இலங்கை

வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகள்!

வடக்கு – கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்கு உள்ளான ஊடக நிறுவணங்கள் தொடர்பான விசாரணைகளை உடன் ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் யாழ். ஊடக அமையத்தினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை விரைவில் ஏற்பாடு செய்வதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் யாழ். ஊடக அமையத்திற்கு வருகைதந்து ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது வடக்கு – கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவணங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும் என யாழ் ஊடக அமையத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கருத்து தெரிவிக்கையில், எங்கள் அரசாங்கம் தெற்கு ஊடகவியலாளர்கள் வடக்கு ஊடகவியலாளர்கள் என்ற பிரிவினையோடு நோக்குவதில்லை. கடந்தகால ஆட்சியாளர்கள் போல் நாங்கள் செயற்படப்போவதில்லை. எவரும் நினைத்துகூட பார்க்க முடியாத தீர்ப்புக்கள் எல்லாம் எங்கள் ஆட்சியில் வந்துகொண்டிருக்கின்றன. படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் எங்களுடைய காலத்தில் நீதியை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். எங்களுக்கான கால அவகாசத்தை தாருங்கள்.

மேலும் ஊடகவியலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை என்னிடம் தாருங்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உரிய தரப்புகளை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்படுகளை நான் செய்துதருகின்றேன், என உறுதியளித்தார்.

இச் சந்திப்பின் போது யாழ். மாவட்ட ஒருங்பிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளரும் யாழ். மாநகரசபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *