இலங்கை

கிரிஷ் கொடுக்கல் வாங்கல்; நாமலிடம் சிறையிலேயே வாக்குமூலம் பதிவு!

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன என்பவரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைவாகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள காணியொன்றை கிரிஷ் நிறுவனத்திற்குப் பெற்றுக்கொள்வதற்கும், அதற்குரிய அனுமதிகளை விரைவுபடுத்தி உதவி செய்வதற்காகவும் 3 சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு குறித்த இலஞ்சப் பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன கடந்த 24 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதுடன், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையைக் கவனத்திற் கொண்ட நீதவான், இச்சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கினார்.

அதன்படி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று (25) முற்பகல் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொண்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *