கவிதைகள்
உண்மை உணர்ந்து வாழும் அனைவரும் உயிர்ப்புடன் இருப்பார்கள்!…. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா.

பட்டம்பதவி தேடித்தேடி
பறந்திடும் மனிதர்களே
திட்டம் போட்டா
மண்ணில் பிறந்தோம்
எண்ணிப் பாருங்கள்
நித்தம் பிறப்பு
நித்தம் இறப்பு
மண்ணில் நடக்கிறது
திட்டம் போட்டா
நடக்கிற தென்று
எண்ணிப் பாருங்கள் !
ஆசை கொண்டு
அலையும் அனைவரும்
அனைத்தும் இழக்கின்றார்
அலையும் மனத்தால்
அனைத்து மக்கள்
அல்லற் படுகின்றார்
ஓடும் ஓட்டமும்
தேடும் செல்வமும்
தொடர்ந்து வந்திடுமா
எண்ணிப் பார்க்க
மறக்கும் மனிதா
இதுதான் வாழ்க்கையடா
ஆசை வலையில்
அகப்படும் அனைவரும்
அழுதே மடிகின்றார்
வேஷம் போடும்
மனிதர் அனைவரும்
வெந்து நொடிகின்றார்
உண்மை உணரா
வாழும் வாழ்கையால்
ஒருவர்க்கும் பயனில்லை
உண்மை உணர்ந்து
வாழும் அனைவரும்
உயிர்ப்புடன் இருப்பார்கள் !
![]()