வலுவான எதிர்க்கட்சியை ஒழிக்கவே அரசு முயற்சி; மொட்டு எம்.பி. குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அல்லாமல், தமது அரசியல் எதிராளிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடக்கி வைப்பதற்கே நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டினார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசால் தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படும் சில சட்டமூலங்கள் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் குறித்து மிகச் சிக்கலான சமூக உரையாடல் நிலவி வருகின்றது.
தேர்தல் காலத்திலும் அதற்கு முன்னரும் நீண்டகாலமாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியால் இந்த நாட்டுக்கு முன்மொழியப்பட்ட புதிய அரசியல் கலாசாரத்துக்கும், தற்போதைய அரசின் தற்போதைய சட்டம் இயற்றல் மற்றும் சீர்திருத்த அணுகுமுறைக்கும் இடையே பாரிய முரண்பாடு நிலவுவதை நாம் காண்கின்றோம்.
தனிநபர் சுதந்திரம் தொடர்பான மிகவும் உணர்திறன் மிக்க நீதித்துறை அதிகாரங்களை நீதிமன்றமே வைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு அந்த அதிகாரங்களை வெளிப்படை விசாரணை முகவரகங்களிடம் ஒப்படைக்கும் அரசியல் மூலோபாயத்தைப் பின்பற்றி வருகின்றது.நீதிமன்ற அதிகாரங்களை அரசு தனது அரசியல் புலனாய்வாளர்களின் கரங்களில் ஒப்படைக்க முயல்கின்றது.
சமூகத்தைச் சீர்திருத்துவது அரசி ன் நோக்கமல்ல. மாறாகத் தமது அரசியல் எதிராளிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் அடைத்து வைப்பதன் மூலம், வலுவான எதிராளி இல்லாத ஒரு அரசியல் களத்தை உருவாக்கவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு முயற்சிக்கின்றது.
நீதிமன்றத்துக்குள் மட்டுமே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையைப் பொலிஸ் கூண்டுக்குள் தீர்க்க முடியாது என்பது ஜனாதிபதிக்காவது இப்போது புரிகின்றதா, ஹோமாகம பொலிஸ் கூண்டுக்குள் இருந்து கேட்ட அலறல் சத்தம் இந்த அரசுக்கும் ஜனாதிபதிக்கும் கேட்டதா என்று நாம் கேட்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
![]()