கவிதைகள்
“நாளுமே நாகரிகம் நமைவிழுங்கி வருகிறதே ” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நாகரிக மோகத்தில்
நல்லதெல்லாம் மறக்கின்றோம்
நம்மையே தொலைக்கின்றோம்
நாமெண்ண நினைப்பதில்லை
வசந்தங்கள் மடிவதை
மனமிருத்த மறுக்கின்றோம்
மாநிலத்து வாழ்க்கை
வரண்டுமே போகிறதே !
உணவில் தடுமாற்றம்
உடையில் பெருமாற்றம்
உறங்கி எழுவதிலும்
ஒழுங்குகளை குலைக்கின்றோம்
அழுவதிலும் பலமாற்றம்
அணைப்பதிலும் பலமாற்றம்
அனைத்தையும் நாகரிகம்
அரசாட்சி செய்கிறதே !
பண்பாடு கலாசாரம்
பதுங்கியே நிற்கிறது
பணமென்னும் பேரரக்கன்
தலைவிரித்து ஆடுகிறான்
மூத்தோர்கள் அனைவருமே
முடங்கியே கிடக்கின்றார்
முகிழ்ந்தெழுந்த நாகரிகம்
கோலோச்சி நிற்கிறது !
ஆன்மீகப் பாதை
அடைப்பட்டுக் கிடக்கிறது
அறமென்னும் அரசன்
அடங்கியே கிடக்கின்றான்
நாகரிகத் தலைமை
கோலோச்சி எழுகிறது
நாளுமே நாகரிகம்
நமைவிழுங்கி வருகிறதே !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா
![]()