நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த ஞானசார தேரர் திடீரென மயக்கம் – உணவகத்திற்குள் பரபரப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மயக்கம் காரணமாக மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
ஞானசார தேரர் நேற்று காலை மஹரகம அபெக்ஷா மருத்துவமனைக்கு சென்று சுகவீனமுற்றிருக்கும் தேரர் ஒருவரைப் பார்வையிட்டு விட்டு நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை, புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பெரேரா அன்ட் சன்ஸ் உணவகத்தில் உணவு உட்கொண்டு கொண்டிருந்த போது மயக்கநிலை ஏற்பட்டுள்ளது.
உணவகத்திற்குள் பரபரப்பு
இதன் காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வாவிடம் தெரிவித்தார்.
இதன்காரணமாக ஞானசார தேரரால் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத நிலையில், அவருடன் இருந்த விஹாரகல விஜித்த தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகி இதனைக் குறிப்பிட்டார்.
பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி சஞ்சீவ அந்தனி, சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க ஆகியோருடன் இணைந்து முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தார்.
2016ஆம் ஆண்டு ஜூலை 08ஆம் திகதியளவில் கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின், போது இஸ்லாம் மதம் தொடர்பில் விடுக்கப்பட்ட கூற்றின் மூலம் மத நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
வழக்குத் தாக்கல்
குறித்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரதிவாதியான ஞானசார தேரருக்கு 09 மாத கால கடூழியச் சிறைத்தண்டனையும் 1,500 ரூபா அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்தது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக ஞானசார தேரரால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, அந்த வழக்கு 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதி இடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மாதம் 01ஆம் திகதி அழைக்கப்படுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா உத்தரவிட்டுள்ளார்.
![]()