இலங்கை

அவுஸ்திரேலியாவில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரைச் சேர்ந்த இலங்கை ஏ அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான 51 வயதுடைய சுரஞ்சித் சில்வா, பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி சன்பரி (Sunbury) பகுதியில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. குற்றச்சாட்டுகளை மறுத்த சுரஞ்சித் சில்வா, வழக்கை விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரியிருந்தார்.

இதனையடுத்து, பிராட்மெடோஸ் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற சாட்சிய விசாரணைகளின் முடிவில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில், இச்சம்பவம் தமக்கு ஏற்படுத்திய கடுமையான மன உளைச்சல் குறித்து அவர் விவரித்துள்ளார்.

தனது அனுமதியின்றி தனது உடலையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் எவரும் நடந்துகொள்ள உரிமையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், தீவிரமான பாதுகாப்பற்ற உணர்வுக்கும் மன அச்சத்துக்கும் உள்ளானதாகவும், பிறருடன் நெருங்கிப் பழகுவதற்குக்கூட தயக்கம் ஏற்படும் அளவுக்கு இச்சம்பவம் தம்மைப் பாதித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சுரஞ்சித் சில்வா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இது தவறான தருணத்தில் இடம்பெற்ற ஒரு பிழை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதிவாதி அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையைக் கொண்டிருப்பதால், இந்தத் தீர்ப்பு அவரது தொழில் மற்றும் விசா நிலைமையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும், அவருக்கு முன்னர் குற்றப் பின்னணி எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறிய சுரஞ்சித் சில்வா, இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன், அங்கு இரண்டாம் மட்டத் தகுதி பெற்ற கிரிக்கெட் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவர், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனை எதிர்வரும் 26ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *