படியளப்பார் பாரில் யாரோ?… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

ஆழி நீரை ஆவியாக்குவதினால்
ஆதவனுக்கு பலன் எதுவுமுண்டா
ஆவியான நீரை அகமிருத்தியதால்
வெண்மேகத்துக்கு ஏது பலன்?
அகமிருக்கும் வெண்மேகமும்
கார்மேகமாய் சூல் கொண்டால்
சூல்கொண்ட கார்மேகந்தான்
அடைந்திடும் பயன் என்னவோ?
சூல்கொண்ட மேகம் மழை பெய்ய
பெய்யும் மழையின் பலன்களெலாம்
சூல்கண்ட மேகம் வழங்கி நிற்கும்
ஈகையாம் பெருங்குணமாய் எஞ்சும்
உலகில் வாழ் மக்கள் அனைவருமே
உழவர்செய் உழவுத் தொழிலதனால்
பயிர்வளர்ந்து உண்டு உயிர் வாழவும்
உழவர் உணவளித்து காப்பதறிவீரே
தாய் தந்தையாரால் தோன்றிய மாந்தர்
தம் பெற்றோரையே பெற்றோரென்பர்
பாரினிலே பவணிவரும் பண்புமதுவே
தொன்றுதொட்டு அவ்வாறே செப்பிடுவர்
உண்டி கொடுத்தோரே உயிர்கொடுத்தோர்
ஆசான் கற்றுத் தந்ததும் பொய்யாகுமோ
ஆசான் கற்றுத் தந்தது உண்மையெனில்
உயிர்கொடுத்தோர் ஆதவனும் உழவனுமே
கடைத்தேங்காய் எடுத்து உடைத்த கதையாய்
படி அளப்பதாக பலகாலமாய் சொல்வோரே
பாமரனவன் கேட்க மாட்டான் என்பதனாலோ
ஆதவனும் உழவனும் பணியை செய்யாவிடில்
வள்ளுவன் வாய்மொழி வந்திங்கு நின்றிடுமே
வானம் பொய்த்தால் வழிபாடும் நடந்திடாதே
ஆதவனும் பணியேதும் செய்யாது நின்றால்
படியளிப்பவனும் படியளிப்பானோ குடம்பாய்!

![]()