இலங்கை

மகிந்தவைக் கொலை செய்யும் சதியில் பிரகீத் எக்னெலிகொடவுக்குத் தொடர்பா? புதிய சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து!

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் அவர் ஈடுபட்டதாகவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அண்மையில் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல்களின் அடிப்படையில், பிரகீத் எக்னெலிகொட அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், எக்னெலிகொடவுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் தொடர்பு இருந்ததாகத் தாம் கருதுவதாக சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணியைப் புரிந்துகொள்வதற்கு, பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவத்தை ஆராய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகளின் நிலைமையைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட ஞானசார தேரர், அவர்களுக்குப் பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்ததாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்தே ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டு, அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறுதிக்கட்டப் போரின்போது இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்களை வெளியிட்டதன் காரணமாகவே எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டார் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்ததையும் சரத் வீரசேகர நினைவுபடுத்தியுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவத்தையும் ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *