இலங்கை

இலங்கைக்குள் ஒருபோதும் எமக்குத் தீர்வு கிடைக்காது;  சர்வதேசத்திடம் கையேந்துகிறோம்; சிறீதரன் எம்.பி.

இலங்கைக்குள்ளே வந்த நல்லிணக்க ஆணைக்குழுவோ அல்லது ஜனாதிபதி ஆணைக்குழுவோ எங்களுக்கு நீதியைத் தராது. அதேபோல, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் எங்களுக்கான நீியைப் பெற்றுத் தராது. அதனால் தான் நாங்கள் சர்வதேச சமூகத்திடம் கையேந்தியுள்ளோம் என்பதை இந்த அம்மாக்கள் நீண்டநெடுங் காலமாகச் சொல்லுகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நீதிக்கான நீள் பயணம் என்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தன்னுடைய பிள்ளையை, தன்னுடைய கணவனை, தன்னுடைய தாயை, தந்தையை கண்கண்ட சாட்சியமாக ஒப்படைத்தவர்கள் என்றும் தன்னுடைய கணவன் வருவான், என்னுடைய பிள்ளைகள் வருவார்கள், என்னுடைய தாய் தந்தையர்கள் வருவார்கள் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்ற மிகப்பெரிய நிலவரம் செறிந்த நாளிலே தான் கூடுகிறோம்.

யுத்தம் முடிந்த பிறகு முள்ளிவாய்க்காலுக்கு வருகை தந்த அப்போதைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மா கூட, “உங்களுக்கான நீதி கிடைக்கும்” என்ற மனதார வாழ்த்திச் சொல்லியிருந்தார்.

நாங்கள் யுத்தம் நடக்கின்ற பொழுது கிளிநொச்சியிலும், முல்லைத் தீவிலும் ஐக்கிய நாடுகள் சபையினுடைய அலுவலகங்கள் இருந்தன.

அந்த அலுவலகங்களுக்கு முன்னால் மக்கள் கைகளை ஏந்தி அழுதார்கள், கண்ணீர் விட்டார்கள். “நீங்கள் எங்களை விட்டு போக வேண்டாம், எங்களோடு இருங்கள்” என்று அந்த இறுதி யுத்தத்தின் 2008, 2009-களிலே தமிழ் மக்கள் வாஞ்சையோடு சர்வதேச சமூகத்தின் கால்களை கெஞ்சி கேட்டார்கள்.

ஆனால், எந்தவொரு அமைப்புகளும் எங்கள் மண்ணில் நிற்க முடியவில்லை. இலங்கை அரசு விடவில்லை. சர்வதேச சமூகமும் எங்களை கைவிட்டுப் போனது. அதனால் இன்று நாங்கள் பலரை இழந்திருக்கிறோம்.

இறுதி யுத்தத்திலே, 1,46,000-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயும், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள் என்பதை மறைந்த மன்னாரின் ஆயர் ராயப்பு ஜோசப் ஆதாரங்களோடு, புள்ளிவிபரங்களோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திற்கும், ஏனையவர்களுக்கும், நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் முன்னால் அறிக்கைகளை சமர்ப்பித்தார்.

இதுவரை யாரும் அப்படி ஒரு அறிக்கையைக் கொடுத்ததில்லை. அரசியல் கட்சிகள் சார்ந்தும் நடக்கவில்லை.

2007, 2008ம் ஆண்டுகளிலே வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் இருந்த மக்களுடைய தொகை எவ்வளவு, யுத்தம் முடிந்த 2010க்கு பிற்பாடு மீள்குடியேறி இருக்கிற மக்களுடைய தொகை எவ்வளவு, ஆகவே இந்த இடைப்பட்ட பகுதியில் இருந்த பலபேர் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள், குறிப்பாக யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கும், வவுனியாவினுடைய வடக்கு பகுதியும், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் பூரணமாகவும் அந்த மக்கள் இடம்பெயர்ந்து மெல்ல மெல்ல கலைக்கப்பட்டார்கள். அவர்கள் செட்டிக்குளத்திலும், வவுனியாவின் பல முகாம்களிலும் அடைக்கப்பட்டு தான் மீண்டும் குடியேறினார்கள்.

இதனை விட சகோதரி இசைப்பிரியா உட்பட பல போராளிகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக்கப்பட்ட நிலையில், உடைகள் கலைந்த நிலையில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, குழிகள் வெட்டப்பட்டு வைத்த படங்கள், வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன.

சனல் 4 தொலைக்காட்சியின் ஊடாக இந்த விடயத்தை பல தடவைகள் வெளிப்படுத்தியிருக்கிறது. மிகப்பெரிய ஆதாரங்கள் உண்டு.

இவ்வாறான பல ஆதாரங்களை வைத்துக்கொண்டும் உலகத்திலே நீதி கிடைக்காத ஒரு இனமாக நாங்கள் இருக்கிறோம் என்றால், அந்த நீதிக்காக போராடுகின்ற இனமாக இந்த அம்மாக்கள், இந்த அப்பாக்கள் சாட்சியாக இருக்கிறார்கள்.

இதனால் தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? ஏன் சர்வதேச நீதி வேண்டும்? 2010ம் ஆண்டுக்கு பிற்பாடு மகிந்த ராஜபக்ச தலைமையில் இருந்த இலங்கை அரசு, எல்.எல்.ஆர்.சி ஆணைக்குழு ஊடாக நாங்கள் உண்மையைக் கண்டறிகிறோம் என்றனர்.

அதற்காக சாட்சியமளிக்க மக்கள் சென்ற பொழுது, இன்னுமொரு இடத்திலே இலங்கையினுடைய புலனாய்வுத் துறையினர் கொட்டில்களை அமைத்து அங்கே போகவிடாமல் மக்களைத் திசை திருப்பினார்கள். மக்களை அச்சுறுத்தினார்கள். மக்களைச் சாட்சியமளிக்க விடாமல் தடுத்தார்கள். அதனால் மக்கள் வெளிப்படையாக எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலையில் பூரணமான ஒரு சாட்சியங்களை அவர்களால் வழங்க முடியவில்லை.

இந்த கொலைகளுக்குக் காரணமாக இருந்த அதே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னால் மக்கள் சாட்சியமளிக்கப் போகின்ற பொழுது, அங்கே இருந்தவர்கள் ஆடு தரவா, கோழி தரவா அல்லது எவ்வளவு காசு தருவது உன்னுடைய பிள்ளைக்கு என்று மிக நையாண்டியாக, நக்கலாகக் கேட்ட காலங்கள் இருந்தது.

ஆகவே, இந்த இலங்கைக்குள்ளே வந்த நல்லிணக்க ஆணைக்குழுவோ அல்லது ஜனாதிபதி ஆணைக்குழுவோ எங்களுக்கு நீதியைத் தராது.

அதேபோல, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் எங்களுக்கான நீியைப் பெற்றுத் தராது. அதனால் தான் நாங்கள் சர்வதேச சமூகத்திடம் கையேந்தியுள்ளோம் என்பதை இந்த அம்மாக்கள் நீண்டநெடுங் காலமாகச் சொல்லுகிறார்கள்.

2017-ஆம் ஆண்டு மாசி மாதம் 20ம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால் அம்மாக்களுடைய தொடர் போராட்டம் தொடங்கியது. வருகின்ற மாசி மாதம் 20ம் திகதி வந்தால் 10 ஆண்டுகளை அந்த தொடர் போராட்டம் நெருங்கி வருகிறது.

இந்த இடைப்பட்ட இந்த ஆண்டுகளில் கிட்டத்தட்ட 260க்கும் மேற்பட்ட தாய்மார்கள், தந்தையர்கள் போராடித் தங்களுடைய பிள்ளைகள் வருவார்கள் என்ற கனவோடு தங்களுடைய உயிர்களை நீத்திருக்கிறார்கள்.

இதுதான் சர்வதேச சமூகத்திடம் நாங்கள் வைக்கின்ற கோரிக்கை. எவ்வளவு காலமும் இவர்களுக்கு நீதி கொடுக்காத அரசாங்கம், எப்போது இந்த நீதியை வழங்கப் போகிறார்கள்?

யுத்தம் நடக்கும் பொழுது சர்வதேச சமூகத்தினுடைய நிறுவனங்கள் எங்களை விட்டுப் போனது.

யுத்தம் நடக்கும் பொழுது இன்றைய அனுர குமார திஸாநாயக்க தலைமையிலே இருக்கிற ஜேவிபியினர் தமிழர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இராணுவத்திற்கு பல ஆட்களைச் சேர்த்துக் கொடுத்தார்கள், 40,000 சிங்கள இளைஞர்களைக் கொடுத்தார்கள்.

ஆகவே, இவர்கள் யார் மாறினாலும் சிங்கள அரச இயந்திரம் அப்படியே இயங்கிக் கொண்டே இருக்கும். அந்த பயங்கரவாத இயக்கத்தினுடைய இயக்குநர்கள் தான் மாறியிருக்கிறார்களே தவிர, அதனுடைய இயங்கு நிலை மாறாது.

அதனால் தான் இன்று நம்முடைய மக்களும் நாங்களும் கேட்டது, எங்களுக்கான நீதி என்பது ஒரு சர்வதேசத்தினுடைய மிகப்பெரிய பிரசன்னம் இல்லாமல் அது நடைபெறப் போவதில்லை, நீதி கிடைக்கப் போவதில்லை.

சர்வதேச சமூகத்திடம், பன்னாட்டு சமூகத்திடம் நாங்கள் கையேந்திக் கேட்கிறோம், நீதி கிடைக்க உங்கள் கதவுகளைத் திறவுங்கள். நியாயமான விசாரணையை மேற்கொள்ளுங்கள், உண்மையைக் கண்டறியுங்கள், நீதியை நிலைநாட்டுங்கள், பொறுப்புக்கூறுகின்ற அந்த உண்மையைக் கொண்டுவாருங்கள்.

யார் எங்கள் மீது குற்றம் புரிந்தார்களோ, யார் எங்களை கொலை செய்தார்களோ, யார் எங்களை காணாமல் ஆக்கினார்களோ, அவர்கள் தான் இன்று காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் என்கிற நிறுவனத்தின் ஊடாக நீதிபதிகளாக மாறியிருக்கிறார்கள்.

யார் குற்றம் செய்தவனோ, அவன் நீதிவானாக மாறியிருக்கிறான். குற்றம் செய்தவன் சட்டத்தரணியாக மாறியிருக்கிறான். ஆகவே நீதி எவ்வாறு வரும்?

ஆகவேதான், தொடர்ந்து நம்முடைய மக்கள் கேட்பது, தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட தந்தைமார், தாய்மார், சகோதரர்கள் கேட்பது, எங்களுக்கான சர்வதேச அழுத்தம், சர்வதேச நீதி வேண்டும் என்பதுதான்.

2009-ஆம் ஆண்டிலும், 2011-ஆம் ஆண்டிலும் முதன்முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திலே பிரேரணையை கொண்டுவருகின்ற பொழுது அமெரிக்கா மிகப்பெரிய அளவிலே அதற்கான உதவியைச் செய்திருந்தது.

தொடர்ந்து இன்றுவரை கூட அந்தப் பிரேரணை தோற்றுப்போகாமல், அந்தப் பிரேரணையின் ஊடான ஒரு நீதியைப் பெறுவதற்காக அமெரிக்க நாட்டினுடைய கரிசனையையும், பங்கையும் நாங்கள் நன்றியோடு இந்த இடத்திலே பார்க்கிறோம்.

அதேபோல அண்மையிலே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பங்களிப்பு, இந்தியாவினுடைய பங்களிப்பு இவற்றை நாங்கள் எப்போதும் நன்றியோடு பார்க்கிறோம். இப்பொழுது கூட பிரித்தானியா, கனடா, மொண்டினீக்ரோ, மலாவி உட்பட ஐந்து இணைத் தலைமை நாடுகள் தொடர்ந்து இந்த விடயத்தைக் கையாளுகின்றன.

உலகத்திலே பல நாடுகளில் யுத்தக் குற்றங்கள் நடந்திருக்கிறது, போர்க் குற்றங்கள் நடந்திருக்கிறது, மனிதப் பேரழிவுகள் நடந்திருக்கிறது. ஆனால், எங்களிடம் நடந்ததைக் கேட்பதற்கு நாதி இல்லாத ஒரு இனமாக நாங்கள் இருக்கிறோம் என்பதுதான் மிகப்பெரிய வேதனை.

எமக்கு நீதி வேண்டும் என்றால் சர்வதேசத்தினுடைய அழுத்தமும், சர்வதேசத்தினுடைய நேரடி மேற்பார்வையும் உங்களுடைய தலைமையிலே ஒரு விசாரணை இந்த மண்ணில் உருவாக்கப்பட வேண்டும்.

பலர் குடும்பத்தோடு காணாமல் போயிருக்கிறார்கள். இவ்வாறான மிகப்பெரிய சோகங்களோடும், மனித அவலங்களோடும் வாழ்நாள் பூராக தன்னுடைய கவலையோடும் வாழுகின்ற அம்மாக்களுடைய, அப்பாக்களுடைய கண்ணீருக்கு ஒரு விடை கிடைக்க வேண்டும் என்றால், அந்த விடை சர்வதேசத்தின் கண்கள் திறக்கப்பட வேண்டும். பன்னாட்டுச் சமூகத்தினுடைய இதயங்கள் எங்களைப் பற்றி பேச வேண்டும்.

இப்போதும் கூட சில தகவல்களை அறிவது எளிதல்ல. மனித உரிமைகள் ஆணையத்திலே நடைபெற்றாலும் கூட அந்தத் தகவல்களைத் தைரியத்தோடு, துணிவோடு முன்னுக்குச் சென்று கொடுப்பதற்கு இன்னும் மக்களுக்கு அந்தத் தைரியம் இல்லை.

எங்கேயும் நான் பேசுகின்ற பொழுது கூட இந்த மண்டபத்தில் எத்தனை இலங்கையினுடைய உளவாளிகள் இருப்பார்கள் என்ற பயம் எனக்கு இல்லை என்றாலும், இங்கு இருக்கிற ஒவ்வொரு மக்களுக்குள்ளும் உண்டு.

ஒரு கூட்டம் கூட முடியாதவர்களாக, தங்களுடைய உரிமைகளைப் பேச முடியாதவர்களாக, தாங்கள் நிமிர்ந்து நின்று தங்களுடைய உரிமைக்காகப் போராட முடியாதவர்களாக இந்த மக்கள் இருக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய கண்ணீர்க் கதை – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button