இலங்கை

ஒட்டுமொத்த இலங்கையும் ஒரேநேரத்தில் இருண்டது எப்படி?; பின்னணியில் திட்டமிடல் குளறுபடியா? விசாரணை ஆரம்பம்!

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரக் கட்டமைப்பு நிலையற்ற நிலையில் இருந்த வார இறுதி நாளில் அதிக ஆபத்துமிக்க பராமரிப்புப் பணிகள் திட்டமிடப்பட்டமைக்கான காரணங்களைக் கண்டறிய அமைச்சு உத்தியோகபூர்வ விசாரணையை ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேடக்கூற்றை விடுத்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி சனிக்கிழமை, நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்திப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் தொடர்பில் அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகளின்போது, மின் நிலையத்தின் கொதிகலனில் பொருத்தப்பட்டிருந்த முக்கிய பகுதி உடைந்துள்ளதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக முதலாவது மின் உற்பத்திப் பிரிவு உடனடியாகச் செயலிழக்கச் செய்யப்பட்டது

அந்த நாளின் பிற்பகுதியில், மின்சாரத்திற்கான கேள்வி குறைந்திருந்த நேரத்தில் இந்தப் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன . ,வெயில் நிலவியதால் கூரைமீது பொருத்தப்பட்ட சூரிய மின்கலங்கள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து சுமார் 1,700 மெகாவோட் மின்சாரம் மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது

நிலக்கரி மின் உற்பத்திப் பிரிவு திடீரெனச் செயலிழந்ததால், மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி, மின் கட்டமைப்பின் அதிர்வெண்ணை வேகமாகக் குறைத்தது. கட்டமைப்பில் கண்காணிக்கப்படாத சூரிய மின்சக்தியின் பங்களிப்பு அதிகமாக இருந்தமையால், அந்த மின்சக்தி அமைப்புகளும் விரைவாகத் துண்டிக்கப்பட்டன. இதனால், மின் கட்டமைப்பின் சமநிலை முற்றாகச் சீர்குலைந்து நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.

ஒரு மின் உற்பத்திப் பிரிவு செயலிழப்பது புரிந்துகொள்ளக்கூடிய விடயமாக இருந்தாலும், அந்தத் தனிப்பட்ட செயலிழப்பு எவ்வாறு நாடு முழுவதுமான மின்சாரத் தடையாக மாறியது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.இந்த சம்பவம் தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணையை எரிசக்தி அமைச்சின் செயலாளர் தலைமையில் முன்னெடுத்து வருகின்றோம் , பராமரிப்புப் பணிகளைத் திட்டமிட்டமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காண்பதே விசாரணையின் நோக்கம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *