அரசியல் இலாபங்களை தேடுபவர்களால் நாட்டின் பெயரை அழிப்பதற்கே காணாமல்போனோர் விவகாரம்; யாழ்.நீதிமன்றில் நிகழ்நிலையில் கோட்டாபய சாட்சியம்!

நாட்டில் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் இலாபங்களுக்காக சுமத்தப்பட்டவையாகும். அரசியல் இலாபங்களை தேடும் நபர்கள் நாட்டின் பெயரை அழிப்பதற்காக பயன்படுத்திய விடயம் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ, 15 வருடங்களுக்கு முன் நடந்த விடயங்கள் பற்றி தனக்கு ஞாபகமில்லை என்றார்.
2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து லலித் – குகன் ஆகிய இருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். அந்த வழக்கு தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிகழ்நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு சாட்சியமளித்தபோதே இதனை தெரிவித்தார்.
தனது சாட்சியத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டோர் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் காணாமல் போயிருக்கிறார்கள். பொலிஸார் அது தொடர்பாக செயற்படுவர். சகல காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் தேசிய பாதுகாப்பு சபைக்கு முற்படுத்தப்படுவதில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கிடைக்க வேண்டிய விசேடமான விடயமாக இருந்தால் அது பற்றிய தகவல்கள் கிடைக்கும்.
விசேட சந்தர்ப்பம் எது என்று கூறினால் அது கிடைத்ததா இல்லையா என்று கூறமுடியும்.
மேல்மாகாண சபை உறுப்பினர் சாகர சேனாரத்ன கடத்தப்பட்டமை தொடர்பில் என்னால் தற்போது ஞாபகப்படுத்தி கூறமுடியாது. மிக நீண்ட காலத்திற்கு முன் நடந்த சம்பவம் எனக்கு ஞாபகமில்லை.
சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் பற்றிய சம்பவம் தொடர்பாக தற்போது ஓரளவு எனக்கு ஞாபகமிருக்கிறது. என்ன நடந்தது என்று கூற இயலாது. இன்று நான் அதற்கு தயாராக வரவில்லை. 15 வருடங்களுக்கு முன் நடந்தது பற்றியது என்பதால் எனக்கு ஞாபகமில்லை.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில், கடத்திச் செல்லல் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் நான் நேரடியாகத் தலையிட்டு அறிவுறுத்தல் வழங்கிய சந்தர்ப்பங்கள் இல்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான செயற்பாடுகளில் நான் நேரடியாகத் தலையிட்டதில்லை.
கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் அரசியல் இலாபங்களுக்கு சுமத்தப்பட்டவையாகும்.அரசியல் இலாபங்களை தேடும் நபர்கள் நாட்டின் பெயரை அழிப்பதற்காக பயன்படுத்திய விடயம் – என்றார்.
![]()