வெளிநாட்டில் இருந்தாலும் விசாரணையிலிருந்து எவரும் தப்ப முடியாது

விசாரணைகளுக்கு முகம்கொடுக்க முடியாதவர்கள் சாக்குபோக்குகளை கூறி விசாரணைகளுக்கே வெட்டுக்காட்டி தப்பிக்க முயற்சிக்கின்றனர்.ஆனால் அவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நீதிமன்றத்துடன் தொடர்புடைய அமைப்புகளை நாங்கள் சுயாதீனப்படுத்தியுள்ளோம். குற்றப் புலனாய்வு பிரிவு முன்பு அரசியல்மயமாக்கப்பட்ட ஒரு நிறுவனமாக இருந்தது. ஆனால் அதனை நாம் ஒரு சுயாதீனமான நிறுவனமாக மாற்றியுள்ளோம். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றை நாங்கள் சுயாதீனமான அமைப்புகளாக மாற்றியுள்ளோம்.
இந்தக் கட்டமைப்புதான் இன்று கிடைத்துள்ள வெற்றிகளின் இரகசியம். அரசியல் தலையீடுகள் இல்லாத ஒரு அரசியல் அதிகாரத்தை உருவாக்கியுள்ளோம். அதன் ஆசீர்வாதத்தால், சுயாதீனமாகச் செயல்படக்கூடிய அரச சேவையை உருவாக்கியுள்ளோம்.
நாங்கள் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி அரச சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் யாராக இருந்தாலும், எந்தவித பாகுபாடுமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளோம்.
முன்பு முகத்தைப் பார்த்துச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அரசியலமைப்புக்கு உட்பட்டு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.
முன்பு, சீஐடி மற்றும் பொலிஸாரை தங்களின் இடத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் அளித்தனர். ஆனால் இன்று அந்த நடைமுறை மாற்றப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி உட்பட எந்தவொரு அரசியல் அதிகாரியாராக இருந்தாலும், விசாரணை அமைப்புகளுக்கு நேரில் சென்று வாக்குமூலம் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அதற்கு முகங்கொடுக்க முடியாதவர்கள், இன்று வெவ்வேறு சாக்கு போக்குகளை கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்தவொரு சாக்குபோக்குகளும் செல்லுபடியாகாது. அந்த அவற்றை நாங்கள் பொருட்படுத்துவதும் இல்லை. இந்த நாட்டின் விசாரணை அமைப்புகள், சாக்குப்போக்கு சொல்லும் நபர்களை இலங்கையில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி இலங்கையில் இருந்தால் 106வது பிரிவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ பொலிஸாரோ அறிவித்தல் அனுப்பி வரவழைப்பார்கள். வெளிநாட்டில் இருந்தால் சிவப்பு பிடியாணை அனுப்பி வரவழைப்பார்கள். இதில் இருந்து எவராலும் வெட்டுக்காட்டி தப்பிக்க முடியாது என்றார்.
![]()