்டி வயிற்றைக் கட்டி வளர்த்தெடுத்தது, அப்பா அடிக்கும் போதெல்லாம் கோழி குஞ்சுகளை றெக்கைக்குள் பொத்துவதுபோல் புடவைக்குள் பொத்தி அணைத்துக் கொண்டது, எனச் சகலமும் நினைவில் நிழலாடி துயரத்தை மேலும் பெருக்கிற்று.

கடைசியாக சென்ற மாதம் பெரியண்ணன் வந்து பார்த்தபோது அம்மா நடுங்கும் குரலோடு சொன்ன வார்த்தைகளை நினைக்கையில் என்னால் நிலைகொண்டு நிற்க முடியவில்லை. தொண்டையை அறுக்கிற துக்கம்.

“எப்பா…. எல்லாரையும்ந்தான் வளர்த்தோம், படிக்க வச்சோம். கடக்குட்டி மட்டும் அப்ப சொன்ன பேச்ச கேட்க மாட்டேனுடுச்சு. ஆனாலும் கடைசிகாலம் வரைக்கும் எனக்குக் கஷ்டத்தோட கஷ்டமா அதுதான்யா கஞ்சி ஊத்துது. உன் புள்ளைங்கள்லாம் வளர்ற மாதிரியே இவன் புள்ளைங்களையும் படிக்க வச்சி ஒரு வழிய காட்டுய்யா. அத மட்டும் செஞ்சிங்கன்னா போதும். கடைசி புள்ள இவன் அப்பாவிடா. அவனைக் கை விட்றாதிங்கப்பா.. அவனையும் கொஞ்சம் பார்த்துக்கங்கடா..”

அம்மாவுக்கு கண்கள் பொங்கி முந்தானையால் துடைத்துக் கொண்ட நிகழ்வு படுத்தி எடுத்தது.

“அம்மா அம்மா ஏமாத்திடாதம்மா, நிய்யி சும்மாவே படுத்திருந்தாலும், ஆயிரம் யானை பலம்மா எனக்கு. என்ம் புள்ளைங்க ஆத்தா எங்கேன்னு கேட்டு தவிச்சுப் போயிடுங்கம்மா.

மனசு கிடந்து அலை பாய்ந்தது. அம்மாவிற்கு சீரியஸ் என அண்ணன்களுக்குச் செய்தியைச் சொல்லி அனுப்பி, ஊரிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வந்தது. மருத்துவர் வந்து என்னை தன் அறைக்கு அழைத்தார். ஓடித் தவிப்பாய் நிற்கிறேன்.

“தம்பி மனச தேத்திக்குங்க.. கொஞ்சம் கஷ்டம்தான். வீட்டுக்கு வேணா சேப்டியா இப்பவே அழைச்சிட்டுப் போங்களேன். 2, 3 மணி நேரத்துல முடிஞ்சிடும்”
“ஐயா அப்படிச் சொல்லாதீங்கய்யா. நீங்கதான்யா எப்படியாவது காப்பாத்தனும”.
அவர் கரங்களைப் பற்றி மன்றாடுகிறேன்.

“இல்லப்பா…. சொல்றதப் புரிஞ்சிக்கங்க… வயசு வேற ஆயிடுச்சில்ல… அவ்வளவு தான்… இனிமே தாங்காது !” மருத்துவர் உறுதியாகச் சொல்லிவிட்டார்.
வெளியில் உறவினர்கள் கூடி விட்டிருந்தார்கள். எல்லோரும் வீட்டுக்கு அம்மாவை இப்போதே கொண்டு போவதே நல்லது என்றார்கள்.

ஒரு டேக்ஸியைப் பிடித்து வந்து, அம்மாவை அழைத்துச் செல்ல முடிவாயிற்று. மருத்துவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனிக்கையில் யாரோ ஒருவர் பக்கத்து டவுன் திருச்சியில் உள்ள மருத்துவமனையைச் சொல்லி அங்கப் போனால் எப்படியும் காப்பாத்திடலாம் என்றார். பக்கத்திலிருந்த மருத்துவர் சற்று காட்டமாக குரலை உயர்த்தி,

“யாருய்யா அது? அவங்க அந்த கட்டத்தையெல்லாம் தாண்டிட்டாங்க. வீணா காசைக் கரியாக்காம ஆகுறதைப் பாருங்க” என்றார்.

அம்மாவை டாக்ஸியில் ஏற்றி வெளியில் வந்து ஊருக்கு திரும்ப எத்தனிக்கையில் என்னவோ மனது சஞ்சலப்பட்டது. என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடைந்த கதறலோடு எதையும் யோசிக்காமல் “டிரைவர் வண்டியை திருப்பி திருச்சிக்கு விடுங்க” என்றேன். கூட வந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

“டாக்டர் இவ்வளவு சொல்லியும் நீயா இப்படி முடிவு பன்றியே..?” என்று ஆளாளுக்கும் திட்டிக்கொண்டே வந்தார்கள். எதைப் பற்றியும் நான் பொருட்படுத்த வில்லை. வண்டி திருச்சியை நோக்கி சீறிற்று. ஆனாலும் ஐந்து கி.மீ. தாண்டுவதற்குள்ளாகவே மூச்சுப்பிசாசு எகிறிக்கொண்டு அம்மாவை படுத்தத் தொடங்கிற்று. அம்மா… அம்மா… என்று அழுதபடியே கைகளை கோர்த்துப் பிடித்தபடி நெஞ்சை தடவி விட்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் அம்மாவின் கைகள் தளர்ந்தன. விழிகள் மூடி தலை சாய்ந்து போனது அம்மாவுக்கு. நான் சித்த பிரமை பிடித்தவன்போல அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். வந்தவர்கள் அனைவரும் என்னைத் திட்டிக் கொட்டினார்கள். அதிக பிரசங்கி வேலையெல்லாம் செய்யறத முதல்ல நிறுத்து என்றார்கள். என் அழுகையினூடே அவற்றைப் பொருட்படுத்தும் மனநிலையில் இல்லை நான்.

காரியங்கள் முடிந்து போயிருந்தன. அம்மா புகைப்படத்தில் சுவற்றில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் வழியும் கண்களுடன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். வேதாச்சலம் மாமா என்னை நெருங்கி வந்து “அது என்ன எவ்வளவு சொல்லியும் நீ கேட்காம உனக்கு என்ன அப்படியொரு குறுக்கு புத்தி? வாற வழியிலேயே திரும்பவும் திருச்சி ஆஸ்பத்திரிக்கு போடான்னு எவ்வளவு வீண் செலவு ? பாதியிலேயே உசிரும் நின்னு போச்சு” என்றார்.
“இல்லை மாமா! உசிரு போயிடும்னு தெரிஞ்சிதான் ஆஸ்பத்திரிக்கு விடச் சொன்னேன்” என்றேன். வேதாச்சலம் மாமா அதிர்ச்சியாய் என்னை பார்த்தார்.
அண்ணன்கள் எல்லாம் என்னைப் பலவாறாக வறுத்தெடுத்தார்கள்
“டாக்டரே சொன்ன பிறகும் உனக்கென்னடா புத்தி பேதலிச்சிப் போயிட்டா? உன்னிஷ்டத்துக்கு கிடந்து ஆடியிருக்கற?”

வாய்க்கு வந்தபடி அண்ணன்கள் மாறிமாறி என்னை வசைபாடிக் கொண்டிருந்தார்கள். நான் அமைதியாகவே அமர்ந்திருந்தேன். அவர்களின் வசைமொழியுடன் அருகிலிருந்தவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் துக்கத்தை அடக்க முடியாமல் உடைந்த குரலில் சொன்னேன்.

“காசு பணத்தைச் சம்பாரிச்சிடலாம். யாரோ திருச்சிக்குக் கொண்டு போனா காப்பாத்திடலாம்னு சொன்னதைத் தவிர்த்து என்னால வீட்டுக்கு வர முடியலண்ணே. நாம முயற்சி பண்ணியிருந்தா அம்மா பொழச்சிருக்குமோன்னு எப்பவாவது மனசு குறுகுறுக்க ஆரம்பிச்சிட்டா… காலத்துக்கும் என்னால நிம்மதியா வாழ முடியாது. அந்தப் பாவத்தைச் சுமக்கற மனவலிமை எனக்கில்ல. அதான் அப்படி நடந்துகிட்டேன். என்ன தயவுபண்ணி எல்லாரும் மன்னிச்சிடுங்க”
அதற்கு மேல் என்னால் பேசமுடியவில்லை. வேதாச்சலம் மாமா கண்கள் பொங்க எனது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டார். அண்ணன்கள் ஊமைகளாய் உருமாறியிருந்தார்கள்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *