கட்டுரைகள்

குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போன்று “இலங்கை அரசியல்யாப்பு” ஆகிவிட்டதா?…  நியூசிலாந்து சிற்சபேசன்

இலங்கை அரசியல்வாதிகளுக்கு, அரசியல்யாப்பை மாற்றுவது தணியாத தாகமாகும். அதற்கு, “தோழர்”களும் விதிவிலக்கல்ல என்பதே குரூரமான யதார்த்தமாகும்.

தேசமொன்றின் அச்சாணியாகவே அரசியல்யாப்பு சொல்லப்படுகின்றது. அஃது, அரசாங்க கட்டமைப்பு, அதிகார வரம்பு என்பவற்றோடு குடிமக்களின் உரிமைகளையும் வரையறுக்கின்றது.

சட்டமியற்றுகின்ற பாராளுமன்றம், அதைச் செயற்படுத்துகின்ற நிர்வாகத்துறை, மற்றும் நீதியை நிலைநாட்டவேண்டிய நீதித்துறை ஆகியவற்றுடைய செயற்படுபாங்கை அரசியல்யாப்பு வகுக்கின்றது.

இறையாண்மை வழியான உச்சபட்ச அதிகாரத்தை அரசியல்யாப்பு நெறிப்படுத்துகின்றது.

பெரும்பாலான நாடுகளிலே, எழுதப்பட்ட ஆவணமாகவே அரசியல்யாப்பு காணப்படுகின்றது. விதிவிலக்காக, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து போன்ற நாடுகளைச் சொல்லலாம். அங்கே எழுதப்பட்ட அரசியல்யாப்பு கிடையாது. விதிகள் அனைத்தும் ஒரே புத்தகமாக இருப்பதில்லை. இருந்தாலும்கூட, காலாதிகாலமாகப் பின்பற்றப்படுகின்ற மரபுகள், பாராளுமன்றச் சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலே தேசபரிபாலனம் “தெளிந்த நீரோடை” போன்று சீராக நடைபெறுகின்றது.

அரசியல்யாப்பு, ஒருவகையிலே, நிரந்தரத்தன்மைகொண்ட ஆவணமாகும். அதேவேளையில், தேசத்தின் தேவைகளுக்கு அமைவாக, திருத்தங்களை மேற்கொள்வதுகூட சட்டபூர்வமான செயல்முறையாகும். அதிலேகூட, எப்படியான திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் கட்டுப்பாடுகள் வரையறுக்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு, இந்தியாவிலே, அரசியல்யாப்புத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படுள்ளது. அதேவேளையில், அரசியலமைப்பின் “அடிப்படைக் கட்டமைப்பை” மாற்றுவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படவில்லை.

அவுஸ்திரேலியாவிலே, அரசியல்யாப்புத் திருத்தம் தொடர்பிலே கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அரசியல்யாப்புத் திருத்தங்களை, தன்னிச்சையாக, மேற்கொள்வதற்கான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்படவில்லை. சர்வசன வாக்கெடுப்பு மூலமான மக்கள் ஆதரவைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

அரசியல்யாப்பில் திருத்தம் மேற்கொள்வதாயின், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலுமே, திருத்தமொன்றிற்கான சட்டமூலத்தை, முழுப் பெரும்பான்மையுடன், நிறைவேற்றவேண்டும்.

அதன்பின்னர், பாராளுமன்றத்தில் நிறைவேறிய சட்டமூலம் தொடர்பில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும்.

சர்வசன வாக்கெடுப்பிலேகூட, மொத்த வாக்காளர்களில் 50 விழுக்காடுக்கு அதிகமானோர் ஆதரித்து வாக்களித்திருக்கவேண்டும் என்னும் நிபந்தனை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதிலேயும்கூட, மொத்தமுள்ள ஆறு மாநிலங்களில், குறைந்தது நான்கு மாநிலங்களிலாவது பெரும்பான்மையான மக்கள் ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும்.

மேற்படி நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்ட வகையிலேயே, அவுஸ்திரேலியாவில் அரசியல்யாப்புத் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

அவுஸ்திரேலியாவில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

கடந்த 125 வரையான ஆண்டுகளிலே, 45 வரையான சர்வசன வாக்கெடுப்புக்கள் நடைபெற்றுள்ளன. அதிலே, எட்டு திருத்தங்களே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சனத்தொகைக் கணக்கெடுப்பிலே, பூர்வகுடி மக்களைச் சேர்த்துக்கொள்ளவும், பூர்வகுடி மக்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுகின்ற அதிகாரம் பெடரல் (கூட்டாட்சி) அரசுக்கு வழங்குவதுமான அரசியல்யாப்புத் திருத்தம், 90 விழுக்காடு ஆதரவுடன், 1967ல் அவுஸ்திரேலியாவில் நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டிஷ் முடியாட்சியிலிருந்து விலகி, குடியரசாக மாறுவதற்கான திருத்தத்தை, 1999ல் சர்வசன வாக்கெடுப்பொன்றிலே, அவுஸ்திரேலிய மக்கள் நிராகரித்தனர்.

நியூசிலாந்திலே, பொதுத்தேர்தலின்போது நிர்வாகத் தொடர்ச்சியைப் பாதுகாப்பதற்காக, கபாந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் பதவியில் நீடிப்பதற்கான விதிமுறைகள் தொடர்பில், சட்டத் திருத்தங்களை பாராளுமன்றம் நிறைவேற்றியது.

இந்தியாவிலே, பெண்களுக்கு இடஒதுக்கீடு, பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு, வரி அமுலாக்கல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து போன்ற விடயங்களிலே அரசியல்யாப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்தவகையிலே, தேசநலன் அல்லது நிர்வாகச் செழுமையாக்கல் போன்ற விடயங்களிலே, தொலைநோக்கு பார்வையுடனேயே, வெவ்வேறு நாடுகளிலும் அரசியல்யாப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆக, அரசியல்யாப்புத் திருத்தங்களை மேற்கொள்ளவோ அல்லது புதிய அரசியல்யாப்பை உருவாக்குவதற்கான, தான்தோன்றித்தனமான அதிகாரம், பாராளுமன்றமொன்றுக்கு எளிதில் வழங்கப்படுவதில்லை.

ஆனாலும்கூட, “திறந்தவீட்டில் நாய் நுழைவது” போன்று பாராளுமன்றப் பலத்தைப் பயன்படுத்தி அரசியல்யாப்பை “வளைக்க” அரசியல்வாதிகள் முற்பட்டுவிடுகின்றனர்.

22வது திருத்தம் : சட்டத்தரணிகளின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம் -  ஐபிசி தமிழ்

இலங்கையிலே, 1972ல் குடியரசு அரசியல்யாப்பு உருவாக்கப்பட்டது.

1977 பொதுத்தேர்தல் வெற்றியைப் பயன்படுத்தி, இரண்டாவது அரசியல்யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

சனாதிபதியின் அதிகார வரம்புகளை விரிவுபடுத்தவும், தேர்தல்முறை தொடர்பான நிபந்தனைகளை ஆளும்தரப்புக்கு சாதகமாக மாற்றவுமே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1982ல் பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்காக நான்காவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

பாராளுமன்றத்திலிருந்து, வடக்கு – கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளை, வெளியேற்ற ஆறாவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

சனாதிபதித் தேர்தலிலே இரண்டு தடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்னும் விதியை நீக்கி, சுயாதீன ஆணைக்குழுக்களை சனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவே 18வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

18வது திருத்தத்தை முறியடிக்க 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

19வது திருத்தத்தை முறியடிக்க 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அதன்பின்னர், 19வது திருத்தத்தின் சில ஏற்பாடுகளை மீண்டும் கொண்டுவரவே 21வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆக, சிறார்களின் “ஒளித்துப் பிடிக்கும் விளையாட்டை” விஞ்சும் வகையிலே மேற்படி நான்கு திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது, நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை நீட்டிக்கின்ற 22வது திருத்தம்கூட, “மாரீசனின் மாயமான்” போன்றதாகும்.

கூடவே, நீண்டகாலம் நடைமுறையிலுள்ள “பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு” பதிலாக “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை” முன்வைக்கும் முனைப்புத் தெரிகின்றது.

இவ்வாறாக, அதிகாரப்“பசிக்காக” அரசியல்யாப்பை “வளைப்பதுவே” அரசியல் வரலாறாகிவிட்டது.

அதனாலேயே, “குரங்கின் கையில் கிடைத்த பூமாலை” போன்று “இலங்கையின் அரசியல்யாப்பு” ஆகிவிட்டதா? என்னும் கேள்வி மிஞ்சுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *