கவிதைகள்

“புரட்டாதி மாதம் தெய்வீக மாதம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. ( 19-09-2026 சனிக்கிழமை புரட்டாதிச் சனி )

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
          மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
                  மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா 
Screenshot
நம்பிக்கை என்பது பொதுவான தாகும்
அவரவர் நம்பிக்கை அவர்கட்குப் பெரிதே
விமர்சனம் செய்பவர் விமர்சனம் செய்வார்
வீண்வாதம் செய்வாரை விட்டுவிட வேண்டும்
 
ஒவ்வொரு மாதமும் உன்னத மாதமே
ஒவ்வொரு நாளும் உயர்வான நாளே
ஒவ்வொரு நொடியும் உன்னத மாகும்
உணருவார் உணருவார் உணராதார் உணரார்
 
ஆடியை ஒதுக்குவார் ஆவணி அணைப்பார் 
புரட்டாதி தள்ளுவார் ஐப்பசி அள்ளுவார்
ஆடியை அடுத்த புரட்டாதி மாதத்தை
பீடையாய் எண்ணி தள்ளியே வைப்பார்
 
ஆடி புரட்டாதி அருளான மாதமே
ஆடியை அம்மனின் மாதமாய் நம்புவார் 
புரட்டாதி என்றதும் சனியையே எண்ணுவார்
உண்மையில் புரட்டாதி உன்னத மாதமே
 
பெருமாளைப் போற்றிடும் புரட்டாதி விரதம்
பெருங்கேடை அகற்றும் பேரருள் மாதம்
சனியது தோஷம் நீங்கிட வைக்க
தவறாது பெருமாளைப் போற்றிடும் மாதம் 
 
சனியினால் பற்பல சங்கடம் வருமென
நம்பிடும் பலபேர் நாடெலாம் இருக்கிறார்
சனியது சங்கடம் அகன்றிடும் வகையில்
அமையும் விரதம் புரட்டாதி விரதம் 
 
இந்து ஆலயம் அனைத்திலும் புரட்டாதி
ஹோமம் பூஜைகள் சிறப்பாய் நடக்கும்
விரதம் இருப்பார் வேண்டுதல் வேண்டுவார்
ஆலயந் தோறும் நிறைந்துமே நிற்பார்
 
சங்கடம் தீர்த்திடு சனி பகவானே
எங்களின் வாழ்வினில் ஏற்றிடு ஒளியென
விளக்குகள் ஏற்றி விநயமாய் வேண்டி
விரதம் இருப்பார் புரட்டாதி மாதத்தில்
 
காக்கும் கடவுளாம் பெருமாளை வேண்டி
சனியின் சங்கடம் அகற்றிட  வேண்டுவார்
பெருமாளின் முன்னே சனியது சங்கடம்
பொடிப் பொடியாகி மறைந்துமே போகும்
 
புரட்டாதி மாதம் தெய்வீக மாதம்
புரட்டாதிச் சனியும் பொருள்நிறை நாளே
விரதம் இருப்போம் வேண்டுவோம் இறையை
நம்பிக்கை வைப்பார் நல்லதைப் பெறுவார்  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *