செம்மணி மனித எச்சங்கள் விவகாரத்தில் மாபெரும் திருப்பம்!; வரலாற்று உண்மைகள் திசைதிருப்பப்படுகிறதா..

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்துள்ள நான்காவது இடைக்கால அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊடவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள், முந்தைய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு முரணாக இருக்கின்றது.
செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என்ற விளக்கத்தை அவர் நிராகரித்துள்ளார்.
இத்தகைய கருத்துகள் முன்வைக்கப்படுவதற்கான அறிவியல் ஆதாரங்கள் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பினார். பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் முந்தைய மூன்று இடைக்கால அறிக்கைகளில், புதைக்கப்பட்ட உடல்களின் ஆடைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்த கருத்துகளுக்கும், நான்காவது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கும் இடையில் முரண்பாடு காணப்படுகின்றது.
மேலும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களையும் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகளில் எழுப்பப்பட்டுள்ள விடயங்களையும் உரிய முறையில் ஆராய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தற்போதைய விசாரணைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த சுதந்திரமான சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கண்காணிப்பு மாத்திரம் போதுமானதல்ல என்றும், குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் சுயாதீனமான விசாரணை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
![]()