வேற்றுக்கிரக உயிர்கள் உண்மையிலேயே உள்ளனவா? – விஞ்ஞானிகள் முக்கிய தகவல்

வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு இதுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லை. இருப்பினும், பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறு இடங்களிலும் உயிர்கள் இருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, K2-18b எனப்படும் தொலைதூர கோள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட ‘Cheyava Falls’ என்ற பாறை ஆகியவை விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
K2-18b தொடர்பான ஆய்வுகளில் உயிரினங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் சில வேதியியல் மூலக்கூறுகளுக்கான சாத்தியமான தடயங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், செவ்வாயில் கண்டறியப்பட்ட ‘Cheyava Falls’ பாறையிலும் பண்டைய நுண்ணுயிர்களின் தடயங்களாக இருக்கக்கூடிய சில அம்சங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில்,K2-18b தொடர்பான ஆய்வில் 6.6% விஞ்ஞானிகள் மட்டுமே வேற்றுக்கிரக உயிர்கள் இருக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், 15.1% பேர் மட்டுமே செவ்வாய் பாறையில் உயிரினங்களின் தடயங்கள் இருக்கக்கூடும் எனக் கூறியுள்ளனர்.
எனினும், இவை வேற்றுக்கிரக உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் அல்ல என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். உயிரினங்களால் உருவாகக்கூடிய சில வேதியியல் மற்றும் புவியியல் அடையாளங்கள், உயிரற்ற இயற்கைச் செயல்முறைகளாலும் உருவாகக்கூடும் என்பதே இதற்குக் காரணமாகும்.
இதனால், தற்போதைய ஆதாரங்களின் அடிப்படையில் வேற்றுக்கிரக உயிர்கள் இருப்பதாக உறுதியாகக் கூற முடியாது. மேலும் ஆய்வுகள், புதிய தரவுகள் மற்றும் எதிர்கால விண்வெளி ஆய்வுகள் மூலமே இந்த மர்மத்திற்கு தெளிவான பதில் கிடைக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
![]()