இலங்கை

எமது அரசாங்கம் ஒருபோதும் மதத்தை வைத்து அரசியல் செய்யாது!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் மதத்தை வைத்து அரசியல் செய்யாது. மதத்தை வைத்து நாங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம். மதம் மதம் வேலையை செய்யும், ஆட்சியாளர்களான நாங்கள் எங்களுடைய வேலையை செய்வோம் என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேரர்களுடைய போராட்டம் மற்றும் கொழும்பிலே கூடாரமிட்டு தங்கியிருப்பது எல்லாமே ஒரு அரசியல் நாடகம் என்பது இன்று சிறிய குழந்தைக்கு கூட தெரிந்த விடயமாக இருக்கிறது.

இந்த நாட்டிலே கடந்த காலத்திலே ஊழல் செய்து தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை சரியாக செய்கின்ற பொழுது, இந்த அரசியல்வாதிகள் மிகவும் கவலை அடைந்து, பயம் கொண்டு, கூக்குரலிடுகின்றனர். அதனுடைய விளைவாக இந்த அரசாங்கத்தினுடைய அதிகாரத்தை குழைப்பதற்கு அல்லது ஆட்சியை மாற்றுவதற்கு அவர்கள் இறுதியாக எடுத்த ஒரே ஆயுதம் இந்த மதம். எனவே, இதுவும் இன்று தோல்வி அடைந்த நிலையிலே இருக்கிறது.

ஏனென்றால் பெரும்பான்மையான மக்கள் மத்தியிலே அவர்களுடைய போராட்டம், அவர்களுடைய குறிக்கோள் நன்கு தெரிந்த விடயமாக இருக்கிறது. எனவே, மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதேபோல அவர்களுக்கு பின்னுக்கு யார் யார்? எந்தெந்த அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்? என்பது நாளுக்கு நாள் வெளிச்சமாகிக் கொண்டு வருகிறது.

ஏனென்றால் அவர்கள் முதல் நாள் இந்த போராட்டத்தை தொடங்குகின்ற பொழுது, யார் இதற்கு அனுசரணை வழங்கியது, யார் யார் இந்த போராட்டத்திலே பங்கு பற்றினார்கள் என்பது ஊடக நண்பர்கள் ஊடகத்துக்கும் வெளிப்படையான உண்மையாக தெரிந்த விடயம்.

கஸ்ஸப்பதேரர் தற்பொழுது கொழும்பிலே சில விடுதிகளிலும் சென்று வரக்கூடிய காட்சிகள் ஊடகத்திலே நாங்கள் பார்த்திருந்தோம். எனவே, சரத் வீரசகர என்பவர் யார் என்பது உங்களுக்கு தெரியும்.

கடந்த காலத்திலே ஆட்சியிலிருந்த இனவாதிகள் தான் அவர்களை வழிநடத்துகிறார்கள். அவருடைய தேவையை பூர்த்தி செய்யப் பார்க்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை. யார் என்ன செய்தாலும், யார் என்ன கூக்குரலிட்டாலும், என்ன போராட்டம் செய்தாலும் நாங்கள் இந்த நாட்டிலே உன்னதமான, நேர்மையான ஒரு பணியினை செய்து கொண்டிருக்கிறோம்.

மக்கள் எதற்காக எந்த நம்பிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்தார்களோ, எந்த எதிர்பார்ப்போடு எங்களுக்கு ஆதரவு அளித்தார்களோ, அந்த எதிர்பார்ப்பும் ஆதரவிற்கும் பங்கம் விளைவிக்க ஒரு துளியேனும் நாங்கள் செயற்பட மாட்டோம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் மதத்தை வைத்து அரசியல் செய்யாது. மதத்தை வைத்து நாங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம். மதம் மதம் வேலையை செய்யும், ஆட்சியாளர்களான நாங்கள் எங்களுடைய வேலையை செய்வோம்.

இலங்கையில் இருக்கின்ற எல்லா மதங்களுக்கும் நாங்கள் பூரண ஒத்துழைப்பையும், அவர்களுக்கான அனுசரணைகளையும், அவர்களுக்குரிய எல்லா நன்மைகளையும் நாங்கள் செய்து கொடுப்போமே ஒழிய எங்களுடைய தேவைகளுக்காக, எங்களுடைய செயற்பாடுகளுக்காக பகடைக்காயாக பகடைக்காயாக ஒரு நாளும் மதத்தை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்.

செம்மணி விசாரணையில் எந்தவித தலையீடோ அல்லது எந்த விதமான செல்வாக்கையுமோ நாங்கள் செலுத்தாமல் அது நேர்மையான முறையில் நடைபெறுகிறது.

செம்மணி விவகாரத்தை பொறுத்தவரையிலே கடந்த எந்த அரசும் செய்யாத வேலைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. எனவே, பலர் பல கருத்துக்களை சொன்னாலும், நாங்கள் எந்த விசாரணையில் எந்தவித தலையீடும் அல்லது எந்த விதமான செல்வாக்கும் நாங்கள் செலுத்தாமல் நேர்மையான முறையில் அது நடைபெறுகிறது.

செம்மணி மாத்திரமல்ல, எல்லா விசாரணைகளையும் நேர்மையான முறையிலே செயற்படுத்துவதற்கு நாங்கள் பூரண சுதந்திரத்தை வழங்கி இருக்கிறோம்.

நான் நினைக்கிறேன். செம்மணி விவகாரத்தில் சிலவற்றுக்கு உள்நாட்டு பொறிமுறைகள் போதுமானதாக இருக்கிறது. நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது. எனவே, மக்கள் தற்பொழுது இந்த அரசாங்கத்தின் மீது, நீதிமன்றத்தின் மீது முதல்முறையாக இந்த நாட்டில் இருக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த நம்பிக்கை அடிப்படையில் தான் நாளுக்கு நாள் நாளுக்கு நாள் சில நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. எனவே, இந்த நம்பிக்கையின் அடிப்படையில் எல்லா அநீதிகளுக்கும் நீதி நிச்சயமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை நாங்கள் கொடுத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *