கட்டுரைகள்

தேசிய, மாநிலப் பாடல்களும் அரசியலும் …. அண்டனூர் சுரா கட்டுரைத் தொடர் – 13…. அண்டனூர் சுரா

அண்டனூர் சுரா
அண்டனூர் சுரா

(உப்பிலிக்குடி, தீவாந்திரம் போன்ற நாவல்களின் ஆசிரியர்)

‘மூன்றாம் இடம்’ என்கிற சொல்லாடல் சமீபத்திய தமிழ்நாடு அரசியலில் பெரும் பூதாகரமான பேசும்பொருளாகவும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. முதல் பாடலாகப் பாடப்பட்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து ‘நீராருங் கடலுடுத்த’ மூன்றாம் இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. இது முந்தைய ஆளும் அரசு காலத்திலேயே தொடங்கிவிட்டாலும் தற்போது விவாதத்திற்குரிய ஒன்றாகியுள்ளது.

1970 ஆம் ஆண்டுகளில் தேசிய கீதத்தை இரண்டாம் இடத்திற்கு  நகர்த்தி தமிழ்த்தாய் முதலிடம் பிடித்தது. தற்போது இவ்விரு பாடல்களையும் இரண்டாம் மூன்றாம் இடத்திற்குத் தள்ளி ‘வந்தே மாதரம்’ முதலிடம் பிடித்துள்ளது. இப்பாடல் தாய்நிலமாகவும் மொழியாகவும் கொண்ட மேற்குவங்கத்தில் இப்படியான முயற்சிகள் நடைபெறவில்லை.

சங்கே முழங்கு

தமிழ்த்தாய் வாழ்த்து என்றொரு பாடல் தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாகத் தேவைப்பட பாவேந்தர் பாரதிதாசன் ஒருவகையில் காரணமாக இருந்தார். சுதந்திர இந்தியாவில் சென்னை மாநிலத்தைக் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கையில் அரசு விழாக்களில் ‘ஜன கண மன’ தேசிய கீதமாக இசைக்கப்பட்டது. இக்கட்சி ஆட்சி முடிவுக்கு வந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் அக்கட்சியின் தொண்டர்கள் அரசு விழாக்களின்போது பாரதிதாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலை எழுச்சியாக பாடத்தொடங்கினார்கள். இப்படியாக பாடுவதை கவனித்த காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆளும் திமுக தேசிய கீதத்திற்கு காட்டும் மரியாதையைக் கேள்விக்கு உட்படுத்தினார்கள்.

நவசக்தி இதழ் கண்டனம்

அன்றைய தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த ப.உ.சண்முகம் அவர்கள் மதுரையில் நடைபெற்ற ஓர் அரசு விழாவில் கலந்துகொண்டு தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னே சென்றுவிட்டார். அமைச்சர் தேசியக் கீதத்தை அவமதித்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. நவசக்தி பத்திரிகை இதுகுறித்து எழுதியது. இந்தப் பத்திரிகை செய்தியைச் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் திரு. சித்தன் மற்றும் திரு கருப்பையா இருவரும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார்கள். இந்தத் தீர்மானம் தேசிய கீதத்தின் மீது திமுக அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்தியது.

இந்த தீர்மானத்தின்மீதான விவாதம் சட்டப்பேரவையில் எழுந்தது. இதற்குப் பதிலளித்து உரையாற்றிய கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 11.03.1969 மற்றும் 25.03.1969 ஆகிய இரு நாட்கள் உரையாற்றினார். பேரறிஞர் அண்ணா அவர்களின் மரணத்திற்குப் பிறகு முதலமைச்சராக அவர் பதவியேற்றுக்கொண்டு ஆற்றிய தொடக்கக் கால பதிலுரை இது.

மதுரை கல்லூரி ஒன்றில் தேசிய கீதம் பாடுகையில் அப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்த கோஷம், அமைச்சர் ப.உ.சண்முகம்  தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே சென்றுவிட்ட பிரச்சனையுடன் சேர்த்து விவாதிக்கப்பட்டது. இதற்கு முதலமைச்சர்  மு. கருணாநிதி அவர்கள் இவ்வாறாக பதிலளித்தார்: 1959 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றத்தைத் திமுக கைப்பற்றிய நேரத்திலும் தேசிய கொடியேற்றி  அதற்கு தேசிய கீதம் இசைத்து அதற்குரிய மரியாதையைச் செலுத்தி வந்திருக்கிறோம். தேசிய கீதம் இந்தி மொழியால் ஆக்கப்பட்டது அல்ல, அது வங்க மொழியால் இயற்றப்பட்டது. வங்க மொழிக்கும் தமிழ் மொழிக்கும் வங்கத்திலேயுள்ள மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் நீண்ட நெடுங்காலமாகத் தொடர்புண்டு. அந்த வகையில் மாத்திரமல்ல, வேறு யாருக்கும் மதுரையில் நிகழ்ந்ததுபோல தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் ஏற்பட்டால் அது தமிழ்நாட்டின் துரதிருஷ்டவசமேயாகும் என்று பதிலுரை கொடுத்தார்.

மற்றொரு நாள் மேல்சபை உறுப்பினராக இருந்த திரு. டி.கே.ஷண்முகம் அவர்கள் தேசிய கீதத்திற்குப் பதிலாக வேறு ஒரு தமிழ்ப்பாடலைப் பாடலாமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கலைஞர் அவர்கள், அது முடியாது என்று உறுதிபட பதிலளித்தார். ஒருவேளை மாணவர்கள் ‘சங்கே முழங்கு’ என்கிற பாடலை பாடவிரும்பினால் அதைத் தேசிய கீதத்திற்கு முன்பு பாடிவிட்டு கடைசியாகத் தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்றார்.

திமுகவினர் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக காட்டிவந்த எதிர்ப்பின் நீட்சியாக அரசு விழாக்களில் தமிழ் மற்றும் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் பறைசாற்ற தேசிய கீதத்திற்கு நிகரான ஒரு பாடலைத் தேர்வுசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு மாநில அரசு வந்தது. அதற்காக தமிழறிஞர்களைக் கூட்டி தாய்த்தமிழ் வாழ்த்து பாடலைத் தேர்வு செய்ய கேட்டுக்கொண்டது. இதன்படி பாரதியார், பாரதிதாசனின் கவிதைகள், சிலப்பதிகாரம் உட்பட பல்வேறு இலக்கியங்களில் உள்ள வாழ்த்துப் பாடலை எடுத்து வைத்துக்கொண்டு ஆய்வுசெய்தார்கள். பாரதிதாசன் குழந்தைப் பாடலாக இயற்றிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே, மான்புகழ் நீயே, என் தாயே’  என்கிறப் பாடல் அத்தேர்வில் முக்கிய பாடலாகவும் இன்னும் சில பாடல்களும் இடம் பெற்றன. இறுதியில் ‘மனோன்மணீயம்’ நூலில் பெ.சுந்தரம் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த’ மொழி வாழ்த்துப் பாடலும் அரங்க.வெங்கடாசலம் இயற்றிய ‘வானார்ந்த பொதியின்மிசை’ என்கிற பாடலும் தேர்வாகி இரண்டில் ஒரு பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏற்றது என்று முடிவுக்கு வந்தார்கள்.

தேசிய கீதத்துடன் ஒப்பீடு

இவ்விரு பாடல்களையும் தேசிய கீதமாகப் பாடப்பட்ட வந்த தாகூர் பாடலுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பெ.சுந்தரம்  இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த’ பாடல் புவிஇயல், தொன்மை, மொழி வளம் கொண்டிருந்தது. மேலும் இப்பாடல் தாகூர் இயற்றிய தேசிய கீதம் பாடலுக்கு நிகராக இருந்தது. எனவே  சுந்தரம் இயற்றிய வாழ்த்துப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஜுலை 7, 1970 அன்று ஒருமனதாக ஏற்க முடிவானது. இப்பாடலைப் பாண்டிசேரி அரசு ஏற்பது குறித்த விருப்பத்தை அறிய ஐந்து மாதக்காலம் தமிழக அரசு காத்திருந்தது. பாண்டிச்சேரி அரசு மண்ணின் மைந்தரான பாரதிதாசன் இயற்றிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்கிற பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டது.

கரந்தைத் தமிழ்ச்சங்கம்

‘நீராருங் கடலுடுத்த..’ பாடலை தமிழ்நாடு அரசு மாநில வாழ்த்துப் பாடலாக தமிழ்நாடு அரசு – பொதுப்பணித்துறை  அரசாணை (மெமோ) எண் 3584/70 – 4 நாள்  நவம்பர் 23, 1970 அன்று ஏற்றுக்கொண்டது. இப்பாடல் 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு திரைத்துறையினருக்கு வழங்கப்பட்ட விருதளிப்பு விழாவில் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சிறந்த பெண் பின்னணிப் பாடகர் விருது பெற்ற பி. சுசிலா அவர்கள் இப்பாடலைப் பாடினார். ஓர் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது இப்பொழுதுதான்.

இதற்கெல்லாம் முன்னதாக‘நீராருங் கடலுடுத்த’ பாடல் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடிவந்தது. இச்சங்கம் 14.05.1911 அன்று  தொடங்கப்பட்டு இரண்டாமாண்டு முதல் இப்பாடல் வாழ்த்துப் பாடலாக பாடப்பட்டது. இப்பாடலை முதலில் பாடியவர் கூடலூர் வே. இராமசாமி என்று 1913 ஆம் ஆண்டு இத்தமிழ்ச் சங்கத்தின் மூன்றாமாண்டு அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

வந்தே மாதரம் முன்னுரிமை

மத்திய அரசு விழாக்களில் முதலில் ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இப்பாடல் இதற்குரிய தகுதியும் மதிப்பும் கொண்டது என்பதற்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதேநேரம் இப்பாடலோடும் காலத்தோடும் நெருங்கிய தொடர்பும் மதிப்பும் கொண்ட இப்பாடலுக்கு நிகரான கவிஞர் முகமது இக்பால் இயற்றிய ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடல் ஆளும் மத்திய அரசால் கண்டுக்கொள்ளப்படாமல் புறக்கணிப்புக்கு உள்ளாகி வந்தே மாதரம் பாடலுக்குக் கொடுக்கும் அதீத முக்கியத்துவமும் அதற்குளிருக்கும் அரசியலும் விவாதத்திற்குரியவை.

வந்தே மாதரம் பாடல் பக்கிங் சந்திரர் இயற்றிய ஆனந்த மடம் எனும் நூலில் இடம் பெற்றது. இப்பாடல் இந்நூலில் இடம்பெறுவதற்கும் முன்பு பங்காதர்ஷன் எனும் இதழில் வெளியானது. ‘ஆனந்த மடம்’ வங்க சுல்தான்  ஆட்சிக்கு எதிரான இளைஞர்களின் தன்னெழுச்சி பற்றிய கதை.

சாரே ஜஹான் சே அச்சா எனும் பாடல் உருது மொழிக் கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால் எனும் தத்துவஞானியால் இயற்றப்பட்டது.  ‘உலகெங்கிலும் உள்ள நாடுகளை விட நமது இந்தியா சிறந்தது’ என்பது இப்பாடலின் பொருள். இப்பாடல் அளவிற்கு இந்திய நிலம், மக்கள், உணர்வுகளைப் பாடிய வேறொரு இந்திய பாடல் கிடையாது. ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ‘ஜன கண மன’ பாடல் இந்திய நிலவரைவியல் சார்ந்தது.

இந்த மூன்று பாடல்களும் இந்த வரிசையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றிய காலத்தில் அவையில் இடம் பிடித்தன. மேலும்  இந்திய சுதந்திர நாளன்று நடுஇரவில் இவ்வாறான நிகழ்வுகளுக்கிடையில் பாடப்பட்டன.

1947 ஆகஸ்ட் 14, இரவு 11.00 மணி புதுடெல்லி, அரசியலமைப்பு மைய மண்டபத்தில்  இந்திய அரசியலமைப்பு அவை  ஐந்தாவது அமர்வு நடந்துகொண்டிருந்தது. இன்றைய நாள் அமர்வு இரவு 11.00 மணிக்குத் தொடங்கியது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய அவை தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்களின் தலைமையில் தொடங்கிய இந்த அமர்வில் ‘சுசேதா கிருபாளானி’ அவர்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் பத்தியைப் பாடினார்.   தலைவர் உரைக்கு அடுத்ததாக பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் மறுநாள் ”விதியுடன் ஓர் ஒப்பந்தம்” எனும் தலைப்பில் சுதந்திர தினச் செய்தியாக  நாளிதழ்களில் பிரசுரமாகின.

ஆகஸ்ட் 14, 1947. நள்ளிரவு 12.00 மணி, கடிகாரம் ஒலி எழுப்பியது. இந்நேரத்தில் இந்திய அரசியலமைப்பு அவை மிக முக்கியமான ஒரு நிகழ்வுக்காக எழுந்து நின்றது. தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் சுதந்திர நாள் உறுதிமொழியை வாசித்தார். இந்த உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு இந்திய அரசியலமைப்பு சபை அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதுடன் இந்திய கவர்னர் ஜெனரலாக லார்டு மவுண்ட்பேட்டனை நியமிப்பதற்கு சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது.

சாரே ஜஹான் சே அச்சா

இரவு 12.30 மணி, இந்திய தேசியக் கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. பண்டிட் சரோஜினி நாயுடு இக்கொடியை அறிமுகப்படுத்துவதாக இருந்தது. அவர் அவைக்கு வராததால் திருமதி ஹன்சா ஜீவராஜ் மேத்தா அவர்கள் தேசிய கொடியை அரசியலமைப்பு அவையில் அறிமுகம் செய்து நாட்டிற்குச் சமர்ப்பித்தார்.  தேசிய கொடி அறிமுகத்தைத் தொடர்ந்து ‘சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ எனும் புகழ்பெற்ற தேசப் பக்திப்பாடல் அவையில் பாடப்பட்டது. இப்பாடல் உருது மொழியில் ‘கஜல்’ எனும் வடிவ பாணியில் எழுதப்பட்டது. இந்தப் பாடல் 1904 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி ‘இத்தேஹாத்’ எனும் வார இதழில் வெளிவந்தது. பிறகு இக்கவிதை 1924 ஆம் ஆண்டு அவரது ‘பேங் – இ- தாரா ’ எனும் நூலில் இடம்பெற்றது. 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி புனே எரவாடா சிறையிலிருந்த போது நூற்றுக்கும் மேற்பட்ட முறை பாடியதாக அவரது சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பாடலுக்குப் பிறகு தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ‘ஜன கண மன அதி நாயகே ஜெய ஹீ ’ பாடல் இசைக்கப்பட்டது. இந்தப் பாடலுக்குப் பிறகு 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணி வரை இந்திய சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

தேசிய கீதமும் நிறைவும்

இந்திய அரசியலமைப்பு இயற்றும் பணி காலத்தில் தேசிய கீதம் நிறைவு பாடலாகவே அவையில் பாட்டப்பட்டு வந்தது. இந்திய அரசியலமைப்பு நிறைவுபெற்று இந்திய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருகையில் தாய் மண்ணை வணங்குவதாகப் பாடப்படும் வந்தே மாதரம் பாடலை தேசப் பாடலாகவும் ஏற்று இந்து – முஸ்லீம் மக்களின் நல்லிணக்கத்திற்கு மதிப்பளிக்கும் பொருட்டு தேசிய கீதமான ‘ஜன கண மன’ அரசு விழா பாடலாக ஏற்கப்பட்டது.

இன்றைய ஆளும் மத்திய அரசு வந்தே மாதரத்திற்கு கொடுத்திற்கும் முதன்மை முக்கியத்துவத்தால், ‘சாரே ஜஹான் சே அச்சா’ முற்றிலும் மறக்கடிக்கட்டு காங்கிரஸ் முதல் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்ட தேசிய கீதம் பாடல் இரண்டாம் இடத்திற்கும் திமுக அரசு காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்த தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கும் சென்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் உரிமை, மொழியின் மீதான மதிப்பு குறைகிறதோ என்கிற கேள்வி மக்களுடன் எழுந்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துக்குரிய இடம், மதிப்பு குறித்து  தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இப்படியான விவாதம் மூலமே மாநில உரிமை மற்றும் நலத்தினூடே தமிழ்நாட்டு மக்களிடம் எழுந்துவரும் குழப்பம் தணியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *