இலங்கையை சேர்ந்த 112 முக்கிய குற்றவாளிகள் 13 நாடுகளில் பதுங்கல்

போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாதாள குழு செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 112 சந்தேக நபர்கள் 13 நாடுகளில் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கூடிய விரைவில் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள் எனறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதன்படி அவர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், 2027ஆம் ஆண்டளவில் அவர்கள் அனைவரையும் நாட்டுக்கு கொண்டுவர முடியுமாக இருக்குமென்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
‘நாடே ஒன்றாக’ என்ற போதைப் பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்பொது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில், சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 112 சந்தேக நபர்கள் 13 நாடுகளில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களை 2027 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு அழைத்து வர முடியும் என்று நம்புகின்றோம். அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மூலமே பணம் சம்பாதிக்கின்றனர்.
இச்சட்டவிரோதப் பணத்தில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் பொலிஸின் இரண்டு விசேட பிரிவுகளின் ஊடாக 24 மணி நேரமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி அவ்வாறான சொத்துக்கள் அரசினால கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபா மதிப்பிலான சொத்துக்கள், 2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபா மதிப்பிலான சொத்துக்கள், 2026 ஆம் ஆண்டில் இதுவரையில் 1,656 மில்லியன் ரூபா மதிப்பிலான சொத்துக்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த இரண்டு வருட காலப்பகுதியிலும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை பொலிஸாரால் 4,483 கிலோ கிராம்ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 107.942 பில்லியன் ரூபாவாகும். 121.64 பில்லியன் ரூபா பெறுமதியான 7,129 கிலோ கிராம் ஐஸ், 5.293 பில்லியன் ரூபா மதிப்புள்ள 33,277 கிலோ கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 5,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 450 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார்.
![]()