ஒருபோதும் இரட்டை வேட அரசியலை கையாளமாட்டேன்: மனோ கணேசன் திட்டவட்டம்

மக்கள் ஆதரவளித்தாலும் அல்லது எதிராக வாக்களித்தாலும், ஒருபோதும் இரட்டை வேட அரசியலைக் கையாளாமல் தன் மனசாட்சிக்கு உண்மையாகவும் கொள்கைகளில் உறுதியாகவும் நின்று செயல்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 17வது திருத்தம் முதல் அண்மைய 22வது திருத்தம் வரையிலான அரசியல் பயணத்தில் தனது நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகள் குறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்க பதிவொன்றில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கவிக்கப்பட்டுள்ளதாவது, தான் சொல்வதை செயலிலும் காட்டக்கூடிய ஒரு அரசியல்வாதி என்றும், அரசியல் சூழலுக்கு ஏற்ப புதிய நிலைப்பாடுகளை உள்வாங்கி தன்னை புதுப்பித்துக் கொண்ட போதிலும், தனது நேர்மையை எந்த சந்தர்ப்பத்திலும் இணக்கம் செய்து கொண்டது இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகப் பாதுகாப்பை முன்னிறுத்திப் பல்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தங்களின் போது தான் வகித்த நிலைப்பாடு குறித்து அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் ஜனநாயக விழுமியங்களையும் நல்லாட்சியையும் வலுப்படுத்திய 17 ஆவது திருத்தத்தின் துணைப் பிரிவு (17A), 19 ஆவது திருத்தம் மற்றும் 21 ஆவது திருத்தச் சட்டம் ஆகியவற்றுடன் தான் எப்போதும் உறுதியாக நின்றதாகவும், அவற்றுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், 18 ஆவது திருத்தம் மற்றும் 20 ஆவது திருத்தம் போன்றவற்றுக்குத் தான் வெளிப்படையாக எதிராக வாக்களித்ததாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அந்த வரிசையில், தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கும் தான் எதிராகவே வாக்களிக்கப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
காலத்திற்குக் காலம் மாறக்கூடிய அரசியல் சூழல்களுக்குத் தகுந்தாற்போல நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளாமல், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சர்வதிகாரத்துக்கு எதிராக தொடர்ந்தும் இருந்துள்ளேன் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
![]()