அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்க 2/3 பெரும்பான்மையுடன் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது அரசு; ஆதரவாக 158 – எதிராக 63 – மூவர் பங்கேற்கவில்லை

நாட்டில் அண்மைக்காலமாக பெரும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் எதிர்கொண்டு வந்த 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியன பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டன.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 95 மேலதிக வாக்குகள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும்நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியன கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நீதி அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும் என்று உத்தரவிடுமாறு கோரி, அந்த சட்டமூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதன்படி 65க்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவற்றின் விசாரணை பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நடைபெற்று கடந்த 2ஆம் திகதி மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியாணம் இரகசிய தீர்ப்பாக சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், நீதிமன்ற வியாக்கியாணம் கடந்த 22ஆம் திகதி சபாநாயகரால் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இதன்போது,அரசியலமைப்பின் 83-வது உறுப்புரையின் ஏற்பாடுகளின்படி, அரசியலமைப்பிற்கான 22 ஆவ திருத்தச் சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு பகுதியையும் மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியதில்லை என்றும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இதேவேளை நீதித்துறை (திருத்த) சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல, எனவே, இதனை பாரளுமன்றத்தின் எளிய பெரும்பான்மை மூலம் நிறைவேற்றலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.
இதனையடுத்து 24 மற்றும் 25ஆம் திகதிகளில் இந்தத் திருத்தச் சட்டமூலங்கள் மீதான இருநாள் விவாதங்கள் நடத்தப்பட்ட நிலையில் 25ஆம் திகதி இரவு 7.10 மணியளவில் ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் வாக்கெடுப்புக்கான கோரிக்கை விடப்பட்டது.
இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் சகல உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இதன்படி அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் கிடைத்தன. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும்கட்சிகள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, புதிய ஜனநாயக முன்னணி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் .தொழிற்கட்சி மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட 63 பேர் எதிராக வாக்களித்தனர். இதன்படி 95 மேலதிக வாக்குகள் என்ற அடிப்படையில் இந்த சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேறியது.
இதேவேளை நீதித்துறை (திருத்த) சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் சகல உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இதன்படி அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் கிடைத்தன. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும்கட்சிகள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, புதிய ஜனநாயக முன்னணி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட 63 பேர் எதிராக வாக்களித்தனர். இதன்படி இந்த சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
இந்த இரண்டு திருத்தச் சட்டமூலங்கள் மீதான வாக்கெடுப்பில் புதிய ஜனநாயக முன்னணி எம்.பிக்களான ரவி கருணாநாயக்க, பைசர் முஸ்தபா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான நயணவாசல திலக ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
![]()