இலங்கையின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தங்கள் அவசியம்: சர்வதேச அமைப்பு வலியுறுத்தல்

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA), சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழான நாட்டின் கடப்பாடுகளுக்கு முழுமையாக இணங்கும் வகையில் திருத்தப்பட வேண்டும் என சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு (OMCT) வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் (PTA) பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் தொடர்பில், குறித்த அமைப்பு சட்டரீதியான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம், நீண்டகாலத் தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் ஏனைய மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு வழிவகுப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பொறிமுறைகளால் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ளது.
சட்டபூர்வமான கருத்து
புதிய சட்டமூலத்தில் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான முன்மொழிவையும், சில பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வரவேற்றுள்ள OMCT, அதேவேளை அதில் குறிப்பிடத்தக்க கரிசனைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, பயங்கரவாதம் தொடர்பான பரந்துபட்ட வரைவிலக்கணங்களும் தெளிவற்ற குற்றப் பிரிவுகளும் அமைதியான போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், இணையவழிச் செயற்பாடுகள் மற்றும் சட்டபூர்வமான கருத்து வெளிப்பாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இதனால், இலங்கையில் சிவில் சமூகச் செயற்பாடுகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
OMCT கோரிக்கை
எனவே, பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களைத் தெளிவானதும் குறுகிய வரையறைக்குட்பட்டதுமான வகையில் வரையறுத்தல், தடுப்புக்காவல் நடவடிக்கைகள் மீது பயனுள்ள நீதித்துறை கண்காணிப்பை உறுதிப்படுத்துதல், தடுப்புக்காவலின் ஆரம்பத்திலிருந்தே சித்திரவதைக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு OMCT கோரியுள்ளது.

அத்துடன், நியாயமான விசாரணைக்கான உரிமை, பாகுபாடின்மை மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதங்களையும் வலுப்படுத்த வேண்டும் என இலங்கை அதிகாரிகளிடம் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான சட்டங்கள் சிவில் சமூகச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது சட்டபூர்வமான கருத்து வேறுபாடுகளைக் குற்றமாக்குவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என்றும் OMCT தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதும் மனித உரிமைகளை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணான இலக்குகள் அல்ல மாறாக, இவை இரண்டும் சமமாக நிறைவேற்றப்பட வேண்டிய கடப்பாடுகள் என்றும் சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
![]()