514 மில்லியன் டொலர் செலவிட்டு இலங்கைக்கு குடிநீர் வழங்கிய ஈரானுக்கு ஒரு தண்ணீர் போத்தல் வழங்க மறுப்பு; அரசின் செயல் மிகவும் வெட்கக்கேடானது

ஈரான் அரசாங்கம் 514 மில்லியன் டொலர் செலவிட்டு இலங்கைக்கு குடிநீர் வழங்கியது.ஆனால் தற்பாேது அந்த நாடு,எங்களிடம் தண்ணீர் போத்தல் ஒன்றை தமக்கு வழங்குமாறு கோரும்போது, அதனை வழங்க முடியாது என நாங்கள் தெரிவிக்கிறோம். இது என்ன நியாயம் ? எங்களது மனிதாபிமானம் எங்கே?இது மிகவும் வெட்கக்கேடான செயல்.ஈரானுக்கு உதவக்கூடாது என அமெரிக்கா அழுத்தம் பிரயோகிக்கவில்லையெனில் வேறு யார் அழுத்தம் பிரயோகிப்பது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமைஇடம் பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
தற்போது நாங்கள் சர்வதேச ரீதியில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். குறிப்பாக நீண்டகால நற்புறவை பேணிவரும் ஈரான் தொடர்பில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. ஈரானின் 20 வர்த்தக கப்பல்கள் எமது கடல் எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த கப்பல்களுக்கு மனிதாபிமான உதவிகளை பெற்றுக்காெடுக்க இடமளிக்குமாறு அந்த நாடு ராஜதந்திர ரீதியில் கடந்த 3மாதங்களாக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்த கப்பல்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60 பேர்வரை இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள், குடிநீர், மருந்துப் பொருட்களை பெற்றுக்காெடுக்க இடமளிக்குமாறே கேட்டுவருகிறார்கள். ஆனால் வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கை தொடர்பில் எந்த பதிலையும் வழங்காமல் மெளனமாக உள்ளது .
ஆனால் வெளிவிவகார அமைச்சர் இதுதொடர்பில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கடந்த 4ஆம் திகதி கருத்து தெரிவிக்கையில், ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க அமெரிக்காவால் எந்த அழுத்தமும் இல்லை. அதேநேரம் அவ்வாறு உதவி செய்வதற்கு நாங்கள் கட்டுப்பட்டும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.
எமது நாடு மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச சமவாயங்களில் கைச்சாத்திட்டிருக்கின்றது . நிர்க்கதிக்குள்ளாகி இருக்கும் ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் அமெரிக்காவினால் எந்த அழுத்தமும் இல்லை என்றால், ஏன் தனியார் நிறுவனங்களுக்கு அந்த அனுமதியை வழங்காமல் இருக்கின்றீர்கள்?அமெரிக்கா அழுத்தம் பிரயோகிக்கவில்லையென்றால் யாரிடமிருந்து அரசாங்கத்துக்கு இது தொடர்பில் அழுத்தம் பிரயாேகிக்கப்படுகிறது ?
ஈரான் அரசாங்கம் எமக்கு 514 மில்லியன் டொலர் செலவிட்டு உமா ஓயா நீர் வேலைத்திட்டத்தை எமக்கு உருவாக்கி தந்தது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அம்பாந்தோட்டை, மாெனராகலை, பதுளை மாவட்ட விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு நீரை வழங்குவதற்கும் மின்சார சபைக்கு 120 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் உமா ஓயா திட்டம் மூலம் நாங்கள் நன்மை அடைந்து வருகிறோம்.
அன்று ஈரான் அரசாங்கம் 514 மில்லியன் டொலர் செலவிட்டு எமக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்பாேது அந்த நாடு, எங்களிடம் தண்ணீர் போத்தல் ஒன்றை வழங்குமாறு கோரும்போது, அதனை வழங்க முடியாது என நாங்கள் தெரிவிக்கிறோம். இதில் என்ன நியாயம் இருக்கிறது? எங்களது மனிதாபிமானம் என்ன? இது மிகவும் வெட்கக்கேடான செயல் .
இலங்கையுடன் ஆயிரம் வருடத்துக்கும் அதிக காலம் நற்புறவை பேணிவரும் ஈரான், எமது நாடு நெருக்கடிகளுக்கு ஆளாகிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் எமக்கு உதவி வந்திருக்கிறது. ஈரான் எமக்கு வழங்கிய எரிபொருளுக்கு இன்னும் நாங்கள் அந்த கடனை செலுத்தாமல் இருக்கிறோம். அப்படியான நாடு, அந்த நாட்டின் கப்பல்களில் இருக்கும் ஊழியர்களுக்கு மனிதாபிமான, அத்தியாவசியமான உதவிகளை வழங்குமாறு கேட்கும்போது, அதனை நிராகரிப்பதென்றால், எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை எங்கு சென்று கொண்டிருக்கிறது என எமக்குத் தெரியவில்லை என்றார்.
![]()