வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கான அறிவிப்பு; கட்டாயமாகும் நடைமுறை

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதாயின், அவர்கள் நாட்டிற்கு வருகை தந்து கட்டாயமாக மூன்று மாத காலப்பகுதி வரை தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம், சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்து மூலப் பரீட்சையில் சித்தியடைந்து மூன்று மாதங்கள் நிறைவடையும் முன்னர் எக்காரணம் கொண்டும் செய்முறைப் பரீட்சைக்கு அனுமதி வழங்க முடியாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரப் பரீட்சை எழுதப்பட்ட நாளில் இருந்து மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கமே பயிற்சி பெறுவதற்காகவே ஆகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றிய நாளில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் வரை குறித்த தற்காலிக பயிற்சி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, எழுத்து மூலப் பரீட்சை எழுதிய பின்னர் மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பதாரர் ஒருவர் வெளிநாடு செல்வாராயின், அவர் மீண்டும் ஒன்றரை வருட காலப்பகுதி முடிவடைவதற்குள் இலங்கைக்கு வருகை தந்து, செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றி மட்டுமே சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். பயணவழிகாட்டிகளைப் படி
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
![]()