ரவிக்கு பிணை கிடைத்த பின்னணி!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை பிணையில் விடுவிக்கக் கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருசவிதான உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், தேசிய லொத்தர் சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று அதிகாரிகளை அந்த நிறுவனத்தின் சேவையில் ஈடுபடுத்தாமல், தனது தனிப்பட்ட ஊழியர்களாகப் பணியில் அமர்த்தியமை தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
அப்போதைய தேசிய லொத்தர் சபையின் தலைவியாக இருந்த ஷியாமிலா பெரேரா, இந்தச் குற்றச்சாட்டு தொடர்பாகக் கடந்த ஜூன் 30 ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இரு சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.
அத்துடன் கடந்த 29 ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் பத்தரமுல்லையில் உள்ள ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்குச் சென்ற போதிலும், அவர் அன்றைய தினம் வீட்டில் இருக்கவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவி ஷியாமிலா பெரேரா அன்றைய தினம் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு வருவதும் அவதானிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டார்.
பின்னர், சந்தேகநபரான ரவி கருணாநாயக்க கொழும்பு இலக்கம் 02 மேலதிக நீதவான் லியான் வருசவிதான முன்னிலையில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார்.
![]()