கனவிலும் வருகிறது நினைவிலும் தொடர்கிறது!…. கவிதை… ஜெயராமசர்மா
எங்கும் பனைமரம் இடையிடையே ஈச்சமரம்
வெள்ளை மணற்பரப்பில் வேலிக்குள் வீடுகள்
மாடியில்லை மதிலில்லை வசதியாய் வீடில்லை
பனையோலை வீட்டில்த்தான் பலபேரும் வாழ்ந்தார்கள்
கதவில்லை பூட்டில்லை கள்ளர்பயம் இருக்கவில்லை
காசுபணம் நகையில்லை களவெடுக்க ஏதுமில்லை
மண்பானை அடுப்பிருக்கும் மிச்சமாய் சோறிருக்கும்
அடுத்தநாள் நீரூற்றி அனைவருமே பசியாற
தென்னைமரம் வாழைமரம் மாமரமும் வளவிருக்கும்
நல்லதண்ணிக் கிணறும் எல்லையில்லாச் சந்தோஷம்
குடிப்பதற்கும் குழிப்பதற்கும் வற்றாமல் நீர்வழங்கும்
வளவுக்கிண றென்றும் வரமென்றே நினைக்கின்றோம்
தாகமது வந்தால் தென்னையது துணையாகும்
செவ்விளநீர் பிடிங்கிப் போக்கிடுவோம் தாகமதை
தேனாக இனிக்கும் திவ்வியமாய் இருக்கும்
வளவில்வளர் தென்னையது வரமாக அமைந்திருக்கும்
பனைகூட எங்களுக்கு பலவற்றை ஈந்துநிற்கும்
வெயிற்காலம் நுங்குதரும் அதன்பின்னே பழத்தைத்தரும்
பழந்தந்த பின்னாலே பனங்கொட்டை கிழங்குதரும்
கொடுத்தபடி பனையிருக்கும் கொடைவள்ளல் பனைதானே
அங்கங்கே குளமிருக்கும் அதில்நீந்தி மகிழ்ந்திடுவோம்
ஆலமர விழுதினிலே ஆடியாடி அகமகிழ்திடுவோம்
அம்மன்கோவில் திருவிழாவில் அனைவருமே கூடிடுவோம்
வெள்ளைமணற் பரப்பில் விதம்விதமாய் வெடிவெடிப்போம்
ஓலைக் குடிசையில் எல்லோரும் வாழ்ந்தோம்
வாழ்ந்ததை யாவரும் வசந்தமாய் எண்ணுகிறோம்
வாழ்கையும் மாறியது மாடியிலே வசிக்கின்றோம்
வெள்ளை மணற்பரப்பு எண்ணமெலாம் இருக்கிறதே
வசதிகள் வந்தன வாழ்கையும் மாறியது
நிலம்பெயர்ந்து வந்துவிட்டோம் நினைப்பெல்லாம் அங்கேதான்
காவலில்லா வீடு கழிமண் தரை
கனவிலும் வருகிறது நினைவிலும் தொடர்கிறது !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()